வெள்ளத்தில் தத்தளித்த நல்லகண்ணுவை மீட்க, படகு ஒன்று வந்தது. அப்போது, ‘நீரில் சிக்கிப் பரிதவிக்கும் எல்லா மக்களையும் மீட்டு விட்டு என்னிடம் வாருங்கள். அப்போதுதான் வருவேன்’ எனப் பிடிவாதம் பிடித்தார். அவர்தான் நல்லகண்ணு. தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்றின் பங்கேற்பாளராகவும், சாட்சியாகவும் இருக்கும் நல்லகண்ணுவிடம் நெடுநேரம் பேசியதில் இருந்து...
``மழையின் பாதிப்பு உங்கள் வீட்டையும் விட்டுவைக்க வில்லை. உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு பேரிடரைச் சந்தித்திருக்கிறீர்களா?’’
“என் வாழ்நாளில் எத்தனையோ மழை, வெள்ளத்தைப் பார்த்திருக் கிறேன். 1983-ம் ஆண்டு இப்படி ஒரு மழை சென்னை யில் பெய்தது. ஆனால், இந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அடையாற்றின் கரையோரங்களில் பொருட்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பார்த்திருக்கிறேன். இப்படி ஒரு மழை... யப்பா... என் வீட்டையே மூழ்கடிக்கும் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கட்டில், பீரோ எல்லாம் மூழ்கிவிட்டன. இதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. இதுநாள் வரையில் நான் சேர்த்துவைத்திருந்த இரண்டாயிரம் புத்தகங்கள் நீரில் கரைந்து, தூள் தூளாகிவிட்டன. நீர், நிலம் தொடர்பான புத்தகங்கள், சங்க இலக்கியங்கள், வரலாறு, தத்துவம், அரசியல் தொடர்பான புத்தகங்கள், தமிழ்ப் பேராயம் வெளியிட்ட புத்தகங்கள் என ஒன்று விடாமல் அனைத்தும் போய்விட்டன. கோயில் களின் தலபுராணப் புத்தகங்களே நூறுக்கும்மேல் இருக்கும். தவிர, செய்தித்தாள்களில் இருந்து ஏராளமான செய்திகளைக் கத்தரித்து, தொகுத்து வைத்திருந்தேன். மேடைகளில் பேசுவதற்குக் குறிப்புகள் தயாரிக்க அவைதான் எனக்குப் பயன்பட்டன. அவையும் போய்விட்டன. மழை எனக்குக் கொடுத்த பெரிய சோகம் இதுதான்.”
“ `வருமுன் காவாதான் வாழ்க்கை' என்ற குறளுக்கு ஏற்ப அரசு செயல்பட வில்லை. சென்னையில் 50 செ.மீ மழை வரும் என பி.பி.சி முதல் சென்னை வானிலை மையம் வரை எல்லோரும் எச்சரித் தார்கள். அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. மழைநீர் பெருக்கெடுத்து வரும்போது, பாதிப்பின் அளவை மதிப்பிட்டிருக்க வேண்டும். மக்களுடன் தகவல் பரிமாற்றம் நடத்த எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. ஊடகங்கள், வாட்ஸ்அப், ஃபேஸ்புக்... என ஏராளமான வசதிகள் இருக்கின்றன. எதையும் செய்யவில்லை. பாதிப்பு முடிந்து பத்து நாட்கள் கழித்துதான் தலைமைச் செயலாளரே அறிக்கை வெளியிடுகிறார். அதன் பிறகு முதலமைச்சர் வாட்ஸ்அப்பில் பேசுகிறார். இவற்றிலேயே ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன.''
``அடையாறு கரையோரக் குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றீர்கள். அரசுக்கு எதிரான போராட்டத்தை சளைக்காமல் எப்படி முன்னெடுக்கிறீர்கள்?''
“அரசுக்கு எதிரான போராட்டம் எனச் சொல்வதை நான் ஏற்க மாட்டேன். மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு வேண்டும். மக்களுக்கு நியாயமாகச் செய்யவேண்டிய கடமையை அரசு செய்யவேண்டும் என்றுதான் போராடுகிறோம். நீர்வழித் தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. ஆனால், கரையின் ஓரத்தில் இருக்கும் குடிசைகளை அப்புறப்படுத்திவிட்டு, ஏரிக்குள் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். அப்படியானால், இளைச்சவன் ஏழை மட்டும்தானா? ஜவஹர்லால் நேரு புனரமைப்பு திட்டத்தில், `ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அந்த மக்களுக்கு மூன்று கிலோமீட்டருக்குள் மாற்று இடம் தர வேண்டும். நல்ல கட்டடம், சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவை செய்துதர வேண்டும்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இவர்கள் ஏழைகளை விரட்டிவிட்டு சிங்காரச் சென்னையாக மாற்ற விரும்புகிறார்கள்.''
``நிவாரணப் பணிகளில் அரசின் செயல்பாடு சரியான நீதியைக் கொடுக்கவில்லை என்கிறீர்களா?’’
“ `மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பேன்' என வாட்ஸ்அப்பில் பேசிவிட்டுப் போகும் அளவுக்கு இது சாதாரண விஷயம் அல்ல. ஏழைகளுக்கு சொத்து என்று ஒன்றும் இல்லை. நடுத்தரவர்க்கம் சேமித்துவைத்த அனைத்தும் போய்விட்டன. தொழில்கள் அழிந்துபோய் விட்டன. இந்தச் சேதாரங்களை தனிமனிதனால் சரிசெய்ய முடியாது. அரசாங்கம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்பாக இயங்க வேண்டும். மனித உயிர்களின் மீது அரசுக்கு முதலில் அக்கறை வேண்டும். இங்கே நிவாரணம் என்பது செத்த பிறகு செய்யும் இறுதிச்சடங்குபோல உள்ளது.”
“கால் நகத்தில் காயம் ஏற்பட்டு நகச்சுத்தி வந்தால், நமக்குக் காய்ச்சல் வரும். அதேபோல், நதியும் ஓர் உயிர்தான். நதியின் போக்கை அடைத்துவிட்டால், நதிக்குக் காய்ச்சல் வரும். இயற்கைவிதியைப் புரிந்து செயல்படும் ஆட்சி யாளர்கள் இங்கு இல்லை. கேணி, மணற்கேணி, ஊருணி, ஊத்து, ஏரி, ஏறுதல், தாங்கல்... என நீர் சேமிக்கும் முறைகளில் 44 சொற்கள் வழக்கில் இருந்தன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 3,600 ஏரிகள் இருந்தன. இப்போது 600 ஏரிகள்கூட இல்லை. ஏரிகள் எல்லாம் பிளாட்டுகளாகவும் அரசு அலுவலகங்களாகவும் மாறிப்போய்விட்டன.''
``மழை வெள்ளச் செய்திகளுக்கு அப்பால், தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என அண்மை காலமாக சொல்லப்பட்டு வரும் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறீர்களா?’’
“காங்கிரஸ், தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விலகி 48 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்றளவும் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும்தான் அதிகாரத்தைப் பங்குபோட்டுவருகின்றன. இவர்கள் மக்களுக்கு வழங்கும் இலவச சலுகைகளை நம்பி ஆட்சி நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் தமிழ் இன்னமும் ஆட்சி மொழியாக இல்லை. கேரளாவில், கர்நாடகாவில் அந்தந்த மொழிகள்தான் ஆட்சிமொழியாக இருக்கின்றன. அம்பேத்கர், அரசியல் சாசனத் தொகுப்புரையில் ஒன்றைச் சொன்னார். ‘நாடா... மதமா... என வரும்போது மதத்தை எடுத்துக்கொண்டால், நாடு இரண்டாகிவிடும். தனிமனிதத் துதிபாடல்களுக்கு இடம் தரக் கூடாது. அது சர்வாதிகாரத்தில் போய் முடியும்’ என்றார். இங்கே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.''
`` `திராவிடக் கட்சிகளுக்கு மாற்று' எனப் பேசப்படும் கருத்தையும், உங்கள் கூற்றையும் இணைத்துப் பார்க்கலாமா?''
“திராவிடக் கட்சிகள் என்றே சொல்லக் கூடாது. கட்சிப் பெயரில் திராவிடத்தை வைத்திருக்கிறார்கள். திராவிடர் கழகத்தின் மூலம் எழுச்சியை ஏற்படுத்திய பெரியாருக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? அண்ணாவுக்கும் அவர் பெயரால் கட்சி நடத்தும் அ.தி.மு.க-வுக்கும் என்ன சம்பந்தம்? தி.மு.க-வுக்கும் அண்ணாவுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றுமே இல்லை. பெயரில்தான் அண்ணா இருக்கிறார். அவர்களது கொள்கைகளுக்கும் இவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இவர்கள் அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்பதை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அண்ணா முதலமைச்சராக வந்த பத்தாவது நாளில், ‘அமைச்சர்கள் தொழில் செய்யக் கூடாது’ என்றார். அவர் வாரிசு அரசியலை ஊக்குவிக்க வில்லை. கோயிலில் மண் சோறு சாப்பிடுவது, காவடி தூக்குவது, தீச்சட்டி எடுப்பது எல்லாம் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் செய்யும் துரோகங்கள்.”
``சகாயத்தின் கிரானைட் அறிக்கை தொடர்பாகக்கூட, தி.மு.க., அ.தி.மு.க இரு கட்சிகளுமே எதுவும் சொல்ல வில்லையே?
“கருத்து சொல்லாமல் இருக்கும்போதே அவர்களும் உடந்தை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இயற்கையை அழிப்பதற்கு எதிராக என்ன போராட்டம் நடத்தினாலும் அரசாங்கம் கண்டுகொள்வது இல்லை. இரண்டு ஆட்சியிலும் பாரபட்சம் இல்லாமல் மணல்கொள்ளை நடக்கிறது. மதுரை பி.ஆர்.பி கிரானைட்டுக்கு எதிராக சகாயம் ரொம்பவே கஷ்டப்பட்டார். அவரது 22 வருட பணிக்காலத்தில் 23 முறை பணிமாறுதல் செய்யப்பட்டிருக்கிறார். கிரானைட் முறைகேட்டில் ஆட்சியில் உள்ளவர்களுக்குத் தொடர்பு இருக்கும்போது எப்படிப் பேசுவார்கள்?”
``தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இயற்கை வளங்களைச் சுரண்டுகிறார்கள் என்றால், அவர்களோடுதானே இத்தனை ஆண்டுகள் கூட்டணி வைத்திருந்தீர்கள்?’’
“இதைக் கூட்டு எனச் சொல்லக் கூடாது. தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட கூட்டணி மட்டுமே. ஒவ்வோர் ஆட்சிக்காலத்திலும் இயற்கை வளங்களின் சுரண்டலுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிவந்திருக்கிறோம். கூட்டணியை மனதில்கொண்டு மௌனம் காக்கவில்லை.''
`` `அடுத்த முதலமைச்சராக, சகாயம் வர வேண்டும்’ என சில இளைஞர்கள் குரல்கொடுக்கிறார்களே?’’
“சகாயத்தின் செயல்பாடுகள் இளைஞர் களிடம் அதிகக் கவனத்தைப் பெற்றுள்ளன. இது வரவேற்கப்படவேண்டிய விஷயம். அவருடைய நேர்மையைப் பாராட்ட வேண்டும். அரசியல் என வரும்போது கொள்கை, சமுதாய மாற்றங்கள் குறித்த பார்வை போன்றவை முக்கியமானவை. இதை சகாயமும் அவரை ஆதரிப்போரும் மனதில் கொள்ள வேண்டும்.''
``அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயரும் இருக்கிறது...’’
“அய்யய்யோ... இதை எல்லாம் எழுதாதீங்க. என் மீதான நல்லெண்ணத்தில் சிலர் சொல்கிறார்கள். அவ்வளவுதான்.”
``மக்கள் நலக் கூட்டணிக்குள் விஜயகாந்த் வரலாம் என்கிறார்கள். ஆனால், விஜயகாந்தின் சமீபத்திய செயல்பாடுகள் பற்றி இடதுசாரிகள் எதுவும் பேச மறுப்பது ஏன்?’’
“அவர் ஓர் அரசியல் கட்சியின் தலைவர். அவரது செயல்பாடுகளைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.”
`` `இடதுசாரிகள் இணைவது என்பது, காலத்தின் கட்டாயம் மட்டும் அல்ல; தேசத்தின் தேவை’ என்கிறீர்கள். இது சாத்தியமா?’’
“அரசியல் என்பது உழைக்கும் மக்களுக் கானது. அவர்களின் நலன்களுக்கானது. இடதுசாரி இயக்கங்கள் கட்டாயம் இணைய வேண்டும். மதவாதச் சக்திகள் மக்களைப் பிளவு படுத்துகின்றன. இவற்றை எல்லாம் வலுவாக எதிர்க்கக்கூடிய சக்திகள் ஒன்றுசேர வேண்டும்.''
``இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. நீங்கள் ஏறத்தாழ 72 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் செயல்பட்டு வருகிறீர்கள். இந்தத் தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்?’’
``ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் ஆக உங்கள் பணிகள் நிறைவைத் தந்தன என எடுத்துக்கொள்ளலாமா?’’
“அப்படிச் சொல்ல முடியாது. சாதிக் கட்டமைப்புக்கு எதிராகப் போராடி சில அழிவுகளில் இருந்து மக்களைக் காப்பாற்றியி ருக்கிறோம் என்பதில் திருப்தியடைகிறேன். இன்னும் செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். பாதை மிகக் கடுமையாக இருக்கிறது. நிறைவு என்ற ஒரு வார்த்தையில் அதை நிரப்ப விரும்பவில்லை.”
`` `வியட்நாம் நாட்டின் தலைவர் ஹோசிமின் என் ரோல்மாடல்' என்று முன்பு ஒருமுறை சொன்னீர்கள். அவர்கூட மரணிக்கும் தருவாயில், ‘என்னால் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ முடியவில்லை’ என்றார். அவ்வளவு கடினமானதா இந்தப் பாதை?’’
“நிச்சயமாக... எல்லா நேரத்திலும் நேர்மையாக இருந்து, தவறுகளுக்கு எதிராகப் போராடுவது மிகக் கடுமையான பாதைதான். `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்றுதான் வள்ளுவர் சொல்கிறார். ஹோசிமின் மிகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது போராட்ட வாழ்க்கை அற்புதமானது. ஒருமுறை காந்தி சமாதிக்கு வந்து பார்த்தவர், ‘எங்கள் நாடுகளில் ஏழை, பணக்காரர் வேற்றுமை உள்ளது. இந்தியாவில் சாதி, மத வேறுபாடுகள் இருந்தாலும், அனைவரையும் ஒன்றுதிரட்டி சுதந்திரத்துக்குப் போராடி வெற்றிபெற்றது மிகப் பெரிய விஷயம்’ என்றார். இன்றைக்கும் எனக்குப் பிடித்த தலைவர் ஹோசிமின்தான்.”
``தியாகம் இல்லாமல் எதையும் சாதித்துவிட முடியாது எனச் சொல்கிறீர்கள். அந்தத் தியாகங்களுக்கு மக்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்காவிட்டால் சோர்வு வரத்தானே செய்யும்?’’
“ஒரு சிக்கலுக்கு நிலையான தீர்வு கிடைக்கும் வரை போராடுவது, அதன் மூலம் வரும் இழப்புகளை எதிர்கொள்வது, தாங்கிக்கொள்வது... இதுதான் தியாகம். இதை மக்கள் அங்கீகரிக்க வேண்டும், வரலாற்றில் தனது தியாகம் நினைவுகூரப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு. அங்கீகாரத்தை எதிர்பார்த்து பொது வேலையில் ஈடுபடக் கூடாது.''
``91 வயதில் அடியெடுத்துவைத்திருக்கிறீர்கள்
“சிறு வயதில் சைவ சாப்பாடுதான் சாப்பிடுவேன். கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்த பின்னர் ஊர் ஊராகப் பயணம் போக வேண்டியிருந்தது. சாப்பிடாத விலங்கு இல்லை எனச் சொல்லும் அளவுக்கு எல்லாவற்றையும் சாப்பிட்டாகி விட்டது. எனக்கு மீன், கருவாடு, கத்திரிக்காய் பிடிக்கும். கத்திரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி வருவதால், அதையும் நிறுத்திவிட்டேன். இப்போது ஐந்து ஆண்டுகளாக சைவ சாப்பாடு தான். தினமும் காலையில் வேதாத்ரி மகரிஷியின் இலகுவான தேகப்பயிற்சி செய்வேன். கேப்பை, கம்பு உணவுகளை விரும்பிச் சாப்பிடுவேன். மனதை லேசாக வைத்திருக்க, கவிதைகளை விரும்பிப் படிப்பேன். மழை பற்றி விகடனில் மாரி செல்வராஜ் எழுதிய கவிதை நெகிழ்வைத் தந்தது. பாரதியின் பாடல்கள் எப்போதும் எனக்குள் உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்!'' விகடன்,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக