வியாழன், 16 பிப்ரவரி, 2017

ஆளுநர் அழைத்தாலும் ஆட்சி அமைக்க திமுக விரும்பவில்லை ? தேர்தலை சந்திக்க ஸ்டாலின் தீர்மானம் ?

சென்னை: அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், யார் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பதில் பெரும் குழப்பம் நிலவும் நிலையில் இடைத் தேர்தலை சந்திக்கும் மன நிலைக்கு திமுக வந்து விட்டதாக சொல்கிறார்கள்.
எந்தப் பிரிவுக்கும் ஆதரவு தர திமுக விரும்பவில்லை. அதேபோல எந்தப் பிரிவின் ஆதரவையும் பெற்று ஆட்சியமைக்கவும் அது முனையவில்லை, விரும்பவும் இல்லை. இதற்குப் பேசாமல் சட்டசபை இடைத் தேர்தலை சந்தித்து விடலாம் என்று திமுக கருதுவதாக தெரிகிறது. தமிழக அரசியல் குழப்பங்கள் பெரும் இடியாப்பச் சிக்கலாக உள்ளது. சசிகலா சிறைக்குப் போய் விட்ட நிலையில், அவரது அணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க அழைப்பு கோரி ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துக் காத்திருக்கிறார். மறுபுறம் இடைக்கால முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் அனுமதி கோரி காத்திருக்கிறார்.

பிளந்து கிடக்கும் அதிமுக
அதிமுகவின் இரு அணிகளில் தற்போது சசிகலா அணி வசம்தான் அதிக எம்.எல்.ஏக்கள் இருப்பதாக தெரிகிறது. ஓ.பன்னீர் செல்வமோ, கூவத்தூரிலிருந்து அனைவரையும் விடுவித்தால் அவர்கள் என்னையே ஆதரிப்பார்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
முடிவெடுக்காமல் இழுக்கும் ஆளுநர்
இந்த குழப்பத்தில் முடிவெடுக்காமல் ஆளுநர் வேறு ஒருபக்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். முதலில் சசிகலா மீதுள்ள வழக்கை காரணம் காட்டிக் கொண்டிருந்தார்கள். இப்போது சசிகலா உள்ளே போய் விட்ட நிலையில் மீண்டும் இழுபறி நீடிக்கிறது. முடிவில்லாமல் நீள்கிறது குழப்பம்.
என்னென்ன வாய்ப்பு
தற்போதைய நிலையில் ஆளுநருக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, ஓ.பி.எஸ் - எடப்பாடி அணிகளை சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உத்தரவிடுவது மற்றும் அவர்களால் முடியாவிட்டால் திமுகவுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுவது. இதில் எது சரிப்பட்டு வராவிட்டாலும் சட்டசபையை முடக்க உத்தரவிடலாம் அல்லது கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிடலாம்.
திமுகவுக்கு விருப்பமில்லை
ஆரம்பத்தில் அதிமுக குழப்பத்தைப் பயன்படுத்தி திமுக ஆட்சியமைக்க முயற்சிகள் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஆசையை திமுக முழுமையாக விட்டு விட்டதாம். பேசாமல் இடைத் தேர்தலுக்குப் போய் விடலாம் என்பதே தற்போது திமுகவின் ஒரே எண்ணமாக உள்ளதாக தெரிகிறது.
எதிரியுடன் கை கோர்க்க விரும்பவில்லை
பழனிச்சாமியோ, பன்னீர் செல்வமோ இருவருமே அதிமுகதான் என்பதையும், அதிமுக திமுகவின் எதிரிக்கட்சி என்பதையும் மறக்கக் கூடாது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கூறியுள்ளார். திமுகவுக்கு எப்போதுமே அதிமுக எதிரிதான் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே எதிரியுடன் கை கோர்த்தால் இருப்பதும் போய் விடும் என்ற கவலை திமுகவுக்கு உள்ளது.
ஆளுநர் கேட்டால்
அதிமுகவின் இரு அணிகளாலும் ஆட்சியமைக்க முடியாத நிலை வரும்போது அடுத்து மரபுப்படி திமுகவிடம் ஆட்சியமைக்க விருப்பமா என்று ஆளுநர் கேட்கலாம். அப்படிக் கேட்டால், இல்லை, தேர்தலை சந்திக்கத் தயார் என்று சொல்ல ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

கருத்துகள் இல்லை: