வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

விநியோகஸ்தர்கள், பைனான்ஸியர்களான கதை!

விநியோகஸ்தர்கள், பைனான்ஸியர்களான கதை!மின்னம்பலம் : தமிழ் சினிமா 365: பகுதி - 44 இராமானுஜம்
தமிழ் சினிமாவில் அவரவர் துறைக்குள் மட்டுமே தொழில் ரீதியாக பயணித்துக் கொண்டிருந்த போது தொழில் ரீதியான பைனான்சியர்கள் சினிமாவுக்கு கடன் கொடுப்பதை குறைத்துக் கொண்டனர்.
இவர்களைப் பொறுத்தவரை ஒரு படத்திற்கு நெகட்டிவ் பைனான்ஸ் மட்டுமே கொடுப்பார்கள். படம் வெளியீட்டுக்கு முதல் நாள் அசலும் - வட்டியும் கொடுக்கப்பட்டு பைனான்சியரிடம் NOC பெறப்பட்டு பிலிம் லேபரட்ரியில் கொடுத்தால் மட்டுமே படம் ரிலீஸ் என்பது உறுதியாகும்.
நெகட்டிவ் பைனான்ஸ் வாங்கிய தயாரிப்பாளர் ஏரியா உரிமை, வெளிநாட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை என எல்லாவற்றையும் தனித்தனியாக அடமானம் வைத்து கடன் வாங்கியிருப்பாரேயானால் நெகட்டிவ் பைனான்சியர் டம்மியாகி விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச வேண்டிய நிலை ஏற்படும்
அப்பத்தை பங்கு போட்டது போல் படத்திற்கு ஏரியா உரிமை விற்பனை செய்ததில் கிடைத்த தொகையை வைத்து மொத்த கடனையும் அடைக்க முடியவில்லை என்றால் மொத்த கடன் அதில் யார் எவ்வளவு கொடுத்திருக்கின்றார்களோ அதற்கு ஏற்ப சதவீதம் கணக்கிடப்பட்டு கடன் தொகை திருப்பிக் கொடுக்கப்படும்.

இந்த மாதிரியான நடைமுறையில் பைனான்சியர்கள் தங்கள் கடனை திரும்ப பெற பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. ஏரியா அடிப்படையில் கடன் கொடுத்த விநியோகஸ்தர்கள் ஆதிக்கம் அதிகமிருக்கும். பைனான்சியர் NOC கொடுக்க மறுத்தால் படம் ரிலீஸ் செய்ய முடியாது. அப்படி இருந்தும் வட்டியை தள்ளுபடி செய்து கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படுவார். மறுத்தால் படம் ரிலீஸ் ஆகாது. தனது மூலதனம் மொத்தமும் முடங்கி விடும் என்பதால் கிடைத்த வரை லாபம் என்று இழப்புக்குரிய சமரச முடிவுகளை பைனான்சியர்கள் ஏற்க வேண்டியிருந்தது.
இப்படி ஒரு அனுபவம் ஏற்பட்ட பின்பு அத்தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்திற்கு சம்பந்தபட்ட பைனான்சியர் கடன் தர மறுத்து விடுவார். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தொழில் முறை விநியோகஸ்தர்கள் பைனான்சியர்களாக மாறி இன்று விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். என்னதான் அசுர பலம் கொண்ட யானையாக இருந்தாலும் அதன் கண்களில் சிறு தூசி பட்டு விட்டால் துடித்துப்போகும்,
அது போன்றுதான் தமிழ் சினிமாவில் அதிகார பலம், அரசியல் பலம், பணபலம் எல்லாம் இருந்தும் நாட்டாமைகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களும், நகை கடை அதிபர்களும் தமிழ் சினிமாவில் மறைமுகமாக முதலீடு செய்தனர்.
இவர்களது முதலீட்டை முறைப்படி பயன்படுத்தி லாபம் சம்பாதித்துக் கொடுக்க கூடிய விநியோகஸ்தர்கள் இதனை சரியாக பயன்படுத்தி சாதனை நிகழ்த்தியவர்களும் உண்டு. நம்பி முதலீடு செய்தவர்களை முதல் படத்திலேயே மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பியவர்களும் இங்கு அதிகம். இவையெல்லாம் நம் அஜண்டாவில் இல்லையென்று அதிர்ந்தது நாட்டாமைகள் வட்டாரம்.
என்ன தான் வேரோடு புடுங்கினாலும் அருகம்புல் போல மீண்டும் மீண்டும் புதிது புதிதாக படம் வாங்க ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்களே என்ற ஆதங்கம் நாட்டாமைகள் மத்தியில் ஏற்பட்டது. இவர்களை நாம் நேரடியாக எதிர்க்க கூடாது ஆனால் மட்டுப்படுத்தி தொழில் ரீதியாக பணரீதியாக முடமாக்கிவிட்டால் மைதானம் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என எதிர்பார்த்தார்கள். அது நடக்கவில்லை.
என்ன தான் நடந்தது? நாளை......
குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்
ஆசிரியர் குறிப்பு
இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.
முந்தைய பகுதி - தமிழ் சினிமா தயாரிப்பு: மரபை உடைத்த பைனான்ஸியர்கள்!

கருத்துகள் இல்லை: