நடிகர் சிம்புவின் தந்தையார் டி.ராஜேந்தர் சினிமா பின்னணியோ, செல்வந்தர் குடும்பத்திலோ பிறக்கவில்லை. அவரது சொந்த ஊர் சென்னை அல்ல. அன்றைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுநகரமான மயிலாடுதுறைதான். அவரது மாபெரும் வெற்றிக்கு காரணம்.. யாருடைய சிபாரிசோ, செல்வாக்கோ அல்ல. தனது படைப்புத் திறனால் மட்டுமே தன்னுடைய வெற்றியை அடைந்தவர். அவர் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத தன்னம்பிக்கையால் பின்னாட்களில் திரைத்துறையில் மாபெரும் உயரங்களைத் தொட்டவர். சினிமாவுக்கு உரிய முகக்கட்டு இல்லாதவர், என அவரைக் பரிகாசித்தவர்கள் அவரது சில்வர் ஜூபிளி படங்களைக் கண்டு பின்னாளில் வாய் மூடினர்.1980 ஆண்டு, எந்த காந்தக் கவர்ச்சியும், அறிமுகமும் இல்லாமல் முற்றிலும் புதுமுக நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களைக் கொண்டு உருவான படம் "ஒரு தலை ராகம்'. அப்படத்தின் கதை வசனம் பாடல்களை எழுதி அறிமுகமான டி.ராஜேந்தரே அப்பாடல்களுக்கு இசையும் அமைத்திருந்தார். ’கடவுள் வாழும் கோவிலிலே', ’வாசமில்லா மலரிது', ’நான் ஒரு ராசியில்லா ராஜா', ’இது குழந்தை பாடும் தாலாட்டு', "என் கதை முடியும் நேரமிது', "கூடையிலே கருவாடு' போன்ற அந்தப்படப்பாடல்களுக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கிறார்கள். காதல் படம் தான் என்றாலும் நாயகன் நாயகி கட்டித் தழுவது போன்றோ, தொட்டுப் பேசுவது போன்றோ கூட காட்சிகள் இல்லாத படம்.. ஒரு வருடம் ஓடிய தமிழ்ப்படங்களின் வரலாற்றில் "ஒரு தலை ராகமும்' ஒன்று.
1980க்குப் பிறகு டி.ராஜேந்தரின் வெற்றியைப் பார்த்து, சினிமா கனவுகளோடு சென்னை நோக்கி படையெடுத்த சாமானிய குடும்பத்து பிள்ளைகள் ஏராளம்., 34 வருடங்களுக்கு பிறகு சென்னையில் நடந்த ஓர் நிகழ்வில் ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த பலரும் ஒன்றாய் சந்தித்தனர். அதில்.. டி. ஆர் சொன்னார்... ”ஒருதலை ராகம் படத்தில் சந்திரசேகர் நடித்த கேரக்டரில் என்னை நடிக்கும்படி இப்ராகிம் கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த கேரக்டரில் சிகரெட் பிடிக்க வேண்டி இருந்ததால் நான் நடிக்க மறுத்துவிட்டேன். இன்று வரை சிகரெட்டை தொட்டது இல்லை. ‘ஒரு தலை ராகம்’ படத்தில் நடித்த உஷாவை திருமணம் செய்து கொண்டு அந்த படத்தோடு சேர்ந்து வாழ்வது போன்ற உணர்விலேயே எப்போதும் இருக்கிறேன். ’’ என்று நெகிழ்ந்தார். 34 வருடங்களுக்கு பிறகும் கூட போராடி பெற்ற அந்த முதல் பட வாய்ப்பு, அதன் வெற்றியை, அதை இன்றளவும் அனுபவித்து வரும் உணர்வை அவர் பகிர்ந்தபோது கூட்டத்தினர் மேலும் நெகிழ்ந்தனர்.
இன்றளவும்
சில வணிகக் குடும்பங்களில் ஓர் பழக்கம் இருக்கிறது. தங்களுக்குப்பிறகு
தங்கள் நிறுவனங்களில் தங்கள் வாரிசுகளை உட்கார வைப்பதற்கு முன்பு அதே
தொழிலில் உள்ள வேறு நிறுவனங்களிடம் வேலைக்கு அனுப்புவார்கள். இன்னொரு
இடத்தில் வேலையாளாக இருந்து பயிற்சி பெற்ற பின்னரே அவர்களிடம் தனது
பொறுப்புகளை ஒப்படைப்பர். தொழிலில் உள்ள கஷ்ட நஷ்டம் தெரியாமல் பிள்ளைகள்
பொறுப்பிற்கு வந்துவிடக்கூடாது என அப்படிச் செய்வர்.
வானில் பறக்கும் கழுகுகளிடம் ஓர் பழக்கம் இருக்கிறது....கூட்டில் வைத்து குஞ்சுக்கு உரிய உணவு கொடுத்து பராமரிக்கும் கழுகுகள், சிறகுகள் முளைத்ததும், தன் குஞ்சை கூட்டின் விளிம்பிற்கு தன் பெரிய இறக்கைகளால் அடித்து தள்ளும். உயர மரத்தில் இருந்து முதல் முறையாக அக்குஞ்சு கீழே தெரியும் அகண்ட பூமியையும், மேலே பரந்து விரிந்த வானத்தையும் கண்டு மிரளும்.
சிம்புவால் இதற்குமுன் இப்படியான சிறு சிறு சர்ச்சைகள் எழுந்தபோது கூட அவை சிம்புவால் வெளியிடப்படவில்லை. யாரோ வெளியிட்டு விட்டனர் எனும் பல்லவியே பாடப்பட்டது. இன்று சமூகத்தை எதிர்த்து குமுறும் சிம்புவின் பெற்றோர் தங்கள் வீட்டு அமைதி தொலைந்தது என கதறும் பெற்றோர்; தமிழகத்தை விட்டே போகிறோம் என பேசும் பெற்றோர்... தங்களுக்கு நேர்ந்த இத்தனை துயரங்களுக்கும் காரணமாக இந்தச் சமூகமே குற்றவாளி என்பதுபோல் சித்தரிக்கிறார்கள். மாறாக தன் மகனே என்பதை உணர மறுப்பது மற்றொரு வேதனை. வீட்டில் கண்டிக்கப்படாத பிள்ளைகள் சமூகத்தால் கண்டிக்கப்படும் எனும் வாக்கு எத்தனை நிஜம்! -யாணன்
(நிறுவனர்)
கண்ணகி அம்மன் வழிபாட்டு மன்றம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக