சனி, 11 ஜனவரி, 2020

குடியுரிமை சட்டம் நடைமுறைக்கு வந்தது


zeenews : புது டெல்லி: பாக்கிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் சட்டம் (Citizenship Amendment Act) நாட்டில் ஜனவரி 10 முதல் அமலுக்கு வந்தது என்று அரசிதழ் அறிவிப்பில் மத்திய உள்துறை அமைச்சகம் (Union Home Ministry) தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 (2019 இன் 47) இன் பிரிவு 1 இன் துணைப்பிரிவு (2) ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், இதன் மூலம் 2020 ஜனவரி 10 ஆம் தேதியை மத்திய அரசு நியமிக்கிறது. அன்று முதல் அந்தச் சட்டத்தின் விதிகள் நடைமுறைக்கு வரும்” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 11 அன்று குடியுரிமை திருத்தம் சட்டம் பாராளுமன்றத்தால் (Parliament) நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் பாரபட்சமானது மற்றும் அரசியலமைப்பின் 14 வது பிரிவை மீறுவதாக உள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், பிரதமர் மோடியும் (PM Modi) உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் (Amit Shah) பல சந்தர்ப்பங்களில், இந்த சட்டம் மேலே குறிப்பிட்ட மூன்று நாடுகளில் மத துன்புறுத்தல்களை எதிர்கொண்ட ஆறு சமூகங்களுக்கு மட்டுமே அடைக்கலம் அளிக்கிறது. இந்த சட்டத்தால் முஸ்லீம்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். இந்தச் சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் கடுமையான போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் இந்தச் சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று தெளிவுபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்று நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மைக் குழுக்கள் அங்கு மதத் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும்போது இந்தியாவுக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசாங்கம் கூறி வருகிறது. அதேநேரத்தில் உள்துறை அமைச்சகம் இந்தச் சட்டத்திற்கான விதிகளை இன்னும் வடிவமைக்கவில்லை.

கருத்துகள் இல்லை: