வியாழன், 3 மார்ச், 2016

திமுக 150; தேமுதிக 59; காங். 25: தொகுதிப் பங்கீடு... ஆட்சியில் பங்கு இல்லை! அறிவிப்பு வரும்?

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் திமுக- 150; தேமுதிக- 59; காங்கிரஸ் - 25 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தொகுதிப் பங்கீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுகவை வீழ்த்த ஒரு வலுவான கூட்டணியை அமைக்க திமுக போராடி வருகிறது. தேமுதிக, காங்கிரஸ் கட்சிகளுடன் திமுக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் திடீரென திமுக- பாஜக இடையே கூட்டணி உருவாகக் கூடும் என்று தகவல்கள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் சென்னை வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இச்சந்திப்பு முடிந்தவுடன் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவுடனான பேச்சுவார்த்தை இழுபறியாக நீண்டு கொண்டிருந்தது. 

தேமுதிகவைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 3-ல் ஒரு பங்கான 78 தொகுதிகள்; துணை முதல்வர் மற்றும் 10 அமைச்சர்கள் பதவி; உள்ளாட்சித் தேர்தலில் 50% இடம் என அதிரடியாக பேரத்தைத் தொடங்கியது. இதில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என திமுக முதலில் இருந்தே திட்டவட்டமாக கூறிவந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷுடன் திமுக சார்பில் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர், கரூர் முன்னாள் எம்பியின் மகன் ஆகியோர்தான் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். 
ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்கிற போது கேட்ட தொகுதிகளாவது கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் திமுக தரப்போ 50 தொகுதிகளுக்கு மேல் தரவே முடியாது என்பதில் உறுதியாக இருந்தது. 
திமுகவின் இந்த கறாரான நிலைப்பாட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை என கூறப்பட்டது. இதன் விளைவாகத்தான் காஞ்சிபுரம் மாநாட்டில் திமுகவையும் அவர் கடுமையாக சாடியிருந்தாராம். 
அதே நேரத்தில் விஜயகாந்த்தை சுதீஷ் சமாதானப்படுத்தி 50 தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ளலாம் என கூறியிருந்துள்ளார். தேமுதிக நிர்வாகிகளும் இதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தனர். ஆனாலும் பிரேமலதாவின் பிடிவாதத்தால் இந்த கூட்டணி அமைவதில் இழுபறி நீடித்து வந்தது. 
இந்நிலையில்தான் தடாலடியாக சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் களத்தில் இறங்கினார். உங்களுக்கு அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள்தானே; நிச்சயமாக 59 தொகுதிகளை வாங்கித் தருகிறோம் என்று உறுதியளித்து அதை கருணாநிதியிடமும் பேசி சம்மதத்தை வாங்கி விஜயகாந்த் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். 
விஜயகாந்த் எதிர்பார்க்கும் ராசி எண் 5-ன் படி 59 (5+9=14; 1+4=5) தொகுதிகள் கொடுக்க திமுக ஒப்புக் கொண்டதாம். திமுக நினைத்தபடியே 150 தொகுதிகளிலும் காங்கிரஸுக்கு 29 தொகுதிகளை ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதர சிறு கட்சிகளுக்கு திமுகவின் 150 இடங்களில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அக்கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read more at: /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: