வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஸ்டாலின் :உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே சட்டமன்ற தேர்தல் வரும்

கோவை,மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த 2 ஆயிரத்து 500 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி
கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து மாற்று கட்சியினரை வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-யார் ஆட்சி? மிழகத்தில் தற்போது நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆட்சி அமைப்பதற்காக காபந்து அரசின் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை கவர்னர் அழைப்பாரா? அல்லது எடப்பாடி பழனிசாமியை அழைப்பாரா? அல்லது யாருக்கும் மெஜாரிட்டி இல்லை என்று சொல்லி தி.மு.க.வை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறாரா? என்று நான் சொல்லவில்லை, பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். தி.மு.க.வை பொறுத்தவரை என்றைக்கும் கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க முயற்சித்தது கிடையாது. மக்களை சந்தித்து, மக்களிடத்திலே பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அவர்களின் ஆதரவை பெற்று அதன்பிறகு தான் ஆட்சிக்கு வருவது கலைஞர் தலைமையிலான தி.மு.க.


சட்டமன்ற தேர்தல் வரும்இப்போது இறந்தவர் பற்றி விமர்சனம் செய்கிறோம் என்று தவறாக நினைத்து விடக்கூடாது. நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா தான். 2-வது குற்றவாளி சசிகலா. முதலாவது குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு மற்ற 3 பேரும் சொத்துகள் சம்பாதித்து கொடுத்துள்ளனர் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் முன்பு நீதிபதி குன்கா தீர்ப்பு அளித்த போது இதே ஓ.பன்னீர்செல்வம் என்ன சொன்னார் தெரியுமா? தி.மு.க. சதி செய்து விட்டது என்று சொன்னார். சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாக வேண்டி அவர்கள் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்தனர். ஆனால் இப்போது தீர்ப்பு வந்தவுடன் இதே ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்தார் தெரியுமா? அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இப்போது பதவி சண்டை நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நாமெல்லாம் உள்ளாட்சி தேர்தல் வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக சட்டமன்ற தேர்தல் வந்து விடும் நிலை உள்ளது. எது வந்தாலும் சந்திக்க தி.மு,க. தயாராக உள்ளது. எனவே கட்சியில் சேர்ந்துள்ள அனைவரும் நாட்டை காப்பாற்ற, இனத்தை காப்பாற்ற, மொழியை காப்பாற்ற, நம் சந்ததியினரும் நலமுடன் வாழ தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள். இந்த அவல ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருங்கள்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இளைஞர் அணி கூட்டம்முன்னதாக தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் கோவையை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி பிரிவு அருகில் உள்ள ஜி.எஸ்.என். திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். மாநில இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், இணை செயலாளர் சுபா.சந்திரசேகர், துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அசன் முகமது ஜின்னா, பைந்தமிழ்பாரி, எஸ்.ஜோயல், ஆ.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வேதனைக்குரியதுஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மெரினா கடற்கரை பகுதியில் குடியிருக்கும் மீனவ சமுதாய மக்கள் உள்பட அனைவர் மீதும் தாக்குதல் நடத்தியதோடு அவர்கள் பயன்படுத்தும் பொருட்களையும் சேதப்படுத்திய காவல் துறையின் அராஜக போக்கினை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக விவசாயிகள் இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியினால் பாதிக்கப்பட்டதால் இதுவரை பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவ்வாறு பலியான குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் எந்த நிவாரண தொகையும் அளிக்கப்படாதது மிகவும் வேதனைக்கு உரியதாகும்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்புபவானி ஆறு மற்றும் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரள அரசை தடுத்து நிறுத்தக் கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்க உடனடியாக ஜனாதிபதியின் ஒப்புதலை பெறாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘உதய்’ மின்சார திட்டத்தால் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படக்கூடாது. இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா உள்பட 3 பேருக்கு சிறை தண்டனையை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளதின் மூலம் பொது வாழ்வில் நீதியும், நேர்மையும் நிலை நாட்டப்பட்டுள்ளது. பொது வாழ்வை தூய்மைப்படுத்தும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிப்பது என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்து சொல்ல விரும்பவில்லை
கூட்டம் முடிந்து பின்னர் வெளியே வந்த மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?.

பதில்:- தி.மு.க.வின் செயல் தலைவர் நான் தான். அப்படி ஒன்றும் அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது.

கேள்வி:- அ.தி.மு.க.வில் தினகரனுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதே?

பதில்:- அது அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரம். அதுகுறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.  இவ்வாறு அவர் கூறினார் தினத்தந்தி

கருத்துகள் இல்லை: