ஞாயிறு, 26 நவம்பர், 2017

எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு பன்னீர்செல்வம் அழைக்கப்படவில்லை

எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லைமாலைமலர் : மதுரையில் நேற்று எடப்பாடி பழனிசாமி கலந்து மதுரை: ராமநாதபுரத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு செல்லும் வழியில், மதுரை தோப்பூரில் 100 அடி உயர கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றிவைத்தார். இந்த விழா நடந்த சமயத்தில், துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் தான் இருந்தார். ஆனால் அவர் விழாவில் பங்கேற்கவில்லை. அதேபோல் முன்பு ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் சரவணன் (மதுரை தெற்கு), மாணிக்கம் (சோழவந்தான்) ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு முறையான தகவல் தெரிவிக்காததால், அவர்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


மேலும், விழா தொடர்பான கல்வெட்டிலும் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம் பெறவில்லை.

இதேபோல் இந்த நிகழ்ச்சி தொடர்பாக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களிலும் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.



கொடி ஏற்று விழா முடிந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் பெயர் பொறித்த கல்வெட்டை அவருடைய ஆதரவாளர்கள் தனியாக தயார் செய்து, அவசரமாக அங்கு கொண்டு வந்தனர். அதை அவர்கள் கொடிக்கம்பத்தின் பக்கவாட்டில் பதித்துவிட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. கொடி ஏற்று விழாவில் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணைச் செயலாளர் ஹரி பிரபாகரன், டுவிட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

“கழகத்தின் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து தலைவர் எம்.ஜி.ஆருக்கு நினைவு கம்பம். இதுகூட தெரியாதா முதல்வருக்கு? தெரிந்தும் தெரியாமல் இருக்கிறாரா? அ.தி.மு.க. தொண்டன் என்பவன் தலைமைக்கு கட்டுப்பட்டவன். கட்டப்பட்ட கைகளோடு காத்துக்கொண்டிருக்கிறோம், தலைவரின் பதிலுக்காக”... என்று எழுதி இருக்கிறார்.

இந்த சம்பவத்தினால் அ.தி.மு.க.வில் தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்றாலும் மதுரை நிகழ்ச்சிக்கு பின்னர் ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை: