திங்கள், 21 மார்ச், 2016

ஹைதராபாத் சிறுவனை(15)கடத்தி கொலைசெய்தவர்கள் கைது.... சாய்ராம்(20), பொன்டாரா ரவி(21), நம்பூரி மோகன்)23)


ஐதராபாத் நகரின் ஷாகினாயாத்காஞ் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் அபாய் மொதானி (வயது 15). கடந்த புதன்கிழமை மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற அபாய், மாலை வரையில் வீடு திரும்பவில்லை. அவனை தேடிச் சென்ற தந்தை செகந்திரபாத் ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனம் மட்டும் அனாதையாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதற்குள், சிறுவனை கடத்தி விட்டதாகவும், தங்களுக்கு பணம் வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் சிறுவனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர். அவர்கள் சிறுவனை விடுவிக்க ரூ.10 கோடி கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளனர். பணம் இன்னும் கைக்கு வந்து சேராததால் சிறுவனின் உறவினரை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் பின்னர் ரூ. 5 கோடி கேட்டு உள்ளனர்.


இதற்கிடையே, ஒருவரது பைக்கின் பின்னால் அபாய் அமர்ந்து செல்லும் சி.சி.வி.டி. காட்சிகளை கண்ட போலீசார், அவரை சிறுவனுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம் என கருதினர். இதற்கிடையே கடத்தல் தொடர்பாக 3 பேரின்மீது சந்தேகப்பட்டு, 10 தனிப்படைகளை அமைத்து அவர்களை பிடிப்பதற்கான பணியினை தீவிரப்படுத்தினர். அவர்கள் தேடுதல் பணியை தொடங்கினர்.

இந்நிலையில், சிறுவனின் உடல் செகந்திராபாத்தில் உள்ள அல்பா ஓட்டல் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்., வாயில் டேப் ஒட்டியபடி கொலை செய்யப்பட்டு, ஒரு டி.வி. பெட்டிக்குள் அமர்ந்தநிலையில் இருந்த அபாய் மொதானியின் பிரேதத்தை போலீசார் கைப்பற்றினர்.

இந்த கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி அபாய் மொதானியை கடத்திக் கொன்ற மூன்று குற்றவாளிகளை நேற்று கைது செய்துள்ளனர்.

சம்பவத்தன்று, அபாய் மொதானி வீட்டைவிட்டு வெளியே வந்தபோது அவனுக்கு ஏற்கனவே அறிமுகமான ஷேஷு குமார் என்பவன் லிப்ட் கேட்டு அந்த வாகனத்தில் அமர்ந்துகொள்ள, போகும் வழியில் தனது கூட்டாளிகளான பொன்டாரா ரவி, நம்பூரி மோகன் ஆகியோருடன் சேர்ந்து அபாய் மொதானியை கடத்திச் சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

அங்கு அவனது கை,கால்களை கட்டிப்போட்டு, வாயை பிளாஸ்திரியால் ஒட்டிவைத்து, புதிதாக வாங்கிய செல்போன் மற்றும் சிம்கார்ட்களை வைத்து சிறுவனின் பெற்றோருக்கு போன் செய்து பத்து கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனிடையே, காணாமல்போன அபாய் மொதானியின் இருசக்கர வாகனத்தில் இன்னொரு நபர் அமர்ந்து செல்லும் காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த புதியநபரைப் பற்றி போலீசார் துப்புதுலக்கியபோது, அவன் ஏற்கனவே சிறுவனுக்கு அறிமுகமானவன் என்பது தெரியவந்தது. எனவே, பணம் கேட்டு மிரட்டிய நபர்களின் கைபேசி எண்களை வைத்து உளவறிந்ததில் ஒரு நம்பர் மட்டும் ஒடிசா மாநிலத்தின் பெர்ஹாம்பூர் மற்றும் ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சுட்டிக்காட்டியது.

உடனடியாக அங்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை நேற்று கைது செய்தனர்.

பிடிபட்ட முக்கிய குற்றவாளியான சாய்ராம் என்ற சேஷு குமார்(20), பொன்டாரா ரவி(21), நம்பூரி மோகன்)23) ஆகியோர், முன்னர் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஒன்றாக வேலைசெய்தபோது இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் கோடீஸ்வர்கள் ஆகும் ஆசையில் ஒரு சினிமாவில் வருவதுபோல் அபாய் மொதானியை கடத்தி பணம் பறிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், வாயில் டேப் ஒட்டப்பட்டதால் அபாய் மொதானி மூச்சுத்திணறி இறந்துவிட்டதால், பிணத்தை அட்டைப் பெட்டிக்குள் அடைத்து ரெயில் நிலையம் அருகே போட்டுள்ளனர் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: