ஞாயிறு, 26 நவம்பர், 2017

கேரளா தடுப்பூசி எதிர்ப்பு அரிவாளிகள் தாக்கி கையை முறித்துள்ளனர்


Palanivel Manickam : சமீபத்திய செய்தி - Dr.ஃபரூக் அப்துல்லா
சிவகங்கை
மீசில்ஸ் மற்றும் ரூபெல்லா தடுப்பூசி திட்டம் கேரளாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு மலப்புரத்தில் தடுப்பூசி பணி செய்து கொண்டிருந்த செவிலியர் ஒருவரை பிற்போக்குவாதி தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் தாக்கி கையை முறித்துள்ளனர்
கல்வியறிவில் கிட்டத்தட்ட 100 சதவிகிதத்தை அடைந்து விட்ட கேரளாவில் நடந்த இந்த நிகழ்வை பனிமலையின் உச்சியாகத் தான் பார்க்கிறேன்..
அந்த நிகழ்விற்கு எனது கடும் எதிர்ப்பையும் அந்த சமூக விரோதிகளுக்கு தக்க தண்டனையின் மூலம் சரியான பாடம் புகட்டப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்
இந்த சூழ்நிலையில், தடுப்பூசியால் நம்மிடையே காணாமல் போன ஒரு நோயை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்
அந்த நோய், ரண ஜன்னி எனும் டெட்டானஸ் (tetanus)
ஆம்.. தற்போது மருத்துவ மாணவர்களுக்கே காணக்கிடைக்காத ஒரு நோயாகி விட்ட இந்த ரண ஜன்னிக்காக முப்பது வருடங்களுக்கு முன்பு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி வார்டு ஒதுக்கப்படும் அளவு நோயாளிகள் இருந்தனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
டெட்டானஸ் எனப்படும் நரப்பிசைவு நோய்
நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒரு கிருமியால்( க்லாஸ்ட்ரிடியம் டெடானி) உருவாகக் கூடியது.

நமது வெளியில் இந்த கிருமிக்காக ஸ்போர்கள் எங்கும் காணப்படுகின்றன.
நமக்கு வெளிக்காயங்கள், ஆணி, முள் தைப்பது, தீக்காயம் போன்ற விபத்துகளால் நமது தோல் எனும் அரண் சேதமாகும் போது இந்த கிருமி நம்முள்ளே வந்து இந்த நோயை ஏற்படுத்தும்
கிட்டத்தட்ட 100 சதவிகிதம் மரணம் தான்.
நான் மருத்துவம் பயில்கையில் ஒரே ஒரு முறை இந்த டெடானஸ் நோயால் பாதிக்கப்பட்ட வயதான முதியவரை கண்டேன். மிகப்பெரும் அதிசய நிகழ்வாய் இன்னும் என் நினைவில் உள்ளது. மூன்று நாட்களில் அவர் இறந்து விட்டது சோகக் கதை. அவர் இறந்த சூழலை பார்த்த பின்பு தான் இந்த டெடானஸ் தடுப்பூசியின் மகத்துவத்தை நானே முழுமையாக உணர்ந்தேன்
அவர் மரம் வெட்டும் கூலித்தொழிலாளி. பத்து நாட்களுக்கு முன்பு மரம் வெட்டுகையில் காட்டு முள் அவரது காலை தைத்துள்ளது . அவருக்கு டிடி தடுப்பூசி போட வேண்டும் என்று தெரியவில்லை போலும்.
அவர் எப்படி இறந்தார் என்று கூறுகிறேன்..
அவரது தாடை தசைகள் இருகிக் கொண்டது ( lock jaw)
தண்ணீரை கூட பருக முடியவில்லை
உடல் வில் போன்று வளைந்து கொண்டது .. சொட்டு சொட்டாக அவரது மனைவி அவருக்கு நீரை நாக்கில் விட்டுக் கொண்டிருக்க, ஐவி திரவங்கள் ஏறிக்கொண்டிருக்க மூன்றாம் நாள் உயிர் பிரிந்தது.
என்னால் என் வாழ்நாள் முழுவதும் இந்த பாடத்தை மறக்கவே முடியாது.
எந்த வெளிப்புண் ஏற்படினும் இந்த டிடி தடுப்பூசியை முதலில் எனக்கு போட்டுக்கொள்வேன் . என்னை சந்திக்க வருபவர்களுக்கும் நிச்சயம் போட்டுவிடுவேன்.
பொறுங்கள்...
நம்மிடம் மற்றொரு கதையும் இருக்கிறது..
ஆம்.. இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை
குழந்தைகள் வீட்டில் பிறந்து வந்தனர்
அப்போது இந்த டிடி தடுப்பூசி ஊசி பிரபலமாகவில்லை
பிறந்த குழந்தையின் நஞ்சுக் கொடியை சுத்தமற்ற ப்ளேடு கொண்டு வெட்டுவது, சாணி தொட்டு வைப்பது போன்ற செயல்களால் பிறந்த குழந்தைகளுக்கு டெடானஸ் நோய் வருவது மிக சகஜமாகவும் அதனால் குழந்தை இறப்பது மிக சகஜமாகவும் இருந்தது .
ஆண்டுதோறும் சுமார் ஐந்து முதல் பத்து லட்சம் குழந்தைகள் இந்த ரணஜன்னிக்கு இறந்து வந்தனர்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு அவர்கள் கர்ப்ப காலத்தில் இரண்டு டெடானஸ் தடுப்பூசி போடுவதை அரசு கட்டாயமாக்கியதும், குழந்தை பிறப்பை முழுவதுமாக நிறுவனப்படுத்தியதும் , தூய்மையான குழந்தை பிறப்பை உறுதி செய்தமையாலும் கடந்த ஆகஸ்ட் 27, 2015 அன்று முதல் இந்தியா குழந்தை மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு டெடானஸ் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது.
டிடி எனும் வெறும் பதினைந்து ரூபாய் மதிப்புள்ள தடுப்பூசி ( அரசால் இலவசமாக போடப்படும் இந்த ஊசியால் இன்றும் பல உயிர்கள் காக்கப்பட்டு வருகிறது என்பதை பதிவு செய்கிறேன்.
தடுப்பூசியை எதிர்ப்பவர்கள் நிச்சயம் மனநலன் பாதிப்பட்ட சமூக விரோதிகளாகத் தான் இருப்பார்கள்
தங்களை இவர்களிடம் இருந்து காத்துக் கொள்வது தங்களின் தனிப்பட்ட கடமை

கருத்துகள் இல்லை: