சனி, 12 ஆகஸ்ட், 2017

பச்சமுத்துவை காப்பாற்றி, நிர்வாணமான அமலாக்கத் துறை.

1012214_142281995976094_1379204759_n
IMG_20170805_173102அமலாக்கத் துறை என்றாலே நம் அனைவருக்கும் ஒரு பிரமிப்பான பார்வை இருக்கும்.  பெரிய இடங்களில் உள்ளவர்களிடம் சோதனை நடத்துவார்கள். கைது செய்வார்கள்.  பல பெரிய இடத்துப் பிரமுகர்களின் தூக்கத்தை கெடுப்பார்கள்  என்று நம் அனைவருக்குமே இது போன்ற அமைப்புகள் மீது பெரும் மரியாதை இருக்கும்.  இதற்கு ஏற்றார்ப்போலவே, அவ்வப்போது, அமலாக்கத் துறை, சோதனை, கைது, சொத்துக்கள் பறிமுதல் என்று பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருக்கும்.

மத்திய புலனாய்வுத் துறையான சிபிஐயைப் பற்றி வெளியுலகுக்கு தெரிந்த அளவுக்கு கூட அமலாக்கத் துறை பற்றி தெரிவதில்லை.  நாமும் அது குறித்து தெரிந்து கொள்ள பெரிய அளவில் மெனக்கிடுவதில்லை.    இந்த அமலாக்கத் துறை செயல்படும் லட்சணம் என்ன என்பது, சமீபத்தில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பில் முழுமையாக அம்பலப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை குறித்து பார்ப்பதற்கு முன்பாக, அந்த துறைக்கு அதிகாரத்தை வழங்கும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டம் குறித்து பார்ப்போம். இந்தியாவில் குற்றவியல் நடைமுறையின் அடிப்படையே, குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீதான குற்றங்களை, குற்றம் சாட்டும் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமற நிரூபிக்க வேண்டும்.   அவர் மீதான குற்றச் சாட்டுகளை நிரூபிக்கும் கடமை அரசுத் தரப்புடையது.   ஆனால், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தில் மட்டும் இது தலைகீழ்.  அமலாக்கத் துறை உங்களை கைது செய்து, உங்கள் மீது ஒரு குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டால் போதும்.  அது பொய் என்று நிரூபிக்க வேண்டியது உங்களது கடமை.  அவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது.   
மேலும், குற்றத்தின் அடிப்படையில் நீங்கள் சம்பாதித்த சொத்துக்கள் என்று அமலாக்கத் துறை எதை கருதுகிறதோ, அதை கண்ணை மூடிக் கொண்டு அட்டாச் செய்து விடுவார்கள்.   அதை நான் சரியான வழிமுறையில்தான் சம்பாதித்தேன் என்பதை நிரூபித்து அந்த சொத்தை மீட்டெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.  அமலாக்கத் துறைக்கு எந்த பொறுப்பும் கிடையாது.    அந்த சொத்தை அட்டாச் செய்வதற்கு முன்பாக, உங்களிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் கூட அமலாக்கத் துறைக்கு இல்லை.
இதை விட கொடுமை என்ன தெரியுமா ?  இந்திய குற்றவியல் நடைமுறைகளின்படி, பெயில்தான் விதி.  ஜெயில் என்பது விதிவிலக்கு.   ஆனால் இந்த சட்டத்தின்படி, ஜெயில் என்பது விதி.  பெயில் என்பது விதிவிலக்கு.   இந்த சட்டத்தின் பிரிவு 45 (1)ன் படி, அமலாக்கத் துறையால் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர், ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகினால், நீதிமன்றம் அவர் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று நம்பினால் மட்டுமே ஜாமீன் வழங்க வேண்டும்.
இந்த சட்டம் அமலாக்கத் துறைக்கு எத்தகைய அதிகாரத்தை வழங்கியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.  இப்படி ஒரு அதிகாரத்தை வைத்திருக்கும் ஒரு அமைப்பு எத்தனை பொறுப்போடு செயல்பட வேண்டும் ?   அந்த அமைப்பு செயல்பட்ட லட்சணம் என்ன என்பதை பார்ப்போம்.
கல்வி வியாபாரி, பாரி வேந்தர் என்கிற பச்சமுத்து, எஸ்ஆர்எம் என்ற கல்லூரி நடத்தி மருத்துவம் பொறியியல் என்று கல்வியை ஏலம் போட்டு கொள்ளை லாபம் அடித்து வந்த விபரங்களை நாம் அறிவோம்.   குறிப்பாக, மருத்துவப் படிப்பில் ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான கோடிகளை பச்சமுத்து, இளங்கலை மற்றும் முதுகலை ஆகிய இரண்டு பிரிவுகளிலும் சம்பாதித்து வந்தார்.  பச்சமுத்துவின் வியாபாரம் சீராகத்தான் போய்க் கொண்டிருந்தது.  நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் வரை.  22 மே 2016 அன்று, அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மட்டுமே என்பதை தமிழக அரசும் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது.

28 மே 2016 அன்று, பச்சமுத்து சம்பாதித்த கருப்புப் பணத்தையெல்லாம் மதன் பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரித்துக் கொண்டிருந்த, பச்சமுத்துவின் வசூல் ஏஜென்டாக இருந்த மதன், திடீரென்று மாயமானார்.  மாயமாவதற்கு முன், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், அதற்கு காரணம் என்ன என்றும் ஒரு நீண்ட விளக்கக் கடிதத்தை எழுதி வைத்து விட்டு காணாமல் போயிருந்தார்.  மதனின் கடிதம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வலம் வந்து கொண்டிருந்தது.   இதையடுத்து மதனின் தாயார் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தன் மகனை காணவில்லை என்று ஒரு புகார் அளிக்கிறார்.
மதனை காணவில்லை என்ற செய்தி பரவத் தொடங்கியதும், மதனிடம் மருத்துவ சீட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் அனைவரும் பதற்றம் அடையத் தொடங்குகின்றனர்.   முதன் முதலில் டாக்டர் ஜெயச்சந்திரன் என்பவர் சென்னை மாநகர காவல்துறையில் புகார் ஒன்றை அளிக்கிறார்.   தன் மகனின் இளங்கலை மருத்துவ படிப்புக்காக மதனிடம் 53 லட்சம் தந்ததாகவும், அதை திரும்பப் பெற்றுத் தரும்படியும் புகார் அளிக்கிறார். இதன் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.  இந்த தகவல் ஊடகங்களில் பரவியதும், சாரி சாரியாக பச்சமுத்து மீதும் மதன் மீதும் புகார்கள் குவிகின்றன.   மொத்தமாக 133 புகார்கள் சென்னை மாநகர காவல்துறையில் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் சீட் பெறுவது தொடர்பாக அளிக்கப்படுகிறது.
காவல்துறை முதல் கட்டமாக, விஜபாண்டியன், பார்கவன் பச்சமுத்து மற்றும் பாபு ஆகியோரை 30 ஜுன் 2016 அன்று கைது செய்கிறது.  காவல்துறையிடம் வந்த நூற்றுக்கணக்கான புகார்களில் பச்சமுத்துவின் மீது தெளிவாக பல்வேறு புகார்கள் சொல்லப்பபட்டிருந்ததால் பச்சமுத்துவை 26 ஆகஸ்ட் 2016 அன்று சென்னை மாநகர காவல்துறை கைது செய்கிறது.  பச்சமுத்து ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கையில், நீதிமன்றம் 75 கோடியை கட்டினால் ஜாமீன் தருவதாக உத்தரவிடுகிறது. பச்சமுத்து அதே தினத்தில் 75 கோடியை கட்டி ஜாமீனில் வெளிவருகிறார்.
Master
WhatsApp
21 ஜனவரி 2017 அன்று காவல்துறை திருப்பூரில் வைத்து தலைமறைவாக உள்ள மதனை கைது செய்கிறது.   மதன் ஜாமீன் கேட்கையில், அவர் 10 கோடி கட்டினால் அவரை ஜாமீனில் விடுதலை செய்வதாக நீதிமன்றம் உத்தரவிடுகிறது.  மதன், தன்னிடம் 10 கோடி ரூபாய் இல்லையென்று நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார்.  இதற்கிடையே தன் மீதான எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்று பச்சமுத்து உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார்.   அந்த மனு மீது விசாரணை நடக்கையில்,   மதன் கட்ட வேண்டிய 10 கோடியையும் தானே செலுத்துவதாக உத்தரவாதம் தருகிறார்.
இந்த உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பச்சமுத்து 10 கோடிக்கான வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும், மதன், தன் பெயரில் விருகம்பாக்கம், வடபழனி மற்றும் உத்தராகாண்டில் உள்ள 6 சொத்துக்களின் அசல் பத்திரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.  இதன் அடிப்படையில் மதன் ஜாமீனில் வெளியே வருகிறார்.
22 மார்ச் 2017 அன்று,      அமலாக்கப் பிரிவு, வழக்கு ஒன்றை பதிவு செய்கிறது.   அந்த வழக்கின் விசாரணைக்காக, மதன், பச்சமுத்து, பச்சமுத்துவின் பிஏ சுகுமார் மற்றும் பணம் கொடுத்து ஏமாந்த பெற்றோர்களில் சிலர் ஆகியோரை அழைத்து விசாரிக்கிறது.  விசாரணையின் இறுதியில் மதன் 23 மே 2017 அன்று கைது செய்யப்படுகிறார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி, ஒருவர் கைது செய்யப்பட்டு 60 நாட்களுக்குள் அமலாக்கப் பிரிவு அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  அப்படி செய்யத் தவறினால் அவர் 60 நாட்கள் இறுதியில் விடுதலை செய்யப்பட வேண்டும்.  60 நாட்கள் முடிவதற்கு சரியாக ஒரு நாளுக்கு முன், 21 ஜுலை 2017 அன்று மதன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது அமலாக்கத் துறை.
இதையடுத்து மதன் ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கிறார்.  அந்த ஜாமீன் மனுவுன் தீர்ப்பில்தான் அமலாக்கத் துறை உரித்து உப்புக் கண்டம் போடப்பட்டுள்ளது.
இனி நாம் நீதிபதியின் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.
“காவல்துறை (சென்னை மாநகர காவல்துறை பதிவு செய்த வழக்கு), பச்சமுத்து மதனை gணம் வசூல் செய்ய பயன்படுத்திக் கொண்டார் என்றே வழக்கு தாக்கல் செய்துள்ளது.    ஆனால் அமலாக்கத் துறை, மதன் தன்னிச்சையாக 133 பெற்றோர்களிடம் பணத்தை வசூல் செய்து, பச்சமுத்துவிடம் கொடுக்காமல் அந்த பணத்தை வைத்து நான்கு சொத்துக்களை வாங்கியுள்ளார் என்று கூறுகிறது.   அமலாக்கத் துறை எந்த அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளது என்றால், பச்சமுத்து, ‘நான் மதனை பணம் வசூலிக்கச் சொல்லி கூறவில்லை.   மதன் என்னிடம் பணம் கொடுக்கவும் இல்லை’ என்ற வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே.
பச்சமுத்து “ஆமாம் நான்தான் மதனை மாணவர்களிடமிருந்து பணம் வசூலிக்கச் சொன்னேன்.  மதன் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டார்”  என்று கூறுவார் என்று அமலாக்கத் துறை எப்படி எதிர்ப்பார்க்கிறது என்பதுதான் புரியவில்லை. ஒரு வேளை அமலாக்கத் துறை அதிகாரிகள் கத்தோலிக்க பாதிரியார்களாக இருந்து அவர்களிடம் உண்மையை சொன்னால் நமக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்று பச்சமுத்து நம்பியிருந்தால் மட்டுமே அப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்தை கொடுத்திருப்பார்.
பச்சமுத்துவுக்காக டஜன் கணக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராகி ஆதரவு தருகையில் அவர் அப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்தை தருவார் என்று அமலாக்கத் துறை எப்படி நம்பியது என்று புரியவில்லை.
அமலாக்கத் துறையின் வழக்கு என்னவென்றால், 133 பெற்றோர்கள் மொத்தமாக 91 கோடியை கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள்.   மதன் அதிலிருந்து நான்கு சொத்துக்களை வாங்கியுள்ளார்.  அந்த சொத்துக்களின் மதிப்பு 6,34,50,000.  அமலாக்கத் துறையின் இந்த கூற்றை அப்படியே ஏற்றுக் கொண்டால் கூட, மீதம் உள்ள 84 கோடியே 65 லட்சம் எங்கே போயிற்று ?
அமலாக்கத் துறை குறிப்பிடும் நான்கு சொத்துக்கள் பின் வருமாறு.   15.02.2016 அன்று வாங்கப்பட்ட வடபழனியில் 1235 சதுர அடி நிலம்.  மதிப்பு 1.90 கோடி.  05.04.2016 அன்று, வாங்கப்பட்ட சாலிகிராமத்தில் உள்ள 1119.12 சதுர அடி நிலம்.  மதிப்பு 4.25 கோடி. 15.03.2013 அன்று வாங்கப்பட்ட கேரள மாநிலம் கொல்லத்தில், 2.93 ஏக்கர் வீடு மற்றும் நிலம். மதிப்பு 9.50 லட்சம்.  08.10.2007 அன்று, கேரள மாநிலம் கொல்லத்தில் வாங்கப்பட்ட 3.23 ஏக்கர் நிலம். மதிப்பு 10 லட்சம்.
அமலாக்கத் துறையின் கூற்றுப்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மதன் ஐந்து முறை விசாரிக்கப்பட்டிருக்கிறார்.    அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்.
கேள்வி : உங்கள் இரண்டு மனைவிகள் பற்றியும், இருப்பிட முகவரி பற்றியும் கூறுங்கள்.
பதில் : என் முதல் மனைவி பெயர் சிந்து.  அவர் 762, 4வது அவென்யூ, அண்ணா நகர், சென்னையில் வசிக்கிறார்.  2015ம் ஆண்டு விவாகரத்துக்காக விண்ணப்பித்தேன்.  சமீபத்தில் அந்த மனுவை வாபஸ் வாங்கி விட்டேன்.   எனது இரண்டாவது மனைவி பெயர் சுமலதா.  அவர் என்னோடு, 15, ஆப்பிள் ப்ளாக், அப்பாசாமி ஆர்ச்சிட், வடபழனி என்ற வீட்டில் வசித்து வருகிறார்.  என் பெற்றோரும் என்னோடு வசிக்கிறார்கள்.   
கேள்வி : 2015-17 ஆண்டு காலத்தில் நீங்கள் வாங்கிய அசையா சொத்துக்கள் பற்றி கூறுங்கள்.  
பதில் : வடபழனியில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன்.  அதன் மதிப்பு 2 கோடி.  ஆக்சிஸ் வங்கி ராமாபுரம் கிளையில் கடன் வாங்கி அதை வாங்கினேன்.  வடபழனியில் 800 சதுர அடி வீடு வாங்கினேன்.  அதன் மதிப்பு 25 லட்சம்.   ரூர்கியில் என் நண்பர் பெயரில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன்.  அதன் மதிப்ப 7 லட்சம்.   கங்கை கரையில் ஒரு சொத்து வாங்குவதற்காக 75 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன்.  ஆனால் அது என் பெயரில் பதிவு செய்யப்படவில்லை.   ஒரு பிஎம்டபிள்யூ கார் வாங்கினேன்.  அது என் நண்பர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதுவும் வங்கிக் கடன் மூலம் வாங்கினேன்.   இந்த சொத்து பத்திரங்கள் அனைத்தும் சென்னை மாநகர காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு விட்டன.”
இதுதான் மதனிடம் அமலாக்கத் துறை கேட்ட முக்கிய கேள்விகள்.  இந்த கேள்விகளை பரிசீலனை செய்கையில், வெகு எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய விஷயம், அமலாக்கத் துறை, மதனின் இரண்டு மனைவிகள் பற்றியும், யாருடன் அவர் நிரந்தரமாக வசிக்கிறார் என்பது பற்றியும் அதிக அக்கறை காட்டியுள்ளது என்பதே.   அமலாக்கத் துறை அதிகாரி கேட்கத் தவறிய முக்கியமான கேள்வி “இந்த சொத்துக்களை வாங்க உங்களுக்கு இந்த பணம் எங்கிருந்து வந்தது” என்பதே.  இதை கேட்க, பிரபல துப்பறிவாளர் ஷெர்லாக் ஹோல்ம்ஸின் அறிவு வேண்டியது இல்லை.  சராசரி அறிவு இருந்தாலே போதும். மதனி இந்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மதனின் சொத்துக்களை பறிமுதல் செய்தது அமலாக்கத் துறை.
இந்த சொத்துக்களை வாங்க பணம் எங்கிருந்து வந்தது என்று மதனிடம் கேட்டு, அவர் அதற்கு பொய்யாக பதில் அளித்திருந்தால், மதனுக்கு குற்ற உணர்வு உள்ளது என்ற முடிவுக்கு வர முடியும்.
அரசு வழக்கறிஞர், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை பிரிவு 24ஐ சுட்டிக் காட்டி, சட்டபூர்வமாக சம்பாதித்த பணத்தில்தான் சொத்து வாங்கினேன் என்று நிரூபிக்க வேண்டியது மதனின் கடமை என்று கூறினார்.  உண்மைதான்.  இது எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்றால், மதனுக்கு எதிராக போதுமான ஆதாரங்களை அமலாக்கத் துறை நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கும்போதுதான்.
இந்த வழக்கில் பச்சமுத்து 75 கோடியை நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.  மதனுக்காக மேலும் ஒரு 10 கோடியை செலுத்தியுள்ளார்.  ஆனால் இதைப் பற்றி அமலாக்கத் துறை கண்டு கொள்ளவேயில்லை.  ஆனால் மதன் வாங்கி நான்கு சொத்துக்களும் 133 பெற்றோர்களிடம் வசூலித்த பணத்தில்தான் வாங்கப்பட்டது என்று அமலாக்கத் துறை அடித்து கூறுகிறது.
மதனின் சொத்துக்களின் அசல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.  அதன்படி, மதன் சிறையில் இருந்தபடியே, அந்த சொத்துக்களை வாங்க தனக்கு பணம் எப்படி வந்தது என்பது குறித்து, சிறைக் கண்காணிப்பாளர் முன்பாக ஒரு வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  அந்த வாக்குமூலத்தைக் கூட படிக்காமல், அமலாக்கத் துறை எப்படி தன் விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்தது ?
அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ள இந்த 4 சொத்துக்கள் குறித்தும், சென்னை மாநகர காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கின் புலனாய்வு அதிகாரி இந்த நீதிமன்றத்தில் அறிக்கையைக தாக்கல் செய்துள்ளார்.   அதில் அவர் இந்த சொத்துக்களின் மதிப்பை குறைத்து கூறுகிறார்.  அமலாக்கத் துறையின் கூற்றுப்படியே, சொத்துக்கள் மூன்று மற்றும் நான்கு ஆகியவை 2013 மற்றும் 2007ம் ஆண்டில் வாங்கப்பட்டுள்ளன.    இந்த வழக்கில் பணம் வசூல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஆண்டு 2015 மற்றும் 2016.
மீதம் உள்ள சொத்துக்கள் 1 மற்றும் 2.  இதில் இரண்டாவது சொத்துதான் விலை அதிகமுள்ளது.  4.25 கோடி.  இது குறித்து சொத்துக்களின் பத்திரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டபோது, மதன் நீதிமன்றத்தில் என்ன வாக்குமூலம் தாக்கல் செய்திருக்கிறார் என்பதை பார்ப்போம்.
ஆக்சிஸ் வங்கி அம்பத்தூரில் இந்த சொத்து வாங்குவதற்காக கடன் கேட்டேன்.  மொத்த சொத்து மதிப்பான 3 கோடி 7 லட்சத்தில் எனக்கு 1 கோடி 90 லட்சம் கடனாக வழங்கப்பட்டது.  மாதம் 2.20 லட்சம் தவணையாக கட்டி வருகிறேன்.
வங்கியில் கடன் வாங்கித்தான் மதன் இந்த சொத்தை வாங்கியுள்ளார் என்பது தெளிவாகிறது.
அடுத்த சொத்தை பார்ப்போம்.  இந்த சொத்து மதனின் உறவினர் கனகசபாபதி என்பவருக்கு சொந்தமானது.  மதன் அந்த சொத்தை 80 லட்சத்துக்கு வாங்கிக் கொள்வதாகவும், ஆகஸ்ட் 2016ல் தனது திரைப்படம் மொட்ட சிவா, கெட்ட சிவா ரிலீசானதும் பணத்தை தருவதாகவும் கூறியுள்ளார்.   30 ஆகஸ்ட் 2016 பின் தேதியிட்டு 20 மற்றும் 40 லட்சத்துக்கு இரண்டு செக்குகளை மதன் வழங்கியுள்ளார்.  அதற்குள் மதன் தலைமறைவாகி, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் கனகசபாபதிக்கு பணம் போய் சேரவில்லை.   இதன் காரணமாக, மதனுக்கு அந்த சொத்து வரவில்லை. இன்று வரை அந்த சொத்து கனகசபாபதி பெயரிலேயே இருக்கிறது.
vishal-suseenthiran-vendhar-movies-vishal-19-12
சொத்துக்கள் 1 மற்றும் 2 குறித்து மதன் தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.   133 பெற்றோர்களிடம் வசூல் செய்த தொகையில் மதன் இந்த சொத்துக்களை வாங்கவில்லை என்பது தெளிவாகிறது.  மதன் பணமேயில்லாதவர் என்று அமலாக்கத் துறையும் கூறவில்லை.   மதன் எஸ்ஆர்எம் நிறுவனத்தின் ப்ரோக்கராக மட்டுமல்லாமல் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.  வருமான வரி தொடர்ந்து செலுத்தி வருகிறார்.
இந்த நீதிமன்றம் கவலையோடு பார்க்கும் மற்றொரு விவகாரம் என்னவென்றால், பணத்தை கொடுத்து 133 பெற்றோர்கள் ஏமாந்துள்ளார்கள். ஆனா அவர்களில் வெறும் 7 பேரிடம் மட்டுமே அமலாக்கத் துறை விசாரணை நடத்தியுள்ளது.  அந்த 7 பேரின் வாக்குமூலங்களிலும் பச்சமுத்துவின் பெயர் எந்த இடத்திலும் வரவில்லை.
இந்த 7 பேருமே பணத்தை பறி கொடுத்ததாக சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்கள்.   இந்த 7 பேரில் 2 பேர், சென்னை காவல்துறையிடம் அளித்த தங்கள் புகாரில், பச்சமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளார்கள்.  அதிலும் நான்சி என்பவர், பச்சமுத்துவை நேரில் சந்தித்து தன் மகனுக்காக எம்பிபிஎஸ் சீட் கேட்டதாகவும், அப்போது அவர் தன் மகன் ரவியையும், மதனையும் சந்திக்குமாறு அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதே போல தட்சிணாமூர்த்தி என்பவர் பச்சமுத்துவை சந்தித்து தன் மகனுக்கு எம்எஸ் சீட் கேட்டபோது, மதனை சந்தித்து 1.05 கோடி தருமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.  ஆனால் அமலாக்கத் துறை இந்த இருவரிடமும் பதிவு செய்துள்ள வாக்குமூலங்களில் பச்சமுத்துவை சந்தித்தது குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை.
VC
இந்த 7 பேரை தவிரவும் 50 பேர் சென்னை காவல்துறைக்கு அளித்த புகாரில், பச்சமுத்துவின் பெயரை குறிப்பிட்டுள்ளார்கள்.  133 பேர் பணத்தை பறிகொடுத்திருக்கையில், வெறும் 7 பேரின் புகாரை மட்டும் அமலாக்கத் துறை பதிவு செய்தது ஏன் ?   அதுவும் அந்த 7 பேரிடமும் வாக்குமூலத்தை திரித்து வாங்கியுள்ளது ஏன் ?  யாரை காப்பாற்ற முனைகிறார்கள் ?
இந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், மற்றவர்கள் மீது புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும், மதன் மீது மட்டும் விசாரணை நிறைவு பெற்றதாகவும் தெரிவித்தார்.
அவரின் இந்த கருத்திலிருந்து தெளிவாகத் தெரியும் விஷயம் என்னவென்றால், மதன் வெளியே வந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவசர கதியில் விசாரணையை அள்ளித் தெளித்த கோலம் போல முடித்துள்ளனர் என்பதே.   மேலே கூறிய காரணங்களினால், அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையில் மதன் மீது இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.
மதனை ஜாமீனில் விடுவதற்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டம் விதிக்கும் இரண்டாவது நிபந்தனை, குற்றவாளி ஜாமீனில் உள்ள காலத்தில் மீண்டும் இந்த குற்றத்தை புரியக் கூடாது என்பதே.  133 பெற்றோர்களிடம் மதன் பணம் வாங்கி ஏமாற்றினார் என்பதைத் தவிர, அமலாக்கத் துறை மதன் இதற்கு முன்னால் வேறு குற்றம் புரிந்துள்ளார் என்று கூறவில்லை.   மதனின் பெயர் முழுமையாக அம்பலாமாகியுள்ளதால் இனி அவரை யாரும் ப்ரோக்கராக பயன்படுத்த வாய்ப்பு இல்லை.  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் வேறு குற்றம் என்று குறிப்பிட்டுள்ளது, போக்குவரத்து விதி மீறலையோ, வரதட்சினை கேட்பதையோ அல்ல.
இந்த நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை பரிசீலிக்கையில், இந்த விவகாரத்தில் மதன் தனியாக செயல்படவில்லை என்பது தெளிவாகிறது.  மிக மிக நேர்த்தியான ஒரு சின்டிக்கேட் செயல்பட்டுள்ளது.  பணம் கொழுப்பெடுத்த பெற்றோர்கள் தங்களின் மக்கு பிள்ளைகள் டாக்டர்களாக வேண்டுமென்று, எஸ்ஆர்எம் நிர்வாகத்தை அணுகுகையில், அந்த நிர்வாகம் மதன், குணசேகரன், சுதிர் போன்றோர் பணத்தை வசூல் செய்து வந்துள்ளனர். அந்த பணம் எஸ்ஆர்எம் நிர்வாகத்திடம் சென்றுள்ளது.   இதில் ஒருவர் மாம்பலத்தில் வைத்து, எஸ்ஆர்எம் நிர்வாகத்திடம் பணம் அளித்ததற்கான வீடியோ உட்பட காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.
மதன் காவல்துறையை அணுகாமல், எதற்காக தற்கொலை கடிதம் எழுதி விட்டு தலைமறைவானார் என்று கேட்டபோது, மதனின் வழக்கறிஞர், மதன் இதை செய்திராவிட்டால், தீர்த்துக்கட்டப்பட்டிருப்பார் என்று கூறினார்.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, பிஸ்மார்க் கொள்கைகளின் அடிப்படையில் வளர்ந்த மேற்குலகம், கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசும், மது விநியோகத்தை தனியாரும் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது.  ஆனால் வருந்தத்தக்க வகையில் நம் மாநிலத்தில் இது தலைகீழாக உள்ளது.
இந்த காரணங்களினால், இந்த நீதிமன்றம் மதனுக்கு ஜாமீன் வழங்குகிறது.  அவர் புனிதர் என்பதால் அல்ல.  அவரை தொடர்ந்து சிறையில் வைக்க போதுமான ஆதாரங்களை அமலாக்கத் துறை சமர்ப்பிக்கத் தவறியது என்பதாலேயே.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தகுந்த ஒரு சட்டமே.    அது ஒரு மிகப்பெரிய சுத்தியல்.  அதை வேர்கடலை உடைக்க பயன்படுத்தக் கூடாது.  இப்படி தவறாக பயன்படுத்தினால், சாமான்ய மக்களின் கோபத்துக்கு ஆளாகி, பாராளுமன்றம் இந்த சட்டத்தையே நீக்குவதில் சென்று இது முடியும்.  திமிங்கலங்களுக்கு எதிராக இந்த சட்டம் பயன்படுத்தப்பட வேண்டும்.  இரால் குஞ்சுகளுக்கு எதிராக அல்ல”
இதுதான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.   இந்த தீர்ப்பில் நீதிமன்றம் சொல்லாமல் சொல்லிய விஷயம் என்னவென்றால், அமலாக்கத் துறையில் ஏதோ ஒரு காரணத்துக்காக, பச்சமுத்துவை காப்பாற்ற ஒட்டுமொத்த துறையுமே வேலை செய்திருக்கிறது என்பதே.   எதற்காக இப்படி அமலாக்கத் துறை செயல்பட்டது, இதன் பின்னணியில் உள்ள அதிகாரிகள் யார் என்பது முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே தெரியும்.
ஆனால் பிஜேபி அரசு பதவியேற்ற நாள் முதலாக, எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, வருவாய் புலனாய்வுத் துறை, சிபிஐ என்று மத்திய அரசின் அத்தனை அமைப்புகளும் சேர்ந்து பல்வேறு சோதனைகளை நடத்தி வருகின்றன.    தமிழகத்தில் கூவாத்தூரில் ஒரு வாரத்துக்கு மேலாக எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டு பேரம் பேசிய விவகாரம் ஊருக்கே தெரிந்தும் இது நாள் வரை எந்த சோதனைகளும் நடைபெறவில்லை.   கூவாத்தூரில் நடந்த பேரங்கள் குறித்து வீடியோ ஆதாரங்கள் வெளியான பிறகும் கூட உருப்படியாக எந்த சோதனைகளும் நடைபெறவில்லை.
மத்திய புலனாய்வு அமைப்புகளை காங்கிரஸ் அரசு துஷ்பிரயோகம் செய்ததை விட, நூறு மடங்கு துஷ்பிரயோகம் செய்து வருகிறது பிஜேபி அரசு.   இந்த புலனாய்வு அமைப்புகளிடம் சிக்குபவர்கள், யோக்கியர்கள் இல்லையென்றாலும், இந்த அமைப்புகள் ஏன் ஆளுங்கட்சியினரிமிருந்து அஞ்சி ஓடுகின்றன என்பதுதான் கேள்வி.

The Founder Chancellor, SRM University, Chennai, Dr. T.R. Pachamuthu calls on the Prime Minister, Shri Narendra Modi, and handed over a demand draft for Rs. 1 crore for the Prime Minister's National Relief Fund, in New Delhi on September 20, 2014.
03
The Founder Chancellor, SRM University, Chennai, Dr. T.R. Pachamuthu calls on the Prime Minister, Shri Narendra Modi, and handed over a demand draft for Rs. 1 crore for the Prime Minister’s National Relief Fund, in New Delhi on September 20, 2014.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியோடு கூட்டணி சேர்ந்துதான் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி தேர்தலில் போட்டியிட்டது.  சென்னைக்கு அருகே நடந்த பிஜேபி கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்திற்கு அனைத்து செலவுகளையும் செய்தது பச்சமுத்துவே. மோசடி வழக்கில் சிக்கும் வரை, மோடியை பச்சமுத்து சர்வ சாதாரணமாக சென்று பார்த்து வந்தார் என்பதை மறந்து விட முடியாது.    தமிழகத்தில் பிஜேபி கூட்டணியின் மொத்த செலவுகளையும் ஏற்றுக் கொண்டவர் பச்சமுத்துதான்.
ஊழல் ஒழிப்பு என்ற முழக்கத்தில் ஆட்சியை பிடித்தவர்களின் உண்மையான சுயரூபம் இதுதான்.

கருத்துகள் இல்லை: