வியாழன், 22 மார்ச், 2018

பினராய் விஜயன் ஆர்எஸ்எஸ் மீது குற்றச்சாட்டு! சட்டவிரோத ஆயுதப் பயிற்சி..



மின்னம்பலம்: ஆர்எஸ்எஸ், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகள் சட்டவிரோத ஆயுதப் பயிற்சி மேற்கொள்வதாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கேரளாவில் உள்ள கோயில்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் சில அமைப்புகள் சட்டவிரோத ஆயுதப் பயிற்சி எடுத்துவருவதாகவும் இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எனவும் காங்கிரஸ் உறுப்பினர் வி.டி.சதீசன் கேரள சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 22) கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய பினராயி விஜயன், “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, சோசலிஸ்ட் டெமாகிரெட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் ஆர்எஸ்எஸ் போன்றவை ஆயுதப் பயிற்சியை சட்டவிரோதமாக வழங்கிவருகின்றன. வழிபாடு நடத்தும் இடத்தில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. வழிப்பாட்டு தலங்கள், பள்ளி மைதானங்கள் மற்றும் தனியார் இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு கம்புகளைக் கொண்டு பயிற்சி வழங்குகிறது. இது போன்ற செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், பொது இடங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களில் நடத்தப்படும் இத்தகைய ஆயுதப் பயிற்சிகளைத் தடை செய்வதற்கு சட்டமும் இயற்றப்படும்” என எச்சரித்தார்.

மேலும், இது போன்று நடைபெறும் ஆயுதப் பயிற்சி தொடர்பாக தகவல்கள் தெரிவிப்பவர்களின் அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும் பினராயி உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, பினராயி விஜயனின் கருத்துக்கு யோகா குரு ராம்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியுள்ளேன். ஆர்எஸ்எஸ் ஒரு நக்சலைட் அமைப்பு அல்ல. அவர்கள் ஒரு தேசியவாத அமைப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் நாட்டிற்கு எதிராக எதையும் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: