ஞாயிறு, 17 பிப்ரவரி, 2019

ஐந்து ஆண்டுகளாக பாஜக காஷ்மீரில் செய்தது என்ன ?

Savukku : * காஷ்மீரில் தீவிரவாதமும் மக்கள் போராட்டமும் வெகுவாக அதிகரித்தன.
* அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான மோதல் போக்கு வலுவானது.
* துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டாலும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் அதிகரித்தன.
* பிடிபி – பாஜக அரசு வீழ்ந்தது; வரலாறு காணாத அளவில் மிகக் குறைந்த வாக்குகள் பதிவாகின.
ஜம்மு – காஷ்மீருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்த தருணத்தில், அப்போதைய பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்த பாஜக, இந்த விவகாரத்தில் மென்மையான போக்கைப் பின்பற்றத் தொடங்கியது. பின்னர், கொந்தளிப்புமிகு மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கான வாக்குறுதிகளை அளித்து இணக்கம் காட்டியது. ஆனால், பிரதமராகப் பதவியேற்ற பின் மோடி தன் முதல் பயணமாக காஷ்மீர் சென்றபோது, அங்கு பிரிவினைவாதிகளால் அழைப்பு விடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் மூலமாக எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது.

அதே 2014ஆம் ஆண்டு அக்டோபரில் தீபாவளியை ஒட்டி அடையாளச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தன் மீதான கவன ஈர்ப்பைத் தக்கவைத்துக்கொண்டார் மோடி. அதன் பிறகு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீருக்கு ரூ.80,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். 2014 டிசம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, ஜம்மு – காஷ்மீரில் பாஜக முதன்முறையாக அதிகாரத்தைக் கைப்பற்றியது. மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்தது.
அதன் பிறகு, அரசுக்கு எதிரான தீவிரவாதமும், மக்கள் போராட்டங்களும் அதிகரிப்பு, பலி எண்ணிக்கை அதிகரிப்பு, தேர்தல் அரசியலின் பாதிப்புகள், காஷ்மீரில் பெரும்பான்மை இஸ்லாமியர் – ஜம்முவில் பெரும்பான்மை இந்துக்கள் இடையே பிரிவினையை முடுக்குதல் என பலவற்றையும் காஷ்மீரில் காண முடிந்தது. கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியதால் 2018ஆம் ஆண்டு ஜூனில் மாநில அரசு கவிழ்ந்து, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது.
ஒட்டுமொத்தமாக, தீவிரவாதத்தையும் மக்கள் போராட்டங்களையும் எதிர்கொள்வதற்கு ராணுவத்தையே மத்திய அரசு நம்பியிருந்ததால் எல்லையில் எப்போதும் பதற்றமும் கொந்தளிப்பும் அதிகரித்த வண்ணம் இருந்தன.
புர்ஹான் வானி தலைமுறை
2015ஆம் ஆண்டு துவக்கத்தில், 11 தீவிரவாதிகள் துப்பாக்கிகளை ஏந்தியபடி இருந்த ஒரு போஸ்டர் காஷ்மீர் முழுவதும் வைரல் ஆனது. 2000களின் துவக்கத்திலேயே செயலிழந்த உள்ளூர் தீவிரவாதக் குழு ஒன்று மீண்டும் புதிய படையாக உருவாகத் தயாராக இருந்தது. இதன் பின்னணியில், ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டரும், சமூக வலைதளத்தில் தீவிரம் காட்டிய இளைஞருமான புர்ஹான் வானி 2016இல் பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
உளவுத் துறைக்குத் தகவல்களைப் பகிரும் மல்டி-ஏஜென்சி மையம் தொகுத்த விவரங்களின்படி, கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் தீவிரவாதக் குழுக்களில் இணைந்த இளைஞர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. 2014இல் புதிதாக 63 தீவிரவாதிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை 2017இல் இரு மடங்காகி 128 ஆக அதிகரித்தது. 2018இல் ஜூலை மாதம் வரை 82 தீவிரவாதிகள் இணைந்துள்ளனர்.
இந்த ஆள்சேர்ப்பு மிகுதியானதன் எதிரொலியாக, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் அதிகரித்தது. 2017இல் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளால் வெடித்த துப்பாக்கிச் சண்டைகளில் 213 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2018இல் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் 255.

இதனிடையே, தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் பொதுமக்களும் சிக்கினர். அதாவது, இந்த மோதல்களின்போது நடக்கும் துப்பாக்கிச் சண்டைகளில் பொதுமக்களின் உயிரும் அதிகளவில் பறிபோயின. 2017இல் 51 பேரும், 2018இல் 50 பேரும் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் உயிரிழப்பு குறித்து அரசும் மவுனம் சாதித்து வந்த நிலையில், துப்பாக்கிச் சண்டைகளில் குறுக்கிடும் பொதுமக்களும் ‘தீவிரவாதிகள்’ என்றே கருதப்படுவார்கள் என்று ராணுவத் தளபதி புபின் ராவத் கூறியது இங்கே நினைவுகூரத்தக்கது.
2016 போராட்டங்கள்
புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 2016இல் பெருமளவில் மக்கள் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டதால் அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதன் விளைவாக, அடுத்த சில மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த மாநில அரசு, இணையதள சேவையையும் ரத்து செய்தது; பிரிவினைவாதிகள் முழு அடைப்புப் போராட்டங்களை மேற்கொண்டனர். ‘ஆஸாதி’க்காக முழுக்கங்களை எழுப்பி கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது புல்லட் குண்டுகளையும் பெல்லட் குண்டுகளையும் பாய்ச்சியது பாதுகாப்புப் படை. இதனால் பொதுமக்களில் ஏறத்தாழ 100 பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கணக்கானோர் தங்கள் கண்களையும் உடல் உறுப்புகளையும் இழந்தனர்.
இதனிடையே, தேசப்பற்றைப் பறைசாற்றும் வகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே காஷ்மீர் என்றும், பாகிஸ்தான் வேண்டுமென்ற பதற்றச் சூழலை உருவாக்குகிறது என்றும் நாடாளுமன்றத்தில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. காஷ்மீருக்கு அவ்வப்போது மேற்கொள்ளும் தன் பயணத்தையும் நிறுத்திக்கொண்ட மோடி, போராட்டங்கள் தொடங்கி ஒரு மாதத்துக்குப் பிறகே மவுனம் கலைத்தார். காஷ்மீர் இளைஞர்கள் தங்கள் கரங்களில் லேப்டாப்களை வைத்திருக்க வேண்டுமே தவிர கற்களை அல்ல என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். அத்துடன், தீவிரவாதத்தின் பாதகங்கள் குறித்தும், வளர்ச்சியின் சாதகங்கள் குறித்தும் அவர் அடுக்கினார்.
துல்லியத் தாக்குதல்
மக்கள் போராட்டங்களுக்கும் போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகப் புதிய வடிவில் மத்திய அரசு பதில் சொன்னது. ராணுவம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டை ஒட்டிய பகுதியில் ‘துல்லியத் தாக்குதல்’ நடத்தப்பட்டதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ‘பயங்கரவாத நிலைகள்’ மீதான அந்தத் தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தது.

2015ல் காஷ்மீரில் உரையாற்றும் மோடி
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களைக் கட்டுப்படுத்துவதுதான் நடத்தப்பட்டதாக சொல்லப்படும் துல்லியத் தாக்குதலின் நோக்கம் என்று கூறப்பட்டது. ஆனால், அது எந்தப் பலனையும் தரவல்லை. கடந்த பல ஆண்டுகளாக, இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறல்களை இருதரப்பு கண்காணிப்பு அமைப்புகள் மதிப்பிட்டு வருகின்றன. இந்திய தரப்புக் கணக்கின்படி, 2014இல் 583 மீறல்கள், 2015இல் 405 மீறல்கள், 2016இல் 449 மீறல்கள், 2017இல் 971 மீறல்கள் மற்றும் 2018இல் 1,432 மீறல்கள் நடந்தேறியிருக்கின்றன. இந்த எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி காலத்திலிருந்தே போர் நிறுத்த ஒப்பந்த மீறல்கள் தொடர்ந்து வெகுவாக அதிகரித்துவருவது தெரியவருகிறது.
மனிதக் கேடயம்
காஷ்மீரில் 2017ஆம் ஆண்டு ஏப்ரலில் மக்களவை இடைத்தேர்தல் நடந்த நேரத்தில் போராட்டங்கள் தொடர்ந்தன. பொதுமக்களில் 8 பேர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்றும் நடந்தது. இந்திய ராணுவ அதிகாரி லீதுல் கோகாய் தனது வாகனத்தின் மீது கற்களை வீசும் போராட்டக்கார்களைத் தடுப்பதற்காக, உள்ளூர் நபர் ஒருவரைத் தனது ஜீப்பின் முன்பக்கத்தில் கட்டி வைத்து ஓட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. பொதுமக்களில் ஒருவரை ராணுவ அதிகாரி ‘மனிதக் கேடயம்’ ஆக பயன்படுத்தியதைக் காட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின. இதனால் காஷ்மீரில் கொந்தளிப்பு அதிகமானது. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி கோகாயை ராணுவம் பாராட்டியது. அவரது நடவடிக்கையை அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை முயற்சிகள்
ஆனால், அதே ஆண்டின் சுதந்திர தின உரையில் பேசிய மோடி, காஷ்மீர் பிரச்சினையில் மென்மையானப் போக்கைக் கடைபிடிக்க மத்திய அரசு விரும்புவதாக கூறினார். காஷ்மீர் பிரச்சினையை புல்லட்டுகளாலும் வன்முறையாலும் தீர்க்க முடியாது என்றார். ஜம்மு – காஷ்மீரில் வெவ்வேறு தரப்புகளிடமும் பேச்சுவார்த்தை நடத்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில், உளவுத் துறையின் முன்னாள் தலைவர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்தது. ஆனால், பேச்சுவார்த்தைகளை ஒட்டிய அணுகுமுறையும் சூழல்களும் நம்பிக்கைக்குரியதாக இல்லை.
இந்தப் பேச்சுவார்த்தை முயற்சிக்குச் சற்று முன்புதான் ‘தீவிரவாத நிதி’ விவகாரத்தில் தொடர்பு உடையதாக, பிரிவினைவாதத் தலைவர்கள் மீது தேசியப் புலனாய்வு அமைப்பு நடவடிக்கை எடுத்தது. இதனிடையே, தினேஷ்வர் சர்மாவின் செயல்பாடுகளும் சுருக்கப்பட்டன. மக்களின் சட்டபூர்வமான விருப்பங்களைப் புரிந்துகொள்வதற்காகவே அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று மத்திய அரசு அறிவித்தது. ‘ஆஸாதி’ முழக்கமிடும் மக்கள் கோரும் வலுமிக்க தன்னாட்சி அதிகாரத்தைத் தாண்டி, அந்த விருப்பங்கள் நீளாது என்பது கூடிய விரைவிலேயே தெளிவாகத் தெரிந்தது. அப்போது, வலுமிக்க தன்னாட்சிக்கான விருப்பத்தைப் பிரிதிபலிப்பதாகவே ‘ஆஸாதி’ கோரும் பேரணிகள் காட்டுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார். அதனை ராணுவ வீரர்களை அவமதிக்கும் செயல் என்று கடுமையாகச் சாடினார் மோடி.
2018ஆம் ஆண்டு மே மாதத்தில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஒரு மாத காலத்துக்குப் போர் நிறுத்தத்தை மத்திய அரசு அறிவித்தது. அதனை தீவிரவாத அமைப்புகள் நிராகரித்தன. ஒரு மாதத்திற்குப் பின்னர், பாதுகாப்பு படையினர் மீதான தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்துத்துவ அணிதிரட்டல்
ஜம்முவில் காவி அணிதிரட்டல் மேம்பட்டதன் எதிரொலியாக பாஜகவுக்கு வாக்கு வங்கி கூடிய அதேவேளையில், காஷ்மீரில் காவிக்கு எதிரான போக்குகளும் அதிகரித்ததால் மோதல்கள் வலுத்தன. ஜம்முவின் கத்துவா மாவட்டத்தில், 2018ஆம் ஆண்டு ஜனவரியில் எட்டு வயது இஸ்லாமியச் சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்தக் கொடூர சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவருமே இந்துக்கள். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவான போராட்டப் பேரணிகளில் பாஜகவின் முக்கியத் தலைவர்களும் பங்கேற்றனர். அதேவேளையில், கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கேட்டு, காஷ்மீர் மாநிலம் முழுவதுமே போராட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன.
அரசு கலைப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தவுடன், கூட்டணியிலிருந்து பாஜக வெளியறியது. பின்னர், ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது. காஷ்மீரில் ஏற்கெனவே குழப்பமிகு தேர்தல் அரசியல் நிலவும் சூழலில், மாநில அரசு கலைக்கப்பட்டது பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை.
கடந்த 2016 ஜூனில் அனந்த்நாக் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தலின்போது இருந்ததைப் போலவே அரசுக்கு எதிரான கோபம் வெளிப்படையாகவே எதிரொலித்தது. 201 ஏப்ரலில் அதே தொகுதியில் மக்களவை இடைத்தேர்தல் நடந்தபோது, அந்தத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். தாம் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரில் இருந்து காவிப் படையை வெளியோற்றுவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த மக்கள் ஜனநாயகக் கட்சி, பின்னர் தனது கூட்டணி அணுகுமுறையால் ஆதரவை இழந்தது. மக்கள் போராட்டங்களின் எதிரொலியாக, வரலாறு காணாத வகையில் மிகக் குறைந்த வாக்குகளே பதிவாகின. வெறும் 7.14% சதவீத வாக்குகளே பதிவானதால் அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டணி அரசு கவிழ்ந்த பிறகு, மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றன. காஷ்மீர் அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எதிரெதிர் துருவங்களான தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் சேர்ந்து, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க நவம்பரில் அனுமதி கோரியது. அப்போது, மக்கள் மாநாட்டுக் கட்சியை ஆதரித்து, அக்கட்சியை ஆட்சி அமைக்கக் கோர வைத்தது பாஜக. ஆனால், ஆளுநர் சத்ய பால் மாலிக் ஒட்டுமொத்தமாக சட்டப்பேரவையைக் கலைத்தார்.
இஸ்பிதா சக்கரவர்த்தி
நன்றி: தி ஸ்க்ரால்
https://scroll.in/article/904790/the-modi-years-what-happened-to-kashmir-in-the-last-five-years

கருத்துகள் இல்லை: