ஞாயிறு, 21 ஜனவரி, 2018

உன் எந்த கடவுளையும் விட உன் பணம் பெரிது. அதற்கு போராடு.

Shalin Maria Lawrence : தமிழக அரசாங்கம் எனும் கொடூரம்
1.நான் வடசென்னை போகும்போது யோசிப்பேன்.ஏன் இந்த சேரிகள் பராமரிப்பிலாமல் இருக்கின்றன ? சென்னை முழுவதும் துப்புரவு தொழிலாளிகளாய் அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்க ஆனால் அவர்கள் இல்லங்களை சுத்தி இருக்கும் கழிவுகளை அகற்ற யாரும் கிடையாது. அங்கே கழிவு நீரும் ,குப்பையும் தேங்கி கிடப்பது எதனால் என்று யோசித்திருக்கிறேன். அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது.
அவர்கள் சுத்தத்தில் இருந்து பழக்கப்பட்டுவிட்டால் அவர்கள் மற்றவர்களின் அழுக்கை எவ்வாறு கையால் அல்ல துணிவார்கள் ? அவர்கள் தெருக்கள் சுத்தமாக இருந்து விட்டால் அவர்கள் பாதாள சாக்கடையில் எப்படி இறங்குவார்கள் ? முகம் சுளிப்பார்கள் அல்லவா ?
அவர்கள் கடைசி வரை அழுகுக்கும் அசுத்தங்களுக்கும் நடுவில் வாழ வேண்டும் அவர்கள் கடைசி வரை தங்களுக்கு மற்றவர்களின் அசிங்கத்தை எந்த கூச்சமும் இல்லாமல் அள்ள வேண்டும். ஒரு கிருமியை போல.
2.அரசு பள்ளிகள் அதிகம் இருக்கின்றன,அவைகளில் சரியான கட்டமைப்பு இருக்கின்றது. ஆனால் அவைகளின் பராமரிப்பு சரியாக இருக்காது.
பொதுவாக அதன் கழிப்பிடங்கள் சரியாக இருக்காது ,லேப் இருக்கும் ஆனால் அதில் உபகரணங்கள் சரியாக இருக்காது.ஆசிரியர்கள் அதிக அளவில் பணி ஒழுக்கத்தை கடைபிடிக்க மாட்டார்கள்.எதனால்?

இந்த அரசு பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில் தான் வருகின்றன.இந்த அரசு நினைத்தால் இந்த பள்ளிகளை பளபளவென ,தேவையான எல்லா அத்தியாவசிய கட்டமைப்புகளுடன் ,கண்காணித்து அவைகளை சிறப்பாக நடத்த முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள் .
அவர்களை பொறுத்தவரை இந்த பள்ளிகள் எவ்வளவு மோசமான முறையில் இருக்கவேண்டுமோ அவ்வளவு மோசமான நிலையில் இருந்தால் தான் மக்கள் தனியார் பள்ளிகளை நோக்கி படையெடுப்பார்கள். அதிக அளவில் தனியார் பள்ளிகளுக்கு இந்த மாநிலத்தில் இடம் கொடுக்கும் கையோடு அவர்கள் செய்யும் அடுத்த விஷயம் அரசு பள்ளிகளை இன்னும் சீர்குலைப்பது.
3.இங்கே தமிழ்நாட்டில் பேருந்து சேவை எப்படி இருக்கிறது ?
கடைசி வரை இங்கு அரசாங்க பேருந்துகள் கேவலமான நிலையில் உடைந்தது ,அபாயகரமாகதான் இருக்கும்.
அவை சரி செய்யப்படாது .டிக்கட் விலையும் அதிகரித்து கொண்டே இருக்கும்.
ஏன்?
அரசு பேருந்துகளை சரி செய்து விலையை குறைத்தால் ola மற்றும் uber முதலாளிகள் கோடிகளை எப்படி குவிப்பார்கள்?
ஆசிங்கமான பஸ்ஸில் உயிரை பணயம் வைத்து 33 ரூபாயில் சென்று வருபவர்கள் இனி அதே தூரத்தை வரை ola வில் 40 ரூபாயில் குளு குளு என்று சென்று வரலாம்.
இதுதான் கணக்கு.
நீங்கள் அரசாங்கத்தை திட்டுவதை பற்றியோ இல்லை மீம் போடுவது பற்றியோ இந்த வெட்கங்கெட்ட அரசிற்கு கவலை இல்லை.
அவர்களுக்கு தேவை எல்லாம் ஒவ்வொரு தேர்தலிலேயும் அவர்கள் செலவழிக்கும் பணத்தில் 1000 மடங்கு அதிகம் சம்பாதித்து சுருட்டி கொண்டு ஒடுவதே.
அவர்களுக்கு தேவையெல்லாம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து பெற போகும் கமிஷன் மட்டுமே.
மக்களின் நிம்மதி ,மகிழ்ச்சி எல்லாம் இவர்களுக்கு கால் காசுக்கு பிரயோஜனம் இல்லை.
நம்மிடம் நிலவும் ஏற்ற தாழ்வுதான் அவர்களின் முதலீடு.
நாம் ஆண்டாள் மண்ணாங்கட்டி என்று அடித்து கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் நமக்கு பெரிய நாமத்தை போட்டுக்கொண்டே இருக்கும்.
ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
இங்கே பணம்தான் கடவுள்.
சுயமரியாதைக்கு அடுத்து உன் கையில் உள்ள பணத்திற்கு பிரச்சனை வருமென்றால் அதற்கு போராடுவது மட்டுமே நமது கடமையாகும்.
உன் எந்த கடவுளையும் விட உன் பணம் பெரிது.
அதற்கு போராடு.
ஷாலின்

கருத்துகள் இல்லை: