புதன், 9 ஆகஸ்ட், 2017

கதிராமங்கலம் போராளிகளுக்கு பிணை வழங்கியது உயர்நீதிமன்றம்!

கதிராமங்கலம் போராளிகளுக்கு ஜாமீன்!கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கு நேற்று ஆகஸ்ட் 8ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் துரப்பணக் கிணறு அமைத்து செயல்பட்டுவருகிறது. இங்கு எடுக்கும் கச்சா எண்ணெய் பூமியில் குழாய்கள் பதிக்கப்பட்டு அதன் வழியாக குத்தாலத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கதிராமங்கலத்தில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் கிணறால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கச்சா எண்ணெய் கசிவால் விளைநிலங்கள் பாழாகிறது என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 30ம் தேதி கதிராமங்கலத்தில் பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் தீடிரென உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறி விளநிலங்கள் பாழானது. இதனால், விபத்து ஏற்படுமோ என்று அச்சப்பட்ட அந்த கிராம மக்கள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதைத்தொடர்ந்து, ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கதிராமங்கலத்திலிருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று அந்த கிராம மக்கள் ஜூலை 1ம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டதில், கலந்துகொண்ட மீத்தேன் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், தருமராஜ், ரமேஷ் உள்ளிட்ட 8 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடர்ந்து ஜாமீன் மறுத்துவந்தது. கதிராமங்கலம் மக்கள், ஓ.என்.ஜி.சி.நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட ஜெயராமன் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யக் கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, கடந்த ஜூலை 22ம் தேதி பேராசிரியர் ஜெயராமனின் தந்தை தங்கவேலு உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஜெயராமனுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜூலை 26ம் தேதி வரை ஜாமீன் வழங்கியது. ஜாமீன் காலம் முடிவடைந்த பிறகு அவர் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேருக்கும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஆகஸ்ட் 8ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பேராசிரியர் ஜெயராமன், தருமராஜ், ரமேஷ் உள்பட 8 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும், பேராசிரியர் ஜெயராமன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும், மீதமுள்ள 7 பேர் திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலும் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 8 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், கதிராமங்கலம் மக்கள், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிரந்தராமாக வெளியேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: