சனி, 16 ஜனவரி, 2016

கலைஞர்: கச்சா எண்ணெய் 105 டாலரில் இருந்து 30 டாலராக குறைந்தும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்க மறுக்கிறார்கள்?

பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி உயர்வை உடனடியாகக்
குறைப்பதற்கு மத்திய அரசு முன் வர வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "பெட்ரோல், டீசலுக்கு எத்தனை முறை தான் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தப் போகிறதோ? அதனை ரத்து செய்ய முன் வராத மத்திய அரசு, ஒரு மாதக் காலத்திற்குள்ளேயே மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை உயர்த்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 30 அமெரிக்க டாலர் தான் என்ற அளவுக்கு உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இன்னமும் 65 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்ற விலையில் தான் நிலைமை உள்ளது.

2014 ஏப்ரலில் 105 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 2015 ஜனவரியில் 50 டாலர்கள், மார்ச் மாதத்தில் 44 டாலர்கள் எனக் குறைந்தது. கடந்த டிசம்பர் மாதத்தில் 40 டாலர்களுக்கும் குறைவாக கீழே இறங்கத் தொடங்கி, தற்போது 30 டாலர்கள் என்ற அளவுக்கு வந்து விட்டது. 2015 டிசம்பர் 15ஆம் தேதி இரவு டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு 50 காசுகளும், டீசல் லிட்டருக்கு 46 காசுகளும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பு வந்தவுடனே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தி, பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ. 1.17 காசுகளும் உயர்த்தப் பட்டன. இதன் மூலம் அரசுக்கு 2,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்தது. அப்போதே நான் அதை ரத்து செய்ய வேண்டுமென்று அறிக்கை விடுத்தேன்.
கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உடனடியாக அதே அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்த்துபவர்கள், தற்போது கச்சா எண்ணெய் விலை குறையும்போது மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏதோ பெயர் அளவுக்கு 50 காசு, 60 காசு என்று குறைக்கிறார்கள்.
உதாhரணமாக, சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்துள்ளதைத் தொடர்ந்து, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 32 பைசாக் களும், டீசல் விலையை லிட்டருக்கு 85 காசுகளும் மட்டுமே குறைத்திருக்கிறார்கள்.
இந்த விலை குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியான ஒரு சில நிமிடங் களிலேயே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 75 பைசாவும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் 83 பைசாவும், மத்திய அரசால் உயர்த்தப் பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் 5 முறைக்கு மேல் கலால் வரி மத்திய அரசால் உயர்த்தப்பட்டது. 2014இல் கலால் வரி மூலம் ரூ. 9,184 வருவாயை மத்திய அரசு ஈட்டியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை பத்து முறையும், டீசல் விலை ஆறு முறையும் குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்வுக்கு, எண்ணெய் விலை உயர்வு ஒரு காரணமாகச் சொல்லப்படுவது உண்டு.
கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும்போது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளையும் அதே அளவுக்குக் குறைத்தால், ஒட்டு மொத்த விலைவாசியும் குறைய வழி பிறக்கும்.
எனவே மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்த உண்மைகளின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரியை உடனடியாகக் குறைப்பதற்கு முன் வர வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்" என அவர் வலியுறுத்தியுள்ளார். //tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: