வியாழன், 24 மார்ச், 2016

"சூப்பர் சிங்கர்" எந்த ரூல்சும் கிடையாது விஜய் டிவியின் விருப்பம் ஒன்றே ரூல்ஸ்

விகடன்.com :விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் பிரச்னை , அட இன்னுமா முடியவில்லை என்றால் முதலும் முக்கியஸ்தருமான வெற்றிக்குச் சொந்தக்காரர் ஆனந்த் இப்போதுதானே மனம் திறந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது வெற்றி மற்றும் அதற்காகப் பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார்,
அவர் கூறியுள்ளதாவது, கடந்து இரண்டு நாட்களாக நான் கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருந்தேன். இப்போதும் கனவு போல் இருக்கிறது. எனக்கு ஆதரவாக இருந்த சேனல் மற்றும் மக்களுக்கு நன்றி.
பத்து வருடங்கள் காத்திருந்து பத்து மாதங்கள் போட்டி, இசைப் பயிற்சி, என அனைத்தையும் கடந்து இந்த வெற்றியை அடைந்துள்ளேன்.
இத்தனை ஆண்டுகளாக , வெறும் 1000பாடகர்களில் ஒருவனாக இன்னமும் டெமோவுக்கான சிடிக்கள், பக்திப் பாடல்கள், ட்ராக்குகள் எனக் கொடுத்து சுமாராக 50 பாடல்களில் ஒரு பாடல் வீதம் எனது குரல் தேர்வு செய்யப்பட்டு அதுவும் ஹீரோக்கள், அல்லது இசையமைப்பாளர்கள், பெரிய பாடகர்களால் நிராகரிக்கப்பட்டு, அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டு பாடி வந்தேன்.
எனது கேரியர் குறித்து எனக்கே ஒரு பாதுகாப்பற்ற சிந்தனை உருவானது. ஒரு பாடல் வாய்ப்புக் கூட இல்லாமல், ஒரு நிகழ்ச்சி வாய்ப்புக் கூட இல்லாது இருந்தேன். இன்னும் 40 -50 வருடங்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு பாடல்  பாடிக்கொண்டு என் வாழ்வை நடத்தும் ஒரு இசைக் கலைஞனாக இருப்பதை நான் விரும்பவில்லை. நான் எஸ்.பி.பி சார், சங்கர் மகாதேவன், கார்த்திக் போல் உலகம் அறிந்த பாடகர் இல்லை. அப்படி இருந்திருந்தால் நான் கண்டிப்பாக 1000 கணக்கான போட்டியாளர்களுடன் கலந்துகொண்டிருக்க மட்டேன். யாருக்கும் என்னைப் பற்றித் தெரியாமல் இல்லை.
நான் ஒரு பின்னணிப் பாடகர் என்பது இணையத்தில் இருக்கிறதே. இதனால் தான் நான் இந்தப் போட்டியிலேயே கலந்துகொண்டேன். என்னைப் பற்றிய தகவல்கள் இருந்தாலும் நான் யார் என உங்களுக்குத் தெரிந்தால் தானே அது வெளியே வரும், மற்ற  பாடகர்கள் வாங்கும் சம்பளத்தில் ஒரு மடங்கு பணம் வாங்கிக் கொண்டு பாட ரெடி என்றாலும் கூட நிகழ்ச்சியாளர்கள் என்னைத் தேர்வு செய்ய முன்வரவில்லை. பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சென்று பார்த்துவிட்டேன், சில இடங்களில் , நிகழ்ச்சிகளில் பணமே வாங்காமல் வெறும் எனது தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்ளவும், நல்ல வாய்ப்புகளுக்காக வேண்டியெல்லாம் பாடினேன். எனினும் எனது கனவு பெரிது அதற்காக எத்தனை நாட்களுக்குத் தான் இதையே செய்துகொண்டிருக்க முடியும்.
எனது சக பாடகர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்டுக் கேட்டு எனக்கு தாழ்வு மனப்பான்மை அதிகமானது தான் மிச்சம். பிறகுதான் இந்த மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடிவெடுத்தேன். எப்படி எனது சக பாடகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில் கலந்துகொண்டு மிகப்பெரிய பாடகர்களாக உருவெடுத்தார்களோ அதே போல் நானும் கலந்துகொண்டு பிரபலமாக ஆசைப்பட்டேன். அப்படித்தான் பத்தாயிரம் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு, என் நண்பர்கள், சக பாடகர்கள், எனது ஜூனியர்கள் என அனைவருடனும் மோதுவதை, எந்தவித சங்கடமுமின்றி ஒவ்வொரு சுற்றிலும் எலிமினேஷன் குறித்த பயங்களைக் கடந்து இப்போது நான் வெற்றியாளனாக நிற்கிறேன்.
14 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற ஒரு ரூலைத் தவிர்த்து எந்த ரூலும் இங்கே கிடையாது. பிரம்மாண்ட குரல் தேடல் எனில் சினிமாவில் பாடாத குரல் என எந்தக் கோணத்திலாவது இருக்கிறதா? உங்களது யூகங்களுக்கு நானோ அல்லது சேனலோ பொறுப்பாக முடியாது. மேலும் யூகிக்காதீர்கள் உங்களுக்கு எந்த உண்மையும் கிடைக்காது. ஆனால் அதற்கு பதிலாக போட்டியாளர்களாக எங்களின் வாழ்வும், புகழும், தான் வீணாகும். எல்லாவற்றிற்கும் மேல் எனது போட்டியாளர்கள் அனைவருக்குமே தெரியும் நான் ஒரு பின்னணி பாடகர் என. அவர்கள் ஏதேனும் பிரச்னை கிளப்பினார்களா? இல்லையே.
ஒரு பாடல் பாடியவரும் சரி, எஸ்,பி.பி போல் லட்சக் கணக்கான பாடல்கள் பாடியவரும் சரி இங்கே பின்னணி பாடகர்கள் தான். பத்து வருடங்களுக்குப் பிறகு கடின உழைப்புகளைக் கடந்து கிடைத்திருக்கும் இந்த வெற்றி இப்போது என்னை எதிர்மறையாகவும், மன அழுத்ததுக்கும் ஆட்படுத்தியுள்ளது.
இன்னும் சொல்லப்போனால் பத்து வருடங்களாக எப்படி இருந்தேனோ, ஒவ்வொரு ஸ்டூடியோவின் வாசலிலும் ஒரு பாடலுக்காக காத்துக்கொண்டிருந்தேனோ அப்படியே இருந்திருக்கலாமோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது. எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இந்த நிகழ்வுக்குப் பிறகு எனக்கு அமைதி கிடைத்துள்ளது. என்னை நேசிக்காத மக்கள் யார்,  என்னை வெறுக்காதவர்கள் யார் என்பது எனக்கு தெரிகிறது. இவ்வாறு அவர் தனது முகநூலில் கூறியுள்ளார்,
இங்கே ஒன்று மட்டும் உண்மை யாரும் ஆனந்துக்கு எதிராக பேசவில்லை சேனலுக்கு எதிரான கருத்துகளை மட்டுமே கூறியுள்ளனர். ஆனந்துக்கு நமது வாழ்த்துகள்.
தொகுப்பு : - ஷாலினி நியூட்டன் -

கருத்துகள் இல்லை: