திங்கள், 6 ஜனவரி, 2020

தத்து எடுக்கப்பட்ட பெற்றோரால் 1,100 குழந்தைகள் மீண்டும் காப்பகம் அனுப்பி வைப்பு

RTI https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/misery-of-orphans-over-1100-adopted-children-returned-to-child-care-institutions/returning-adopted-children/slideshow/73107411.cms
.dinakaran.com : புதுடெல்லி: சிறுவர் காப்பகங்களில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் தத்து எடுக்கப்பட்ட 1100 குழந்தைகள், வளர்ப்பு பெற்றோரால் மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் தத்தெடுப்பு மற்றும் வளர்ப்பு பெற்றோரால் திருப்பி அனுப்பப்பட்ட குழந்தைகள் விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மனுவுக்கு மத்திய தத்தெடுப்பு ஆணையம் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் 1,100 தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், வளர்ப்பு பெற்றோர் மூலமாக மீண்டும் காப்பகங்களில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக 2014-2015ம் ஆண்டு தான் அதிக எண்ணிக்கையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் காப்பகங்களுக்கு திரும்பியுள்ளனர்.  2014-2015ம் ஆண்டில் 4362 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 387 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்ட பெற்றோரால் மீண்டும் காப்பகங்களில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர்.  இதேபோல், 2015-2016ம் ஆண்டு 3677 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்ட நிலையில், 236 பேர் மீண்டும் காப்பகங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

2016-2017ம் ஆண்டில் 3,788 குழந்தைகளும், 2017-2018ம் ஆண்டில் 3927 குழந்தைகளும் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்களில் முறையே 195, 153 குழந்தைகள் மீண்டும் காப்பகங்களுக்கு திரும்பியுள்ளனர். 2018-2019ம் ஆண்டில் தத்து கொடுக்கப்பட்ட 4027 குழந்தைகளில், 133 குழந்தைகளை தத்து எடுத்த பெற்றோர் காப்பகங்களுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 273 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டு பின்னர் காப்பகத்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். அடுத்த படியாக மத்தியப்பிரதேசத்தில் 92, ஒடிசாவில் 88, கர்நாடகாவில் 60 குழந்தைகளும் தத்து எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் காப்பகத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தத்தெடுப்பு ஆணைய மூத்த அதிகாரி கூறுகையில், “பெரும்பாலான குழந்தைகள் வளர்ப்பு பெற்றோர்களுடன் இணக்கமாக இல்லாததால், திரும்பி கொண்டு வந்து விடப்படுகின்றனர். இது போன்ற சம்பவங்களில் குறிப்பாக 8 வயதுக்கு மேற்பட்ட சிறார்களே அதிகம் இருக்கின்றனர். சிறார் காப்பகங்களில் வளரும் குழந்தைகள் பராமரிப்பாளருடன் வலுவான உறவுடன் வளர்கின்றன. அவர்களை பிரிந்து வேறொரு குடும்பத்தினருடன் செல்வது என்பது குழந்தைகளுக்கு மிகவும் கடினமானதாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும்,” என்றார்.

கருத்துகள் இல்லை: