சனி, 9 மே, 2020

சி.ரங்கராஜன் தலைமையில் குழு: எடப்பாடியின் பொருளாதார அரசியல்!

மின்னம்பலம் : சி.ரங்கராஜன் தலைமையில் குழு: எடப்பாடியின் பொருளாதார அரசியல்!கொரோனா ஊரடங்குக்குப் பிறகான தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்துவதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், முன்னள் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவருமான சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. இந்த குழு நியமனம் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியாவின் உற்பத்தித் திறன் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதுவும் இந்தியாவின் சிறுகுறு நடுத்தரத் தொழில்களில் கணிசமானவை தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் விவசாயம், தொழில், சுற்றுலா, கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவருவதற்கும், ஏழைகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும் என்று இன்று (மே 9) தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான துறைகளின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் மாநில அரசு எடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள், மாநிலத்தின் மொத்த உற்பத்தி விகிதத்தை அதிகரித்தல் மற்றும் வருவாய் ஆதாரங்களை வகைப்படுத்துதல் மற்றும் செலவினங்களுக்கு மீண்டும் முன்னுரிமை அளித்தல் ஆகியவற்றை இந்த குழு மதிப்பீடு செய்யும் என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பொருளாதார நிலைமை குறித்து மத்திய அரசிடம் எடுத்துச் செல்வதற்கான முக்கியப் பிரச்சினைகளையும் இந்தக் குழு ஆராயும்.
தமிழக அரசு அமைத்துள்ள இந்த பொருளாதார வளர்ச்சி ஆய்வுக் குழுவின் தலைவரான பொருளாதார வல்லுநர் சி.ரங்கராஜன் தற்போது மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் தலைவராக இருக்கிறார். இதற்கு முன்பு 2009 முதல் 2014 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவராக செயல்பட்டார். 2008 உலகப் பொருளாதார மந்த நிலையில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு இவரது பங்கு குறிப்பிடத் தக்கது
24 பேர் கொண்ட இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாநில நிதித் துறைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இருப்பார். குழுவின் உறுப்பினர்களில் முன்னாள் தலைமைச் செயலாளர் என் நாராயணன், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் வெள்ளையன், இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், டிவிஎஸ் மோட்டார்ஸ் தலைவர் வேணு சீனிவாசன், இந்தியன் வங்கி எம்.டி பத்மஜா, ஈக்விடாஸ் வங்கியின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பி.என். வாசுதேவன்; ஐ.ஐ.டி சென்னையைச் சேர்ந்த எம்.சுரேஷ் பாபு, யுனிசெஃப் சென்னையை சேர்ந்த பினாக்கி சக்ரவர்த்தி, யுனிசெப், மற்றும் நிதி, தொழில், வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்.எஸ்.எம்.இ உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு துறைகளின் மூத்த அதிகாரிகள் குறிப்பிடத் தக்கவர்கள். இந்த குழு தனது இறுதி அறிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும், மேலும் இடைக்காலத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கும்.
மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரங்கராஜன் போன்றவர்களின் பொருளாதார ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பொருளாதார வட்டாரங்களில் கருத்து நிலவுகிறது. 5 ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற மோடி அரசின் முழக்கத்தை, ‘இப்போது இது அவுட் ஆஃப் கொஸ்டின்’ என்று விமர்சித்தவர் ரங்கராஜன். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மாநில அரசின் பொருளாதாரத்துக்கு மத்திய அரசு போதுமான உதவிகளைச் செய்யாத நிலையில் சி.ரங்கராஜன் தலைமையிலான குழுவை அமைத்ததன் மூலம் மத்திய அரசுக்கு தமிழக அரசு பொருளாதார ரீதியாக மட்டுமல்ல... அரசியல் ரீதியான ஒரு செய்தியையும் சொல்லியிருப்பதாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் முணுமுணுக்கின்றனர்.
-ஆரா

கருத்துகள் இல்லை: