வியாழன், 16 பிப்ரவரி, 2017

போயஸ் தோட்டத்து பூசாரி : தத்துவஞானி சமஸ் – தி இந்து அன்றும் இன்றும்

தத்துவஞானி சமஸ் அன்றும் இன்றும் 
“குமாரசாமியின் காந்தி கணக்கு” தீர்ப்பால் ஜெயா விடுதலையானதும் தத்துவஞானி சமஸ் என்ன சொன்னார்?
“தி இந்துவின் ஆசிரியர் அறிவாளிகளை விட அதிமுகவினர் எவ்வளவோ மேல்!
இனியாவது அரசியல் நடக்குமா?” என்று மே 16, 2015 அன்று அவர் எழுதிய கட்டுரையில் இருந்து சில மேற்கோள்கள்….
“ஜெயலலிதா விடுதலை தீர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? – இப்படிக் கேட்பவர்களிடம் எல்லாம் இந்தக் கேள்வியைத்தான் பதிலுக்குக் கேட்கிறேன்: இன்றைக்குத் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
எதிர்க்கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூடச் சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுக தான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று. ஒரு தலைவருக்கு கூட இங்கு  திராணி இல்லையே, ‘நீதிமன்றத்தில் அவர் வென்றால் என்ன; மக்கள் மன்றத்தில் அவரை நாங்கள் வெல்வோம்’என்று சொல்ல? இப்படிப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பின் நியாய தர்மங்களை முன் வைத்து விவாதிப்பதில் அரசியல்ரீதியாக அர்த்தம் ஏதேனும் உண்டா?
ஒரு அரசியல்வாதி நீதிமன்றத்தில் அல்ல; மக்கள் மன்றத்தில் வீழ்த்தப்பட வேண்டும். அதுதான் அவரை எதிர்ப்பவர்களுக்கு உண்மையான அரசியல் வெற்றி.
தமிழக எதிர்க் கட்சிகளிடம் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்துப் போராடி அரசியல் களத்தில் ஒருங்கிணைந்து ஜெயலலிதாவை வீழ்த்தும் உத்தி இல்லை. மாறாக, ஓடுமீன் ஓட உறுமீனுக்காகக் காத்திருந்த கொக்கின் மனநிலையில் இருக்கின்றன; ஜெயலலிதாவை வீழ்த்தி, தங்கள் இருப்பை வெளிக்காட்ட இந்த வழக்கை மட்டுமே ஒரே துருப்புச் சீட்டாகப் பிடித்துத் தொங்குகின்றன. ஜெயலலிதா இல்லாத இடத்தில் கம்பு சுழற்ற ஆசைப்படுகின்றன.
ஜெயலலிதா வழக்கு அதிமுகவுக்கு உயிராதாரப் பிரச்சினையாக இருப்பதன் நியாயம் புரிந்துகொள்ளக் கூடியது. ஏனைய கட்சிகளும் அதையே கட்டிக்கொண்டு அழுவது அருவெறுக்கத்தக்கது. அரசியல் நடத்த, மக்களை அணிசேர்க்க இவர்களுக்குத் தமிழகத்தில் பிரச்சினைகளே இல்லையா என்ன?”……
-சமஸ் (மே 2015)
இனி இன்று அதாவது ஜெயா சசி கும்பல் தண்டிக்கப்பட்ட பிறகு பிப்ரவரி 15, 2017 அன்று தத்துவஞானி சமஸ் எழுதிய கட்டுரையின் தலைப்பு “ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்..மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!”. அதிலிருந்து ஒரு மேற்கோள்..
“கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். ஆட்சியோடு தொடர்புடைய அவர்கள் சார்ந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது. ஒருகுற்றவாளியிடம் மக்கள் ஆட்சிப் பரிபாலனம் பெறுவதைக் காட்டிலும் கொடுமை இல்லை. “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாக சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ்தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
அந்தச் சதியின் நீட்சிதான் நிழல் அதிகார மையமே நிஜ அதிகார மையமாக உருவெடுக்கும் கனவிலும் ஒளிந்திருக்கிறது. எது ஒரு குற்றவாளிக்கு இந்த அசாத்திய துணிச்சலைத் தந்தது? நீதியின் மீதான பயமின்மைக்கு அதில் முக்கியமானபங்கு உண்டு. தாமத நீதிப் பரிபாலனத்துக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமதமான இந்தத் தீர்ப்பு ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு விடுதலையைத் தந்துவிட்டது; ஆனால், தண்டனையை ஏழரைக் கோடி மக்கள் இன்று சுமக்கிறார்கள். இந்திய நீதித் துறை தன்னை ஆழமான சுய பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொள்ள வேண்டும்!”
– சமஸ் (பிப்ரவரி 2017)
இரண்டையும் படித்த பிறகு திருவாளரும் தத்துவஞானியுமான சமஸை எப்படி அழைக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

தி இந்து அன்றும் இன்றும்

ரோடு ஒத்துப்போவதில் மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு மட்டும் விதிவிலக்கல்ல. தி இந்துவின் தமிழ்ப் பதிப்பே பாசிச ஜெயாவுக்கு சிறப்பிதழ் போட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான். ஜெயலலிதாவை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்த போது “தி இந்து” என்ன எழுதியது?
அன்று………..
போயஸ் தோட்டத்தின் ஆஸ்தான பூசாரியான தினமணிக்குப் போட்டியாக அறிவார்ந்த முறையில் காவடி தூக்கிய “திஇந்து” குமாரசாமி தீர்ப்பு குதூகலத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, ஜெயலலிதாவின் மறுவருகை நல்லதாக அமையட்டும் என்று தலையங்கம் தீட்டியது. அதில் ஜெயாவின் நல்லாட்சியை மாநிலமே எதிர்பார்த்து ஏங்கி நிற்பதாக ஆரூடம் கூறும்ஆசிரியர் அசோகன், “சுணங்கி நிற்கும் நிர்வாக வண்டியின் சுக்கானை இறுக்கிப் பிடித்து அடித்து ஓட்டுவது எவருக்கும்சவாலான காரியம். ஆனால், ஜெயலலிதாவிடம் மாநிலம் அதைத் தான் எதிர்பார்க்கிறது” என்கிறார்.
நீதிபதி குமாரசாமி கணக்கில் செய்துள்ள மோசடி அம்பலமாகி நாறிக் கொண்டிருந்த போது, நமது எம்.ஜி.ஆர். நாளேட்டின் சந்தா தொகையைக் கூட்டினால் இந்தக் கணக்கு நேராகிவிடும் என்று ஜெ. கும்பலுக்கு ஆறுதல் கூறும் தி இந்து, ஜெ.கும்பல் வாரியிறைத்த பல கோடி பணத்தில் நீதித்துறையின் ஒவ்வொரு படிக்கட்டையும் உரிய முறையில் கவனித்துப் பச்சையான அயோக்கியத்தனங்கள் மூலம் ஜெ. கும்பலை இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ள அ.தி.மு.க. வக்கீல்களை, சொத்துக்குவிப்பு வழக்கில் தடம்பதித்தவர்கள், “ஜெயலலிதாவின் விடுதலைக்கு வித்திட்டவர்கள்” என்று தலைப்பிட்டு ஏதோ மாபெரும் சாதனையாளர்களாகக் காட்டியது. அப்போது சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அம்மா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதும், சொத்துக் குவிப்பு வழக்கு என்ற பெரிய தடையைத் தாண்டிய அம்மா, இடைத்தேர்தல் என்ற சிறிய தடையை அலட்சியமாகத் தாண்ட ஓடோடி வருவதைப் போல கருத்துப்படம் போட்டு தனதுவிசுவாசத்தைப் பறைசாற்றியது.
இன்று………
“நல்ல எச்சரிக்கையாக அமையட்டும்!” என்று பிப்ரவரி 15, 2017 அன்று தலையங்கம் எழுதியிருக்கிறது தி இந்து. அதிலிருந்து சில மேற்கோள்கள்….
//ஆளும் அதிமுகவினர் இந்தத் தீர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டும். “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாகச் சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்டஇல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு. வருவாய்க்குப் பொருந்தாமல் ஈட்டும் முறைகேடான பணத்தைச் செலுத்துவதற்காகவே முகமூடி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பதை அதிமுகவினர் ஊன்றிப் படிக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஏற்பட்ட தாமதம் மக்களுக்குக் கசப்பைத் தருவது, அது இந்திய நீதித் துறையின் பெரிய பலவீனம் என்றாலும், ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களும் அவர்கள் உடனிருக்கும் நிழல் அதிகார மையங்களும் என்றாவது ஒருநாள் நிச்சயம் நீதியின் முன்னர் தண்டனையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனும் நம்பிக்கையை மக்கள் மனதில் இத்தீர்ப்பு விதைத்திருக்கிறது. அரசியல் தூய்மை எனும் பதம் வெறுமனே வாய் வார்த்தையாக இல்லாமல் இனியேனும் நனவாகும் என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் எழுவதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் இத்தீர்ப்புக்கு முகங்கொடுக்க வேண்டும். அவர்களுடைய மாற்றம்அதிமுகவிடமிருந்து தொடங்க வேண்டும்!//
தி இந்து தலையங்கம் (பிப் 15 2017)
பாருங்கள்.. தீர்ப்பை ஊன்றிப் படிக்க வேண்டும், முகங்கொடுக்க வேண்டும் என்று உபதேசிப்பவர்கள், தங்கள் முகத்தில் தாங்களே துப்பிக் கொள்கிறோம் என்று நினைக்கவில்லை. தி இந்துவின் ஆசிரியர் அறிவாளிகளை விட அதிமுகவினர் எவ்வளவோ மேல்!  vinavu

கருத்துகள் இல்லை: