புதன், 21 மார்ச், 2018

ஜெயலலிதா மருத்துவமனைக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் நடந்தது என்ன?- சசிகலா வாக்குமூலம்

tamilthehindu -தீபு செபாஸ்டின் எட்மண்ட்: ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலா எழுத்துபூர்வமான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற அன்று நடந்த விவரங்களை விரிவாக விளக்கியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா உடன் போயஸ் கார்டன் வீட்டில் தங்கியிருந்த இளவரசியின் மகன் விவேக், என பலரையும் நேரில் அழைத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்தார். ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா சிறையில் இருந்த நிலையில் வழக்கறிஞர் மூலமாக அவர் தனது வாக்குமூலத்தை ஆணையத்தில் சமர்பித்தார்.
ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன் நடந்தது குறித்த சசிகலா விரிவான தகவல்களை அதில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதில் இருந்தே ஜெயலலிதா மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தார். அவரது உடல்நிலையும் கடுமையாக பாதிக்க பட்டது. அதன்பின் வழக்கில் இருந்து விடுதலையான பிறகு தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.
அதிக தூரம் பயணம் செய்ய முடியாது என்பதால் தான் ஆர்.கே நகரில் போட்டியிட முடிவு செய்து அங்கு அவர் போட்டியிட்டார். எனினும் அவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அடிக்கடி சர்க்கரை அளவு அதிகரித்துக் கொண்ட இருந்தது. 2016 செப்டம்பரில் அவரது உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டன. சரக்கரை அளவு ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது.
அவருக்கு சர்க்கரை நோய் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்காகவே தனியாக சர்க்கரை நோய் சிகிச்சை மருத்துவர் நியமிக்கப்பட்டார். தோல் சிகிச்சை மருத்துவரும் நியமிக்கப்பட்டனர். குறைந்த அளவிலான ஸ்டெராய்டு மாத்திரைகளை அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
செப்டம்பர் 19ம் தேதி காய்ச்சல் வந்தது. செப்டம்பர் 21ம் தேதி பொது நிகழச்சியில் அவர் பங்கேற்றார்.
இரவு நடந்தது என்ன?
2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி தேதி இரவு 9.30 மணியளிவில் போயஸ் கார்ட்ன் வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில், பாத்ரூமில் இருந்த ஜெயலலிதா திடீரென மயக்கம் ஏற்படவே உதவிக்கு அழைத்தார்.
முன்னதாக, ஜெயலலிதாவை இரண்டு முறை சோதித்த மருத்துவர் சிவக்குமார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறினார். ஆனால் ஜெயலலிதா அதை ஏற்கவில்லை.
மயக்கம் ஏற்படவே, அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் கே.எஸ் சிவக்குமாரை அழைத்தோம். அவரும், இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் உடனடியாக வந்தனர். அப்பல்லோ மருத்துவமனை துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டியின் கணவர் விஜயக்குமார் ரெட்டிக்கு சிவக்குமார் தொலைபேசியில் பேசினார்.
கிரிம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து இரண்டு ஆம்புலன்ஸ்கள் உடனடியாக போயஸ் தோட்டத்திற்கு வந்து சேர்ந்தன.
ஜெயலலிதாவை மயங்கிய நிலையல் ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து ஆம்புலன்ஸ்க்கு கொண்டு வந்தோம். போக்குவரத்து தடையின்றி ஆம்புலன்ஸ் வேகமாக மருத்துவமனை செல்வதற்கு உத்தரவு அளிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வேகமாக அப்பல்லோ மருத்துவமனை விரைந்தது.
ஆம்புலன்ஸ் சென்று கொண்டு இருக்கும்போதே, ஜெயலலிதாவுக்கு மயக்கம் தெளிந்தது. நாம் எங்கே இருக்கிறோம் என்று கேட்டார். மருத்துவமனைக்கு சென்று கொண்டு இருக்கிறோம் என கூறினேன்’’
இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த 21 மருத்துவர்களின் பட்டியல், விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: