ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

இளையராஜா ஆயிரம்; ரசிகர்களுக்கு அபராதமும் தண்டனையும்

raja1_musicவே.மதிமாறன் : 25 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம், 3 ஆயிரம், ஆயிரம், 5 நூறு ரூபாய்களில் டிக்கெட். யாருக்கோ நிதி உதவிக்காக இவ்வளவு கட்டணம் போல. அந்த ‘யாருக்கோ’தான் யாருன்னு தெரியல.
பாவம் ரசிகர்கள். தீவிர ரசிகர்களாக இருந்தால் இப்படிதான் அபராதம் கட்டவேண்டும் போலும். கட்டணங்களைப் பொருட்படுத்தாமல் திரண்டிருந்தார்கள் திடல் முழுக்க.
இவ்வளவு விலை வைத்த பிறகும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் அது இசைஞானி இளையராஜா ஒருவருக்காக மட்டும்தான் நடக்கும்.

குவாட்டரும், கோழிபிரியாணியும் வாங்கிக் கொடுத்து ஜாதிப் பாசத்தோடு மாநாட்டிற்கு ‘அழைத்து’ வருகிற அரசியல் கட்சிகள் உள்ள தமிழகத்தில்; இளையராஜாவிற்குகாகத் தன் பணத்தைச் செலவு செய்து வருகிற ரசிகர்கள் கூட்டம்,
பணத்திற்கு விலைபோகாத மற்றும் ஜாதி உணர்வுகளுக்கு எதிராக மக்கள் எப்போதும் அணித்திரள காத்திருக்கிறார்கள் என்பதற்கான குறியீடு.
தேர்தல் நேரத்தில், ராஜாவிற்குகாகக் கூடுகிற இந்தக் கூட்டத்தைப் பார்த்துக் கட்சிகள் தங்களின் கூட்டணிக்கு, ‘நீங்கதான் முதலமைச்சர்’ என்று அவரைக் கூப்பிடாமல் இருக்கணும்.
விரும்பமில்லை என்பதால் எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போனதில்லை. ஆனால், நேற்று போனேன்.
‘உன்னை எவன்டா வரச் சொன்னது?’ என்பதுபோலவே நடந்தது நிகழ்ச்சி. மக்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு இவ்வளவு ஈடுபாட்டோடு வருகிறார்களே என்ற எந்தப் பொறுப்பும், திட்டமும் இல்லாத நிகழ்ச்சி.
நான் போனதற்குக் காரணம் கோவையிலிருந்து வந்திருந்த நண்பன் வெங்கட். (Venkat Raman) இவன் இளையராஜாவின் ரசிகர்களில் தீவிரவாதி பிரிவைச் சேர்ந்தவன், ராஜாவிடம் இல்லாத அவருடைய பாடல்கள் கூட இ்வனிடம் இருக்கும். சர்வதேச இசை குறித்த ரசனை உள்ளவன்.
உலகம் முழுக்கப் பயணம் செய்திருக்கிறான். லுட்விக் வான் பீத்தோவன், மொசார்ட் போன்ற இசை மேதைகள் பிறந்த ஊர்களுக்கெல்லாம்கூடப் போய் வந்திருக்கிறான். ஆனாலும் ராஜா என்றால் அவனுக்கு அவ்வளவு அன்பு, காதல், நேசம், பாசம் இன்னும் இன்னும்..
எனக்கும் டிக்கெட் போட்டிருப்பதே நேற்றுதான் தெரியும். வெங்கட்டும், நண்பர் பாலசந்தரும் (Bala Chander) செய்த வேலை இது. ஆனால், என்னைக் கோத்துவிட்ட பாலச்சந்தர் வரல.
வெங்கட் கோவையிலிருந்து இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருக்கிறானே, என்று அவனைப் பார்க்க போய்தான் சிக்கிக் கொண்டேன். இரவு 8 மணிக்கு தான் போனேன். இன்னும் கூட லேட்டா போயிருக்கலாம்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் தொகுக்க வரும்போதெல்லாம் எனக்கு ரொம்ப முடியாம போச்சு. அப்படி ஒரு தொகுப்பு.
விஜய் டி.வியில் பிரமுகர்களுடனான பேட்டியிலேயே நடனத்திற்குரிய அபிநயங்களும், நடிகைக்குரிய பாவனைகளோடும் பேட்டி எடுக்கிற அவர் தான் தொகுப்பு. என்ன பண்றது.. நட்புக்காக நண்பனுக்காக அதையும் தாங்கிக்கிட்டுதான் இருந்தேன்.
ஆனாலும் முடியில. இடையில் எஸ்.பி.பி ஆறுதலாக இருந்தாலும், 12 மணியைத் தாண்டியும் தொடர்ந்து கொண்டிருந்ததால், நான் அங்கிருந்து தாண்டிவிட்டேன். பாவம் இதையெல்லாம் எப்படிதான் பொறுத்துக்கொள்கிறாரோ ராஜா?
நடிகர்களின் அல்லது சினிமா பாடகர்களின், பிரபல இசையமைப்பாளர்களின் ரசிகர்களைப் போன்றவர்கள் அல்ல, இளையராஜாவின் ரசிகர்கள். அவர்கள் தமிழர்களின் ரசனை சர்வதேசத்தரத்திற்கு நிகரானது என்பதின் அடையாளம்.
அவர்களுக்குரிய தரத்தோடும், சிறப்போடும் நடத்த வேண்டும் நிகழ்ச்சியை. அதுதான் இளையராஜவிற்குச் செய்கிற உண்மையான கவுரவம். சிறப்பு. மரியாதை.
இல்லையென்றால் அவர் பெயரை பயன்படுத்தி, திரைபிரபலங்களை வைத்துக் கும்மியடித்து, ராஜாவின் ரசிகர்களைச் சூறையாடுகிற திட்டமாகத்தான் அது அம்பலமாகும். இதுபோன்ற கமர்சியல் நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளை இசைஞானியும் புறக்கணிக்க வேண்டும்.
அது அவருக்கும் அவரை வெறிகொண்டு நேசிக்கிற ரசிகர்களுக்கும் நன்மை.

கருத்துகள் இல்லை: