புதன், 8 ஜனவரி, 2020

BBC :அமெரிக்க விமானத்தளங்கள் மீது இரான் தாக்குதல்


இராக்கில் குறைந்தது இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் மீது டஜனுக்கும் மேலான கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இரான் நாட்டு அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.
அல்-அசாத் விமானதளத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
''இராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடந்ததாக வரும் செய்திகள் குறித்து எங்களுக்கு தெரியும். இது குறித்த தகவல்கள் அதிபர் டிரம்புக்கு விவரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வரும் அதிபர், நாட்டின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்'' என்று வெள்ளை மாளிகையின் பெண் செய்தி தொடர்பாளரான ஸ்டாபானி கிரிஷம் ஓர் அறிக்கையில் இந்த தாக்குதல் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று டிரோன் விமான தாக்குதலில் இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடிதான் இந்த தாக்குதல் என்று இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவு தெரிவித்துள்ளது.
''அமெரிக்காவின் பயங்கரவாத ராணுவத்துக்கு தங்களின் படைத்தளங்களை தந்துள்ள அதன் நேச நாடுகள் அனைத்தையும் நாங்கள் எச்சரிக்கிறோம். இரான் மீதான வலிய தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ஆரம்ப புள்ளியாக அமையும் எந்த ஒரு பிராந்தியத்தின் மீதும் குறி வைக்கப்படும்'' என்று இரானின் அரசு செய்தி முகமையான ஐஆர்என்ஏ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. அல்-அசாத் தளத்தின் மீது தாக்குதல் நடந்ததற்கு சற்று நேரத்திலேயே இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க விமானத்தளம் மீது ஷெல் குண்டு தாக்குதல் நடத்துள்ளதாக அல் மாயாதீன் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: