வியாழன், 9 ஜனவரி, 2020

கன்னியாகுமரி: போலீஸைச் சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்!

மின்னம்பலம் : கன்னியாகுமரியில் சோதனைச் சாவடி அருகே பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரியை மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளது. போலீஸார் ஒருவரைச் சுட்டுக்கொன்ற இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
கன்னியாகுமரி: போலீஸைச் சுட்டுக்கொன்ற மர்ம கும்பல்!கன்னியாகுமரி கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் சோதனைச் சாவடி உள்ளது. படந்தாலுமூடு என்ற பகுதியில் அமைந்துள்ள இந்தச் சோதனைச் சாவடியில் போலீஸார் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சக போலீஸார் சோதனைச் சாவடியின் உள்ளே இருந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் அங்கு வந்த வாகனங்களைச் சோதனை செய்துள்ளார்.
அப்போது திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த ஸ்கார்ப்பியோ காரையும் நிறுத்தி சோதனை நடத்தியுள்ளார். அதில் வந்த மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மூன்று தடவை சுட்டதில் வில்சன் தலை, மார்பு, கால் பகுதியில் குண்டு பாய்ந்து மயங்கி விழுந்துள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு, பிற காவலர்கள் ஓடி வருவதற்குள் காரில் இருந்த அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. இதனிடையே வில்சனை மீட்ட காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் எனினும் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரியில் பதற்றத்தை ஏற்படுத்திய இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் எது என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து பல்வேறு கோணங்களிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸார் ஒருவரையே சுட்டுக்கொன்ற மர்ம கும்பல் எது, காரில் என்ன கடத்தி வந்தார்கள் எனப் பல்வேறு கோணங்களிலும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவ நடந்த இடத்திலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த மர்ம கும்பல் வாகனம் குறித்து அனைத்து தணிக்கைச் சாவடிகள் மற்றும் காவல் நிலையங்களுக்குத் தகவல் தெரிவித்துத் தேடி வருகின்றனர்.
இதனிடையே அந்த கார் எண்ணை வைத்து விசாரித்ததில் அது வெங்கடாசலம் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. இது ஒட்டன்சத்திரம் ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணாக இருக்கும் நிலையில் அந்த எண் மாருதி சுசூகி வாகனம் என்று பதிவாகியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே பொய்யான நம்பர் ப்ளேட்டை பயன்படுத்தி இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: