ஞாயிறு, 18 மார்ச், 2018

திராவிடம் 2.0' .. பெரியார் திடலில் மணியம்மை அரங்கத்தில் அடுத்த தலைமுறைக்கு திராவிடத்தை ...


Ganesh Babu  :இன்றைய தலைமுறைக்கான திராவிடம் 2.0' என்பது இன்று ஒரு
சாதாரண தொடர் கருத்தரங்க நிகழ்வாகத் தோன்றலாம். 1912ஆம் ஆண்டு 'தென்னிந்திய நல உரிமை சங்கம்' என்ற அமைப்பு உருவானப்போதும் பலர் அப்படித்தான் கருதியிருப்பார்கள். பின்னாளில் அந்த சமூகவிடுதலை நெருப்பு எப்படி திராவிட நிலப்பரப்பை அரணாக சூழ்ந்துக்கொண்டு காத்து நின்றது என்பதை நாம் அறிவோம்.
அதைப்போலத்தான் 'திராவிடம் 2.0' என்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க கருத்துப்போராட்டத்தின் தாக்கத்தை இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு உணரும்.
எத்தனையோ இடையூறுகளைத் தாண்டியும் இந்த லட்சியப் பயணத்தில் உறுதியாக முன்னேறிய அண்ணன்கள் Velu M Karunanidhi, Ka Deena மற்றும் Vignesh Anand ஆகியோரையும், இவர்களுக்கு உறுதுணையாக நின்ற அண்ணன் சாய் லட்சுமிகாந்த் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பெருமுயற்சியின் முதல் கட்டமான வேலூர் கூட்டத்தில் பேரரக்கர் Umamaheshvaran Panneerselvam அவர்களோடு நானும் பேசினேன் என்றப் பெருமை எனக்கு எப்போதும் உண்டு.
இந்த இரண்டாம் கருத்தரங்கம் நேற்று பெரியார் திடலில் நடந்தது. மணியம்மை அரங்கத்தில் இதற்கு மேல் ஒருவர்கூட நுழையமுடியாது என்ற அளவுக்கு அரங்கம் கொள்ளாதக்கூட்டம். எந்த அளவுக்கு என்றால், கூட்டத்திற்கு வந்த பேரரக்கர் Sivasankaran Saravanan அவர்களே உள்ள நுழையமுடியாமல் பக்கத்தில் நடந்த வேறொரு கூட்டத்திற்கு செல்லவேண்டியிருந்தது.
அதைவிட சிறப்பு வந்திருந்தவர்களுள் 95% பேர் இளைஞர்கள் என்பதுதான். தம்பி Suriya வேலூரில் இருந்து பேருந்து, ரயில், கார் என்று மிகுந்த சிரமத்திற்கு இடையே வந்து சேர்ந்ததாகச் சொன்னார். அந்த உணர்வுதான் இந்தக் கூட்டத்தின் மிகப் பெரிய வெற்றி.

கருத்தரங்கில் முதலில் பேசிய மருத்துவர் எழிலன் அவர்கள் மத்திய/மாநில அரசுகளின் முகத்திரையை கிழிக்க புள்ளிவிவரப் புயலாய் வீசி அமர, பிறகு வந்த அண்ணன் வாஷிங்கடன் Sivaa Kumar அவர்கள் 'அமெரிக்க வாழ் தமிழர்களின் பார்வையில் திராவிட இயக்கமும், தி.மு.க' என்றப் புதிய கோணத்தில் ரத்தினச் சுருக்கமாகத் தன் இனிய குரலில் தென்றலாய் வருடிச்சென்றார்.
பேரரக்கர் உமா மகேஸ்வரன் குறைந்த நேரமே பேசினாலும், எப்போதும் போல படபடவென பட்டாசாக வெடித்து அமர்ந்தார்.
பிறகு வந்தார் பேரரக்கர் Don Ashok. அவைக்கு வணக்கம் சொல்வதற்கு முன்பே புலம்பெயர்ந்த தமிழர்கள் என்றப் போர்வையில் உலாவும் 'திராவிட எதிர்ப்பு' அரைவேக்காடுகளை போட்டு வெளுக்கத் தொடங்கிவிட்டார். ரஜினி, கமல், சாமியார்கள், ஆர்.எஸ்.எஸ், சீமான் என்று திராவிட இயக்க எதிர்ப்பாளர்களை ஒருவரைக்கூட விடாமல் கூட்டத்தின் ஆரவாரத்திற்கிடையே கட்டம் கட்டி தோலுரித்தார். பெரும்பாலும் எரிமலையாக வெடித்தவர், திராவிடத்தை ஏன் வாழ்வியலாக அணுகவேண்டும் என்பது போன்றவற்றை விளக்க விளக்காகவும் ஆனார்.
இறுதியாகப் பேசிய அண்ணன் M.m. Abdulla அவர்கள் 'காமராசர் ஆட்சியில்தான் தமிழகத்தில் எல்லா தொழிற்சாலைகளும் கொண்டுவரப்பட்டது' என்ற பொய்யான பரப்புரைக்கு சான்றுகளோடு பதிலளிக்கும் விதமாக தலைவர் கலைஞரின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தொழில் வளர்ச்சி குறித்து சுருக்கமாகவும் அதே சமயம் சுவாரஸ்யமாகவும் பேசினார்.
கலந்துரையாடலோடு விழா முடிந்ததும், Sankaralingam, Palanivel Manickam, Abul Kalam Jailany, Abul Niyaz, Karuppasamy, V Jeyaganapathi, அனுசுயா , Magidoss போன்ற பல முகநூல் நண்பர்களை முதல்முறையாக நேரில் சந்தித்து அளவலாவியது இனிமையான அனுபவமாக இருந்தது.
தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு இதுப்போன்ற 50 கூட்டங்களை ஏற்பாடு செய்தால், அதுவே மிகப் பெரிய சமூகப் புரட்சிக்கு அடித்தளமாக அமையும்.
"உங்களை எல்லாம் இப்படி சூத்திரனா விட்டுட்டு செத்துப்போயிடுவேனோனு நெனச்சா பயமா இருக்கு" என்று தன் இறுதி நாட்களிலும் சமத்துவத்திற்காகத் துடித்த தந்தை பெரியார், கூட்டம் நடந்த அரங்கிற்கு எதிரில்தான் படுத்திருந்தார். நிச்சயம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருப்பார்.
-Ganesh Babu

கருத்துகள் இல்லை: