சனி, 23 பிப்ரவரி, 2019

அஸ்ஸாமில் விஷச் சாராயம் அருந்திய பெண்கள் உள்பட 99 பேர் இறப்பு

BBC : இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சட்டவிரோதமாக
விற்பனை செய்யப்பட்ட விஷச் சாராயத்தை அருந்தியவர்களில் குறைந்தது 99 பேர் பலியாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 200க்கும் மேலானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் அனைவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். அவர்களில் பெண்களும் அடக்கம்.
பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் விஷச் சாராயம் அருந்திய சுமார் 100 பேர் உயிரிழந்த இரு வாரங்களில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோலாகட் மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேர் இருந்துள்ளதாக அந்த மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் பிபிசி இடம் தெரிவித்துள்ளார்.
குறைந்தது 12 பேர் அருகிலுள்ள ஜோர்கட் மாவட்டத்தினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கோலாகட்டில் உள்ள மருத்துவமனை மற்றும் ஜோர்கட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.கடுமையான வாந்தி, மூச்சடைப்பு மற்றும் நெஞ்சு வலியுடன் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்ததாக கோலாகட் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
"ஒரு லிட்டர் மதுபானம் வாங்கி நான் குடித்தேன். முதலில் எதுவும் தெரியவில்லை. பின்னர் தாங்க முடியாத அளவுக்குத் தலைவலி ஏற்பட்டது, " என்று சிகிச்சை பெற்றுவரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் பிபிசியிடம் கூறினார்.
முறைகேடாக விற்பனை செய்யப்படும் மதுபானம் குடித்து மனிதர்கள் இறப்பது இந்தியாவில் வழக்கமாகிவிட்டது.
இந்த மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: