வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் கூட்டம் ...

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று ஆகஸ்டு 11 காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுகிறார்.
நாடாளுமன்றத்தில் உள்ள நூலக வளாகத்தில் இன்று பிற்பகல் இந்த கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடக்கிறது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் நிலையில்... இனி வரும் காலங்களில் மத்திய பாஜக அரசை எதிர்த்து மக்கள் மன்றத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டாக செயல்பட்டு போராட்டங்கள் நடத்துவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது. அண்மையில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தன் கட்சியை சேர்ந்த நிதீஷ்குமார் பாஜக ஆதரவுடன் பீகாரில் ஆட்சி அமைத்ததை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

நேற்று டெல்லிவந்து குடியரசுத் தலைவரை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘’வெள்ளியன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பேன். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி அணியை வலிமைப்படுத்துவதே என் நோக்கம்’’ என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கும் இந்த கூட்டத்தில் கலண்டுகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.
அண்மையில் குஜராத்தில் பரபரப்பாக நடந்த ராஜ்யசபா தேர்தலில் தேசியவாத காங்கிரசின் இரு எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸுக்கு வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இதுபற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த நிதீஷ் அரசை எதிர்த்து லாலு பிரசாத் யாதவ் பெரிய அளவிலான பேரணியை நடத்த உள்ளார். அதில் தேசிய அளவிலான அனைத்து எதிர்கட்சிகளின் பிரநிதிகளும் கலந்துகொள்வது பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
சரத் யாத்வ் பீகாரில் இருப்பதால் அவர் தனது பிரதிநிதியை இந்த கூட்டத்துக்கு அனுப்புவார் என்று எதிர்பார்ப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுகவும் இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கிறது. கனிமொழி அல்லது திருச்சி சிவா இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடும். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: