வியாழன், 22 மார்ச், 2018

கேரளா பேராசிரியர் ஜுஹர் இன் பெண்களின் மார்பகம் தர்பூசணி பேச்சக்கு கடும் எதிர்ப்பு போராட்டம்

மின்னம்பலம் :கேரளா முழுவதும் பரவிய மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் தங்கள் மார்பகங்களின் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர். கோழிக்கோட்டில் உள்ள ஃபாருக் பயிற்சிக் கல்லூரியின் பேராசிரியர் ஜுஹர், பெண்கள் ஹிஜாப்பை சரியாக அணிவதில்லை; துண்டு துண்டாக வெட்டப்பட்ட தர்பூசணி போன்று தங்களது மார்பகங்களைக் காட்டுகின்றனர் என்று கூறியதே,இந்தப் போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் தர்பூசணிப் பழத் துண்டைப் பேராசிரியருக்கு அனுப்பிவைக்கின்றனர். சில மாணவிகள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வளாகத்தில் பேரணி நடத்தினர். இந்த மாணவிகளுக்கு, அருகிலுள்ள கல்லூரி மாணவர்களும் ஆதரவு தருகின்றனர்.
சமூக அறிவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஒரு பேராசிரியர் பெண்களை இந்த முறையில் பேசினால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? இவர்களிடம் எப்படி இளைய தலைமுறையைச் செம்மைப்படுத்தும் பணியை ஒப்படைப்பது?
இவரைப் போன்ற ஆசிரியர்கள் பாலியல் கருத்துகளை மட்டுமே கூற முடியும். இவர்கள் ஆணாதிக்கம் மற்றும் பாலியல் வன்முறை உள்ள இந்த சமூகத்தில் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
பெண்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் வாழ வேண்டும்; ஆணாதிக்கம் மற்றும் சமூக எதிர்ப்பார்ப்புகளிலிருந்து பெண்கள் விடுபட வேண்டும் என்பதை இந்த பேராசிரியர் மறுக்கிறார். பெண்கள் எதை அணிய வேண்டும், எப்படி அணிய வேண்டும் என்பது மற்றவர்களது விருப்பமாகவே இருக்கிறது. பெண்கள் உடை என்று வரும்போது, தனிமனித உரிமையை மறந்து, சமூக எதிர்பார்ப்புகளே முன்நிற்கின்றன.
பேராசிரியர் கருத்து தெரிவித்த விதம் சர்ச்சைக்குரியதுதான் என்று பெரும்பாலானவர்கள் ஒப்புக்கொண்டாலும், அதற்காக பெண்கள் தங்களது மார்பகங்களைக் காட்டி போராட்டம் செய்ய வேண்டுமா என அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஃபெமினிசம்.காம் (www.feminisminindia.com) என்னும் தளத்தில் இந்தக் கருத்துக்கள் பதிவாகியிருக்கின்றன.
அன்றிலிருந்து இன்று வரை பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை சமூகமே தீர்மானிக்கிறது. பெண்களுக்கு தனிமனித உரிமை அளிக்கப்பட்டிருந்தும், அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் அது சமூகத்தின் கையில்தான் இருக்கிறது. இது தனக்கு உகந்ததல்ல என்று பெண்களே ஒதுக்குவது வேறு, இதை செய்யக் கூடாது என்று மற்றவர்கள் வற்புறுத்துவது வேறு. அனைத்து துறைகளில் பெண்கள் கால் பதித்தும், ஆண்களுக்கு இணையாக சம்பளம் வாங்கிய பின்பும், பெண்களின் ஆடைக் கட்டுப்பாடு ஆண்கள் மற்றும் சமூகத்திடமே இருக்கிறது. இதுதான் இதுபோன்ற பிரச்சினைகளுக்குக் காரணம் என்றும் அந்த இணையதளம் கருத்து வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: