செவ்வாய், 7 ஜனவரி, 2020

குஜராத் அரசு மருத்துவமனைகளில் 522 குழந்தைகள் உயிரிழப்பு.. – அதிர்ச்சி தகவல்..!

sathiyam.tv : ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத்திலும் 2 அரசு மருத்துவமனைகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 522 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது./>
ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறை, தொற்றுநோய் உள்ளிட்ட காரணங்களினால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானது, நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
தற்போது, இதே மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள 2 அரசு மருத்துவனைகளிலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் றந்ததாக நேற்று அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்நிலையில், குஜராத்தின் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் 269 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தீனதயாள் மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் மனீஷ் மேதா கூறுகையில், “கடந்தாண்டு டிசம்பரில் 111, நவம்பரில் 71, அக்டோபரில் 87 என கடந்த 3 மாதங்களில் மொத்தம் 269 குழந்தைகள் பலியாகி உள்ளனர். எடை குறைவு, அதிகளவிலான தீவிர நோயாளிகள் பரிந்துரைக்கப்படுதல் உள்ளிட்ட காரணங்களினால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

இதே போன்று, அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று மாதங்களில் 253 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் ரதோட் பேசிய போது, “கடந்தாண்டு டிசம்பரில் 85, நவம்பரில் 74, அக்டோபரில் 94 என மொத்தம் 253 குழந்தைகள் பலியாகி உள்ளன.
கடந்த 2018ம் ஆண்டை காட்டிலும், கடந்தாண்டு குழந்தைகளின் இறப்பு விகிதம் 18 சதவீதம் குறைந்துள்ளது,” என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன் டிவிட்டர் பதிவில், ”பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தங்கள் சொந்த மாநிலத்தில் நடந்த சம்பவம் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள்? அவர்கள் தங்கள் கட்சி முதல்வரை மாற்றுவார்களா?” என்று கேட்டுள்ளது.
* மேலும் 2 அரசு மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி
ராஜஸ்தானில் ஜோத்பூரில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளிலும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த மாதம் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், கோடா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தொற்று நோய் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்தன. இதனால், ராஜஸ்தான் அரசு கடும் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
இந்நிலையில், இதே மாநிலத்தில் ஜோத்பூரில் உள்ள உமைத் மற்றும் எம்டிஎம் மருத்துவமனைகளில் எஸ்.என்.மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தோர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:
ஜோத்பூரில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளிலும் கடந்த 2019ம் ஆண்டு 47,815 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 754 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மாதத்தில் மட்டும் இங்கு 4,689 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
3002 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 142 பேர் இறந்துள்ளனர். இவர்கள் அனைவருமே அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ஆபத்தான நிலையில் பரிந்துரைக்கப்பட்டவர்கள்.
இந்த மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு, ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகச் சிறப்பானதாகும். இங்கு வசதி குறைபாடுகள் இல்லை. பல சீனியர் டாக்டர்கள், சொந்தமான மருத்துவமனை நடத்தி வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்

கருத்துகள் இல்லை: