சனி, 26 மார்ச், 2016

தினத்தந்தி அதிபர் கலைஞரை சந்தித்தார்......பல ஊகங்கள்

Daily Thanthi Chief S.Balasubramanian  meets Karunanidhiசென்னை: தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணியன் ஆதித்தன் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து பேசியுள்ளது ஊடக வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தி டிவியின் விவாத நிகழ்ச்சிகள் பிரபலமானவை. அனைத்துக் கட்சி பிரமுகர்களும் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கு தங்களின் கருத்தை முன் வைத்து வருகின்றனர்.

இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கும் திமுகவினரை பேச விடுவதில்லை, அதிமுகவுக்கு எதிராக பேச முயன்றாலும் பேசவிடாமல் நெறியாளர் ஆதிக்கம் செலுத்துகிறார் எனக் கூறி திமுகவினர் யாரும் தந்தி டிவி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது என அக்கட்சி தலைமை கடந்த ஆண்டு நவம்பரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து சிறிது காலம் தந்தி டிவி விவாத நிகழ்ச்சிகளுக்கு திமுக பிரமுகர்கள் செல்வதில்லை. பின்னர் இருதரப்பும் சமாதானமான நிலையில் மீண்டும் திமுகவினர் தந்தி டிவி விவாதங்களில் கலந்து கொண்டனர். ஆனாலும் முந்தைய நிலைமையே நீடித்ததால் மீண்டும் திமுகவினர் தந்தி டிவி நிகழ்ச்சியை புறக்கணிக்க தொடங்கினர்.
தந்தி டிவி சார்பில் பலமுறை அழைத்தும் திமுக சார்பில் பங்கேற்பாளர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை. திமுக தலைமை இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலை காரணமாக தந்தி டிவி அதிபர் பாலசுப்பிரமணியன் ஆதித்தனே நேரடியாக தனியாக வந்து திமுக தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த சந்திப்பின் போது திமுக பேச்சாளர்களுக்கு வாய்ப்பே கொடுக்காமல், திமுகவினரை பேச விடாத விவாதங்களில் எப்படி கலந்து கொள்வது என்று கருணாநிதி தனது ஆதங்கத்தை பதிவு செய்தாராம். இனி அது போன்று நிகழாமல் பார்த்து கொள்வதாக பாலசுப்பிரமணிய ஆதித்தன் உறுதி அளித்தாராம். திமுகவும் முடிவை மாற்றி கொள்வதாக கூறியுள்ளனர். விரைவில் மாற்றம் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு பாலசுப்பிரமணியம் ஆதித்தன் சென்றுள்ளார்.
திருச்செந்தூர் விவகாரமோ?
இது ஒருபுறம் இருக்க திருச்செந்துார் தொகுதியில், தற்போதைய தி.மு.க எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக, பத்திரிகை அதிபர் ஒருவரை அதிமுக நிறுத்த உள்ளதாக இன்று காலைதான் செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த செய்தி வெளியான அதே நாளில் திமுக தலைவர் கருணாநிதியை தினத் தந்தி குழும அதிபர் பாலசுப்ரமணியம் சந்தித்திருப்பது பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது.  tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: