வெள்ளி, 10 ஜனவரி, 2020

துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து: எஸ்.எஸ்.ஐ திட்டமிட்டு கொலையா?

துப்பாக்கிச் சூடு, கத்திக்குத்து: எஸ்.எஸ்.ஐ திட்டமிட்டு கொலையா?மின்னம்பலம் : களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் பணியிலிருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தமிழக காவல் துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து டிஜிபி திரிபாதி நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதனிடையே வில்சனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு 21 குண்டுகள் முழங்க நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
வில்சன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் பிரேதப் பரிசோதனை முடிவில் அவர் கத்தியால் தாக்கப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

வின்சன் உடலில் மார்பு, வயிறு, தொடை என மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில், இடுப்புப்பகுதியில் ஆழமான கத்திக்குத்து காயம் இருந்ததாகவும், தொடை கை கால் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் கிழிக்கப்பட்டு இருந்ததும் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே வில்சன் எதற்காகக் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியாமல் போலீசார் திணறி வரும் நிலையில் தற்போது கத்தியால் தாக்கப்பட்டிருப்பது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனிடையே கொலையாளிகள் தப்பியோடிய சிசிடிவி காட்சிகள் மூலம் புகைப்படம் வெளியிடப்பட்ட தவுபீக், ஷமீம் ஆகியோரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவர்கள் யார் என்று விசாரித்ததில், இருவரில் ஒருவரது வீட்டில் அண்மையில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது, அந்த நபர் கொலை வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி கொலை வழக்கு ஒன்றில் கடந்த வாரம் பெங்களூரு க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட மூவரில், வில்சன் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், மற்றொருவர் இவரது கூட்டாளி என்றும் கூறப்படுகிறது.
இதனால் அவரது வீட்டுக்குச் சென்ற போலீசார் எச்சரித்து வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்தே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் விசாரணைக்கு பிறகே வில்சன் கொலை தொடர்பான முழுமையான தகவல்கள் தெரியவரும் என்று டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.
வில்சன் கொலை வழக்கைக் கேரள போலீசாரும் கையில் எடுத்துள்ள நிலையில், அம்மாநில டிஜிபி லோக்நாத், குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தால் இருவரது தலைக்கு ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: