செவ்வாய், 5 மே, 2020

துரைமுருகன் : நெடுஞ்சாலை துறை டெண்டர் ஊழல் .. ஜெயகுமார் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா?

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா? துரைமுருகன்மின்னம்பலம் : நெடுஞ்சாலை டெண்டர் விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடத் தயாரா என ஜெயக்குமாருக்கு, துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர் துரை ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “கொரானோ நோய்த் தொற்றில் மாநிலமே ஏன், உலகமே கலங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெண்டர் விடுவதில் ரொம்ப பிஸியாக இருக்கிறார்” என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1,165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும் விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து நேற்று (மே 4) அறிக்கை வெளியிட்டுள்ள மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலின் குற்றச்சாட்டை மறுத்தார். நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் ஊழல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுவது வேடிக்கையாக உள்ளது. இந்தியாவிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது திமுக ஆட்சிதான் என்பதை நாடே அறியும். திமுக தலைவர் ஊழல் தொடர்பான அறிக்கை விடுவது சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது என்றும் சாடியிருந்தார்.
இதுபற்றி அறிக்கை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், ஊரடங்கில் டெண்டர் விட்ட துறை அமைச்சருக்கே இல்லாத கவலை ஏன் ஜெயக்குமாருக்கு வந்தது, முதலமைச்சர் துறையின் ஊழலை மறுப்பதில் இவருக்கு என்ன சொந்த லாபம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கமிஷன் - கரெப்ஷன் - கலெக்‌ஷன் என்ற ஊழல் தந்திரத்தின் அடிப்படையில் இயங்கும் அதிமுக ஆட்சிக்கும் அதில் அமைச்சராக உள்ள ஜெயக்குமாருக்கும் நல்லாட்சி தந்த திமுக பற்றி பேசுவதற்கு அருகதையில்லை என்று குறிப்பிட்ட துரைமுருகன், “அண்ணன் தம்பி அத்தனை பேருக்கும் கான்டிராக்ட் கொடுக்கும் சிண்டிகேட் அமைத்துள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் இருப்பது இந்த ஆட்சியில்தான். இந்தியாவிலேயே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட ஒரே முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிசாமிதான். ஏன், ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்டு - சிறைத் தண்டனை பெற்ற முதலமைச்சரைக் கொண்ட ஒரே ஆட்சியும் அதிமுக ஆட்சிதான்” என்று கடுமையாக சாடினார்.
தொடர்ந்து, “தஞ்சாவூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு டெண்டர் முறைகேடுகளைப் பொறுத்தமட்டில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் அனைத்து முறைகேடுகளும் தெளிவாக உள்ளது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் உள்ள தகவல்களையே ஓர் அமைச்சர் மறுக்கிறார் என்றால் ஊழல் ஆணவமும், அமைச்சர் என்ற அதிகார வெறியும் தலைக்கேறிவிட்டது என்றுதான் அர்த்தம்” என்று சாடியுள்ளார் துரைமுருகன்.
மேலும், “அதிமுக ஆட்சியில் விடப்பட்ட பராமரிப்பு டெண்டர்கள் இந்த தஞ்சாவூர் டெண்டர் எல்லாவற்றையும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்துங்கள். நெடுஞ்சாலைத் துறை டெண்டர்கள் எதிலும் முறைகேடுகள் நடக்கவில்லை என்று அறிக்கை விடுவது போல், சிபிஐ முன்பும் விசாரணைக்கு ஆஜராகி பதில் சொல்லலாம். அந்தத் திராணியும் தெம்பும் அமைச்சர் திரு.ஜெயக்குமாருக்கு இருக்கிறதா?” என்று சவாலும் விடுத்துள்ளார்.
எழில்

கருத்துகள் இல்லை: