செவ்வாய், 7 ஜனவரி, 2020

மலேசியாவில் தர்பார் பட ரிலீஸுக்குத் தடை!

தர்பார் பட ரிலீஸுக்குத் தடை!மின்னம்பலம் : ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸாகவுள்ள தர்பார் திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் தர்பார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தர்பார் திரைப்படம் ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி மலேசிய நிறுவனம் ஒன்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
டிஎம்ஒய் கிரியேஷன்ஸ் என்னும் மலேசிய நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், “2.0 திரைப்படத்திற்காக லைகா நிறுவனம் எங்களிடம் இருந்து ஆண்டுக்கு 30 சதவீத வட்டியில் 12 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றது. அந்தத் தொகையின் வட்டியுடன் சேர்த்து 23 கோடியே 70 லட்ச ரூபாயைத் எங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டியுள்ளது. எனவே, கடன் தொகையைத் திருப்பி தரும் வரை தர்பார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று லைகா நிறுவனத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. தொடர்ந்து கடந்த ஜனவரி 3-ஆம் தேதி லைகா நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் ‘மலேசிய நிறுவனத்திற்கு நாங்கள் கடன் தொகை எதுவும் திருப்பித் தர வேண்டியதில்லை. எங்கள் நிறுவனம் பெற்ற கடனுக்குப் பதிலாக காலா படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை அவர்களுக்கு அளித்திருந்தோம். மனுதாரர் தான் எங்கள் நிறுவனத்திற்கு 1 கோடியே 45 லட்சம் அளிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தது. அதற்கு மலேசிய நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கடன் தொகைக்குப் பதிலாக காலா திரைப்படத்தின் சிங்கப்பூர் உரிமையை எங்களுக்கு அளித்துள்ளதாக லைகா தரப்பு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. ஆனால், அது போன்ற எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை’ என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடால் வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் தர்பார் படத்துக்கு தடை கோரி துவங்கப்பட்ட வழக்கில் நீதிபதி இன்று(ஜனவரி 7) உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ‘4 கோடியே 90 ஆயிரம் ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்யும் வரை திரைப்படத்தை மலேஷியாவில் வெளியிடக்கூடாது’ என்று கூறி தர்பார் படத்திற்கு மலேசியாவில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: