வெள்ளி, 8 மே, 2020

தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா; சென்னையில் 399 பேருக்கு தொற்று; பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்தது

tamil-nadu-coronation-coroners-today-people-infected-in-chennai-the-casualty-figure.
hindutamil.in  : தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6009 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொற்று அனைத்தும் கோயம்பேடு சந்தை தொடர்புடையவை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் 50 சதவீதத்துக்கும் மேல் அதாவது 399 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 2,644 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 3043 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவ சோதனையில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு காலத்தில் வீட்டில் தனிமையில் இருப்பது குறித்து அரசு வலியுறுத்தி வந்தபோதும் பலரும் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தனி மனித இடைவெளி, முகக்கவசம் அணியாமல் இருப்பது என இருப்பதால் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது என சென்னை கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றும் கரோனா பாதிப்பு உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து வருகிறது.
சென்னையும் தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிக அளவு எண்ணிக்கையுடன் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 17,974 பேர், குஜராத்தில் 7,012 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 6,009 என்ற எண்ணிக்கையில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. இன்று தமிழகத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 600 ஆகும். அதைச் சேர்த்து தமிழகத்தில் 6,009 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 399 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மீதியுள்ள 17 மாவட்டங்களில் 201 பேருக்குத் தொற்று உள்ளது. 19 மாவட்டங்களில் தொற்று இன்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் இரட்டை இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது. * தற்போது 36 அரசு ஆய்வகங்கள், 16 தனியார் ஆய்வகங்கள் என 52 ஆய்வகங்கள் உள்ளன இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:
* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக, சிகிச்சையில் உள்ளவர்கள் 4,361பேர்.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,16,416.
* மாதிரி எடுக்கப்பட்ட தனி நபர்களின் எண்ணிக்கை 2,06,470.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 13,980.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 6,009 .
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 600.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 405 பேர். பெண்கள் 195 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 58 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,605 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 3 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக உள்ளது.
தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 399 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் 2,644 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 3,043 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் பெருநகரங்களில் சென்னை, இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் எண்ணிக்கைக்கு இணையாகச் செல்கிறது.
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக கடலூரில் தொற்று எண்ணிக்கையில் 34 அதிகரித்து 390 ஆக உள்ளது. அடுத்து திருவள்ளூரில் இன்று 7 அதிகரித்து 270 என்ற எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தில் உள்ளது. அடுத்து அரியலூரில் இன்று எவ்வித தொற்று எண்ணிக்கையும் இல்லாமல் 246 ஆக உள்ளது.
அடுத்து விழுப்புரத்தில் தொற்று எண்ணிக்கை 21 அதிகரித்து 226 ஆக உள்ளது. செங்கல்பட்டில் தொற்று எண்ணிக்கை 26 அதிகரித்து 184 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. கோவையில் 146, திருப்பூர் 114 என தொற்று எண்ணிக்கை உள்ளது. மதுரையில் தொற்று எண்ணிக்கை 2 அதிகரித்து 113 ஆக உள்ளது. திண்டுக்கல் 107 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும்.
19 மாவட்டங்களில் மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் தொற்று இல்லை.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 303 பேர். இதில் ஆண் குழந்தைகள் 161 பேர். பெண் குழந்தைகள் 142 பேர்.
13 வயது முதல் 60 வயது உள்ளவர்கள் 5,282பேர். இதில் ஆண்கள் 3,704 பேர். பெண்கள் 1,576 பேர். மூன்றாம் பாலினத்தவர் 2 பேர்.
60 வயதுக்கு மேற்பட்டோர் 424 பேர். இதில் ஆண்கள் 270 பேர். பெண்கள் 154 பேர்.
15க்கும் மேற்பட்டோருக்கு தொற்றுள்ள, நான்கு நாட்களில் எண்ணிக்கை இரட்டிப்பாகும், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 33.
15 நபர்களுக்குக் கீழ் தொற்று எண்ணிக்கை கொண்ட ஆரஞ்சு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 4.
கடந்த 28 நாட்களாக ஒரு தொற்றும் இல்லாத பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 பேருக்குத் தொற்று ஏற்பட்டதால் பச்சை மண்டலத்தை இழந்தது. இன்று மேலும் 2 பேருக்கு அம்மாவட்டத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: