இதன்படி 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் கட்டாய தேர்வு நடத்தப்பட வேண்டும். அதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்த சட்டத்திருத்தத்தை அமல் படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். இடை நிற்றல் உயரும் என ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனினும், தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டு முதலே பொதுத்தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. நடப்பாண்டு முதல் எல்லா வகை பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.
20 மாணவருக்கு ஒரு தேர்வு மையம் அமைக்க வேண்டும். அதற்கு குறைவான மாணவர்கள் அருகே உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வேண்டும். அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கையை வட்டார அளவில் பெற்று அதற்கேற்ப தேர்வு மையங்களை மாவட்ட கல்வி அதிகாரிகள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த முடிவை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் உடனடியாக எதிர்த்தனர். இம்முறையை அமல்படுத்தினால் இடை நிற்றல் அதிகரிக்கும், குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிப்பர், சாதாரண கிராமபுற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஈரோட்டில் பேட்டி அளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பொதுத்தேர்வு முறையை நடப்பாண்டில் அமல்படுத்த அரசு ஆணை ஏதும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.
5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு செய்வது அரசு. தயார்படுத்திக் கொண்டிருப்பது துறை, அதை அனுமதிப்பது, ஆணையிடுவது அரசு. ஆகவே அரசு அப்படி எதுவும் நடப்பாண்டில் முடிவெடுக்கவில்லை ஆகவே பெற்றோர் அச்சப்படவேண்டாம் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக