செவ்வாய், 19 பிப்ரவரி, 2019

BBC :தமிழகம்.. 20 கோடி லஞ்சம் கொடுத்ததாக காக்னிசன்ட் நிறுவனத்துக்கு 180 கோடி அபராதம்

சாய்ராம் ஜெயராமன் -பிபிசி தமிழ் : தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில்
வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்ட தங்களது நிறுவனத்தின் கட்டடங்களுக்கு பல்வேறு அனுமதிகளை பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புனே நகரங்களில் 2012 முதல் 2016 -ம் ஆண்டு வரையிலான காலத்தில் தங்களது நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட இந்த லஞ்ச பணப்பரிமாற்றம் குறித்து அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடைபெற்று வந்த விசாரணையின் முடிவில், அமெரிக்காவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது சுமார் 178 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது..
 பிரபல மென்பொருள் நிறுவனம்
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான காக்னிசன்டின் மிகப்பெரிய அலுவலகங்கள் இந்தியாவின் சென்னை, பெங்களூரு, மும்பை, புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் செயல்பட்டு வருகிறது.
1994-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் வேகமாக வளர்ந்து பார்ச்சுன் இதழின் உலகின் டாப் 500 நிறுவனங்கள் பட்டியலில் கடந்த 2011ஆம் ஆண்டு இணைந்தது. அதுமட்டுமின்றி, இந்நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தையான நாஷ்டாக்கில் பட்டியலிடப்பட்டுள்ளதால் அதன் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டு வருகிறது. e>அந்த வகையில் 2012 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் சென்னை, மகாராஷ்டிராவின் புனே ஆகிய நகரங்களில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கட்டடங்களை கட்டுவதற்கு தேவையான கட்டட வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்புதல்களை மாநில அரசிடமிருந்து பெறுவதற்கு மொத்தமாக 26 கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் அந்நிறுவனத்தின் தரப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது.

நடந்தது என்ன?

சென்னையில் மட்டும் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு சிறுசேரி, சோழிங்கநல்லூர், சானடோரியம் உள்ளிட்ட பல இடங்களில் கிளை அலுவலகங்கள் உள்ளன.
குறிப்பாக, சோழிங்கநல்லூரில் காக்னிசன்ட் நிறுவனத்துக்கு 2.7 மில்லியன் சதுர அடி பரப்பில், சுமார் 17,500 பணியாளர்கள் வேலை செய்யக்கூடிய வகையிலான கட்டடத்தை கட்டும் பணி உரிய அனுமதியின்றி கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பொறுப்பு இந்தியாவின் பிரபல கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
தேவையான அனுமதிகள் எதுவுமின்றி மூன்றாண்டுகள் கட்டுமான பணிகள் நடைபெற்ற நிலையில், உரிய அனுமதியை பெறுவதற்கு சுமார் 14 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தரப்பில் அந்தக் கட்டுமான நிறுவனத்திடம் கேட்கப்பட்டதாக காக்னிசன்ட் நிறுவனம், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பிடம் தெரிவித்திருந்தது.இதுகுறித்து, 2014ஆம் ஆண்டு காக்னிசன்ட் நிறுவனத்தின் இந்திய அதிகாரிகள் அமெரிக்காவிலுள்ள அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக அந்நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"காக்னிசன்ட் நிறுவனத்தின் மூத்த சட்ட ஆலோசகர், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கேட்கும் லஞ்சத்தை சிக்கல் ஏதுமின்றி செயல்படுத்துவது என்பதை விளக்கினார். அதைத்தொடர்ந்து லஞ்சத்தை காக்னிசன்ட் நிறுவனம் நேரடியாக அளிக்காமல், கட்டுமான நிறுவனத்தின் மூலம் அளிக்க செய்து, அவர்களுக்கு அந்த பணத்தை வேறு வகையில் திரும்ப அளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டு, அந்த பணி ரியல் எஸ்டேட் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று அந்த ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது.
முதலில் லஞ்சத்தை அளிப்பதற்கு மறுத்த கட்டுமான நிறுவனம், பிறகு காக்னிசன்ட் நிறுவனத்தின் அழுத்தத்தின் காரணமாக 14 கோடி பணத்தை 2014ஆம் ஆண்டு மே-ஜூனுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியது. அதற்கு ஈடாக கூடுதல் 4 கோடி ரூபாய் கமிஷன் உள்பட 18 கோடி ரூபாயை 2015 மார்ச், 2016 ஜனவரியில் காக்னிசன்ட் நிறுவனம் திரும்ப வழங்கியது.
அதாவது, கட்டுமான நிறுவனத்தை நேரடியாக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சத்தை வழங்க வைத்ததன் மூலம் பிரச்சனையிலிருந்து தப்பிப்பதாக நினைத்த காக்னிசன்ட் நிறுவனம், முறைகேடாக கணக்குக்காட்டி 18 கோடி ரூபாயை கட்டுமான நிறுவனத்துக்கு அளித்துள்ளது.

இரண்டாவது முறையாக லஞ்சம்

காக்னிசன்ட் நிறுவனத்தின் சிறுசேரி கிளை அலுவலக கட்டுமான பணிகளுக்கு தேவையான கட்டட வடிவமைப்பு, சுற்றுச்சூழல், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்புதல்களை தமிழ்நாடு அரசிடமிருந்து பெறுவதற்காக 2012ஆம் ஆண்டு, அதே கட்டுமான நிறுவனத்தின் தரப்பில், காக்னிசன்ட் நிறுவனத்தின் சார்பாக சுமார் $840,000 அதாவது, ஆறு கோடி ரூபாய் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே அனைத்து ஒப்புதல்களையும் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகள் வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் காக்னிசன்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட லஞ்சத்தை திரும்ப பெறுவதற்காக கட்டுமான நிறுவனம் விடுத்த சில கோரிக்கைளை பல்வேறு காரணங்களை கூறி காக்னிசன்ட் நிராகரித்தது. பிறகு, கட்டுமான நிறுவனம் பணத்தை கேட்பதற்கான காரணத்தை மாற்றியவுடன், 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் பல தவணைகளில் காக்னிசன்ட் நிறுவனம் பணத்தை திரும்ப அளித்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.

லஞ்சம் வாங்கிய மகாராஷ்டிர அரசு அதிகாரிகள்

சென்னையை போன்றே மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் காக்னிசன்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை அமைக்கும் பணிகள் உரிய அனுமதியின்றி 2012ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில், அந்த கட்டடத்தை திறப்பதற்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதியை அளிப்பதற்கு அம்மாநில அரசு அதிகாரிகள் 5.50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டனர். எனவே, அதே கட்டுமான நிறுவனத்தை கொண்டு 5.50 கோடி ரூபாய் லஞ்சம் மகாராஷ்டிர அரசு அதிகாரிகளுக்கு 2013ஆம் ஆண்டு தொடக்க பகுதியில் வழக்கப்பட்டது. அதையடுத்து விரைவிலேயே சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்கப்பட்டது.
பின்பு, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முறைகேடான காரணத்தை காட்டி, அந்த கட்டுமான நிறுவனத்துக்கு 5.50 கோடி ரூபாயை காக்னிசன்ட் நிறுவனம் திரும்ப செலுத்தியதாக அமெரிக்காவில் இதுகுறித்த நடந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி, இந்தியா முழுவதுமுள்ள காக்னிசன்ட் அலுவலகங்களில் சமையலறை இயக்க வசதிகள், காற்று மற்றும் தண்ணீருக்கான ஒப்புதல், பாதுகாப்பு மற்றும் கட்டடத்தின் பிற செயல்பாட்டு தொடர்பான அனுமதிகளை பெறுவதற்கு பல்வேறு தரப்பினருக்கு சுமார் 19 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தானே முன்வந்து விளக்கமளித்த காக்னிசன்ட் தனது நிறுவனத்தில் நடைபெற்ற உயர்மட்ட அளவில் நடந்த முறைகேடான பணப்பரிமாற்றங்கள் குறித்து காக்னிசன்ட் நிறுவனம் தானே முன்வந்து தகவல்களை தெரிவித்ததோடு, வழக்கு விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் தக்க நேரத்தில், தெளிவாக வழங்கியதாக அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும், தனது பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அமெரிக்காவின் சட்டவிதிகளை மீறி வெளிநாட்டில் லஞ்சம் கொடுத்தது முற்றிலும் தவறான செயல்பாடு என்பதால், பல்வேறு சட்டவிதிகளின்படி காக்னிசன்ட் நிறுவனத்துக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 180 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட தொகையை வரும் 25ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் கூடுதலாக அபராதம் செலுத்த நேரிடும் என்றும், இந்த விவகாரத்தோடு தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, காக்னிசன்ட் நிறுவனத்தில் இதுபோன்ற முறைகேடுகள் ஏற்படாவண்ணம் நிர்வாக அமைப்புமுறை தொடங்கி, நிதி மேலாண்மை, முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளிட்ட பல நிலைகளிலும் தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசின் கருத்துக்கள் உடனடியாகக் கிடைக்கப் பெறவில்லை

கருத்துகள் இல்லை: