வெள்ளி, 23 மார்ச், 2018

ஆன்லைனில் ஸ்டாலின்... ஆன் தி ஸ்பாட்டில் உதயா!

டிஜிட்டல் திண்ணை:  ஆன்லைனில் ஸ்டாலின்... ஆன் தி ஸ்பாட்டில் உதயா!
minnambalam :“திருவிழாவுக்கு தயாராகிவிட்டது திமுக. எல்லா சாலைகளும் ரோம் நோக்கி என்று சொல்வதுபோல திமுகவினருக்கு இன்று எல்லா சாலைகளுமே ஈரோட்டை நோக்கியே இருக்கின்றன. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தனது குடும்ப சகிதமாகக் காலையிலேயே விமானத்தில் கோவைக்கு வந்துவிட்டார். செல்வி, செல்வம், தயாநிதி மாறன் என இன்னொரு குரூப் அடுத்த விமானத்தில் கோவை வந்து சேர்ந்தார்கள். கருணாநிதி குடும்பத்தார் எல்லோருக்குமே விமான நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும் வழியில் உள்ள லீ மெரீடியன் ஹோட்டலில்தான் ரூம் போடப்பட்டிருக்கிறது.

இவர்கள் தவிர, முன்னாள் அமைச்சர்கள் சிலரும் இந்த ஹோட்டலைப் பிடித்திருக்கிறார்கள். ஸ்டாலின் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்ததுமே அங்கே தயாராக இருந்த திமுகவின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்கள், மாநாட்டுத் திடலிலிருந்து அங்கே நடக்கும் நிகழ்வுகளை ஸ்டாலினுக்கு நேரலையாகக் காட்டினார்கள். மாநாட்டுத் திடலிலிருந்து நிர்வாகிகள் சிலர் ஸ்டாலினுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங்கில் பேசினார்கள். கோவையிலிருந்து ஆன்லைனில் பார்த்தபடியே சில கரெக்‌ஷன்களைச் சொன்னார் ஸ்டாலின். ‘கூட்டம் அதிகமாக இருக்கும். லேடீஸ் நிறைய வருவாங்க. அதனால அவங்களை எப்படி பத்திரமாக மாநாட்டு திடலில் உட்கார வைப்பது என்பதைப் பார்த்துக்கோங்க. முடிஞ்சவரை லேடீஸ் உட்காரும் பகுதிகளில் மற்றவங்களை அனுமதிக்காதீங்க...’ என்று ஸ்டாலின் சொல்ல, மாநாட்டுத் திடலில் இருந்த பொறுப்பாளர்கள், ‘இந்த வழியாக லேடீஸ் வர ஏற்பாடு செஞ்சிருக்கோம். யாரும் இடையில் உள்ளே நுழைய முடியாது’ என ஸ்டாலினுக்கு லைவ்வாகக் காட்டினார்கள்.
‘ஃபுட் கோர்ட் எல்லாம் ரெடி பண்ணிட்டாங்களான்னு செக் பண்ணுங்க. நான் ஏற்கெனவே முத்துசாமிகிட்ட சொல்லியிருக்கேன். எந்தக் கடையிலும் கூடுதல் விலைக்கு உணவு விற்கக் கூடாது. இது ஒண்ணும் சினிமா தியேட்டர் இல்லை. அவங்க இஷ்டத்துக்கு விற்கிறதுக்கு.. எல்லோருமே மாநாட்டுக்காகக் கைகாசை செலவு பண்ணிட்டு வராங்க. அவங்களை சிரமப்படுத்தாமல் பார்த்துக்கோங்க. எல்லாக் கடையிலும் வெளியே பளிச்னு தெரியுற மாதிரி விலைப் பட்டியல் வைக்கணும். நான் இதை முன்பே சொன்னேன். அப்படி வைக்காத கடைகளை உள்ளே அனுமதிக்காதீங்க. விலை கூடுதலாக வெச்சா அந்தக் கடையே உள்ளே வர வேண்டாம்னு சொல்லிடுங்க...’ என்று சொன்ன ஸ்டாலின், ‘அந்த ஸ்டால் பக்கம் அப்படியே கேமரா திருப்புங்க...’ என்று கேட்டு, அதைப் பார்த்துக்கொண்டார்.
ஸ்டாலினின் இந்த விசாரிப்புகள் முடிந்ததும், அவரது மனைவி துர்காவும், மகன் உதயாவும் ஹோட்டலிலிருந்து கிளம்பினார்கள். கார் நேராக மாநாட்டுப் பந்தலை நோக்கிப் பறந்தது. கட்சிக்காரர்கள் யாருக்கும் எந்தத் தகவலும் சொல்லவில்லை. பைபாஸ் சாலையிலிருந்து மாநாட்டுப் பந்தலுக்குச் செல்லும் விவிஐபி செல்லும் பாதையில் அவர்களின் கார் பயணித்தது. நேராக மேடைக்கு அருகே போய் கார் நிற்க, இருவரும் விறு விறுவென காரை விட்டு இறங்கினார்கள். அவர்களைப் பார்த்துதான் நிர்வாகிகள் மேடையை நோக்கி ஓடி வந்தார்கள்.
‘நீங்க உங்க வேலைகளை கவனிங்க. நாங்க சும்மா பார்க்க வந்தோம்..’ என்று துர்கா சொல்ல... உதயநிதியும், ‘ஆமா... நீங்க வேலையை பாருங்க...நேரம் குறைவாகத்தான் இருக்கு. நாங்க பார்த்துக்குறோம்’ என்று சொன்னார். தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு வந்து சேர்ந்த ஈரோடு சந்திரகுமார் அங்கே நின்றிருக்க, அவரை அழைத்த துர்கா, ‘இதுல எண்ட்ரன்ஸ்ல இருந்து எந்த வழியாக லேடீஸ் உள்ளே வருவாங்க? எங்கே வந்து உட்காருவாங்க?’ என்று கேட்க... அவர் அந்த வழிகளைக் காட்டினார். ‘லேடீஸ்க்கு ரெஸ்ட் ரூம் எங்கே இருக்கு? மாநாடு நடக்கும்போது மத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாமல் எழுந்து போக வசதி இருக்கா? எந்த வழியில் போவாங்க?’ என்றும் கேட்டார் துர்கா. அதற்கும் சந்திரகுமார், பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருக்கும் வழியைக் காட்டினார். அதையெல்லாம் உதயாவும் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தார்.
‘புகைப்படக் கண்காட்சி எங்கே இருக்கு?’ என உதயநிதி கேட்க... ‘மாநாட்டு நுழைவாயிலுக்கு வலது புறம் இருக்கு தம்பி...’ என சந்திரகுமார் சொல்ல... ‘வாங்க பார்ப்போம்’ என உதயா கூப்பிட... ‘நீங்க காரில் வந்துடுங்க... ரொம்ப தூரம் நடக்கிற மாதிரி இருக்கும். வெயிலா இருக்கு’ என சந்திரகுமார் சொல்ல... துர்காவும், உதயாவும் காரில் ஏறிக்கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை: