மட அதிபதிகள்19.02.2013 தினமணியில் “அரங்கேறும் வக்கிரங்கள்” என்று பாலியல் வன்முறை குறித்து ஒரு தலையங்கம். டெல்லி பாலியல் வன்முறை சம்பவத்திற்குப் பிறகு ஊடகங்களின் அறச்சீற்றம் தாங்க முடியாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. அதில் தான் மட்டும் தனித்து தெரியவேண்டும் என்று நினைக்கிறார் ஆர்.எஸ்.எஸ்-ன் பிரியத்திற்குரிய வைத்தி மாமா!
முறை தவறிய உறவு, காரணமற்ற விவாகரத்து என்று மேலைநாட்டு நாகரீகத்தை எள்ளி நகையாடியது போய் இன்று அவர்கள் இந்தியாவை வக்கிர தேசம் என்று முகம் சுளிக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாக துக்கப்படுகிறார் வைத்தி. கூடவே தாய்மை, பெண்மையை உயர்வாக கருதிய இந்திய நாகரீகம் போலித்தனமானது என்பதாய் சமீபத்திய சம்பவங்கள் தோலுரிப்பதாகவும் அவர் வருந்துகிறார்.
பாரதம் கற்புக்கும், விதேசிகள் விபச்சாரத்திற்கும் பெயர் போனவை என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் முடிவு. உண்மையில் கற்பின் மறுபக்கம்தான் விபச்சாரம் என்பது இவர்கள் அறியாதது அல்ல, மறைக்க விரும்பும் ஒன்று என்பதே உண்மை. சீதை, கண்ணகிகளை கற்புக்கரசிகளாய் தொழும் நாட்டில்தான் பார்ப்பன, ஷத்திரியர்களின் பொறுக்கித்தனத்திற்கு பயன்படும் விதத்தில் தேவதாசி எனும் உலகின் முதல் விபச்சார நிறுவனத்தை ஏற்படுத்தினார்கள். vinavu.com
தேவசாதி முறையை ஒழிக்க வேண்டுமென்று திராவிட இயக்கம் போராடிய போது சத்திய மூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் வரலாறு பதிந்திருக்கிறது.
எடுத்ததெற்கெல்லாம் விவாகரத்து என்று மேலைநாடுகளை கிண்டல் செய்யும் அம்பிகள் முதலில் கணவன் என்னதான் பொறுக்கியாக இருந்தாலும் அவனை கண்கண்ட தெய்வமாக போற்ற வேண்டும் எனும் இந்து மதத்தின் கொடுமையைத்தான் போற்றுகிறார்கள். அதன்படி விவாகரத்து எனும் ஜனநாயக உரிமையைக் கூட வழங்காத பாரதம்தான் இழிவானதே ஒழிய அந்த உரிமையை அங்கீகரித்திருக்கும் மேலைநாடுகள் அல்ல. இன்று அந்த உரிமையை இந்தியா இறக்குமதி செய்திருப்பதாக ஓநாய் கண்ணீர் விடும் சங்க பரிவாரங்கள் மற்றும் அதன் ஊது குழலான தினமணி போன்றோரின் இதயத்தில் இருப்பது பச்சையான ஆணாதிக்கமே அன்றி பெண்ணுரிமை அல்ல.
“ இறைநம்பிக்கை குறைந்ததுகூட, இன்றைய வக்கிரத்தனங்களுக்குக் காரணமாக இருக்கக் கூடும். தவறு செய்தால் தெய்வம் தண்டிக்கும் என்கிற அச்ச உணர்வும், சமுதாய ஏளனத்துக்கு நாம் ஆளாக நேரும் என்கிற பயமும் இல்லாமல் போய்விட்ட சூழல், தவறுகளுக்குக்  கதவுகளைத் திறந்து வைக்கிறது.” என்கிறார் தினமணியின் ஆசிரியர்.
ஒருவழியாக இறைநம்பிக்கை குறைந்து வருவதை இந்துக்களின் பிரச்சார பீரங்கி பத்திரிகையே ஒத்துக் கொண்டது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் பாலியல் வன்முறைகள் மட்டுமல்ல மற்ற வக்கிரங்களுக்கெல்லாம் காரணம் பக்தி உணர்வு குறைந்து போனதாக சொல்லுவது பச்சையான பார்ப்பனிய வெறியே அன்றி வேறல்ல. சங்கர ராமனை போட்டுத்தள்ளிய ஜெயேந்திரனோ, இல்லை பல் மருத்துவக் கல்லூரிக்காக முறைகேடுகளில் ஈடுபட்ட பங்காருவோ இல்லை வருமானவரி, விற்பனை வரி ஏய்ப்பு செய்த பாபா ராம்தேவோ, இன்ன பிற கிரிமினல் சாமியார்களெல்லாம் நாத்திகர்களா?
குஜராத்தில் 2000த்திற்கும் மேற்பட்ட இசுலாமிய மக்களை இனப்படுகொலை செய்து அதை தெகல்கா வீடியோவிலும் ஒத்துக் கொண்ட இந்துமதவெறியர்களெல்லாம் சாட்சாத் கடவுள் நம்பிக்கை கொண்ட அதி தீவிர பக்தர்கள்தானே? இதிலிருந்து தெரியவரும் உண்மை என்னவென்றால் ஒருவரின் ஆன்மீகம் அல்லது நாத்திக உணர்வு மட்டும் ஒருவனின் சமூக ஆளுமையை உருவாக்கி விடாது. வரைமுறையற்ற அதிகாரம் கையில் இருக்கும் போதும், எளிய மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும் போதும்தான் இத்தகைய கிரிமினல்கள் அவர்கள் சாமியார்களாக இருந்தாலும் தவறு செய்கிறார்கள்.
சங்கரமடத்தின் முடிவுகள் சேரி மக்களின் ஒப்புதலோடுதான் எடுக்க முடியும் என்று இருந்திருந்தால் சங்கரராமன் கொலை செய்யப்பட்டிருக்க முடியாது. இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பதால்தான் போபார்ஸ் முதல் ஹெலிகாப்டர் ஊழல் வரை இறைநம்பிக்கை உடைய பெருச்சாளிகள் ஊழல் செய்கிறார்கள். அப்படி ஊழல் செய்பவர்கள்தான் தமது கருப்புப்பணத்தின் ஒரு பகுதியை திருப்பதி உண்டியலில் போடுகிறார்கள். மக்களுக்கு பதில் சொல்லக் கடமை பட்டவர்கள் எனும் நிலைமை உருவாகாத வரை இவர்கள் கடவுளுக்கே கமிஷன் கொடுத்து முறைகேடுகளை தொடர்வதுதான் நடக்கும். அவ்வகையில் இறைநம்பிக்கைதான் ஒரு மனிதனது தவறுகளுக்கு பரிகாரம், உண்டியல், சடங்கு என்று சலுகைகள் காண்பிக்கிறதே ஒழிய நாத்திகம் அல்லை.
“கற்பைவிட சுகம்தான் பெரிது என்று பெண்களும், ஒழுக்கத்தையும் கௌரவத்தையும்விட பணம் சம்பாதிப்பதுதான் முக்கியம் என்று ஆண்களும் கருதிவிட்டால் அந்தச் சமுதாயத்தைச் சீர்கேடிலிருந்து காப்பாற்றவே முடியாது.” என்ற வரிகளின் மூலம் தினமணி வைத்தி என்ன கூறவிரும்புகிறார்?
டெல்லி மாணவி பேருந்தில் சிதைக்கப்பட்ட செய்தி வெளியான போதே ‘அந்த மாணவி இரவில் ஏன் தனியாக சென்றாள், ஆண் நண்பருடன் தனியாக போக வேண்டிய காரணம் என்ன?’ என்றெல்லாம் அட்வைசு பண்ணியதன் மூலம் அந்த பொறுக்கிகளின் குற்றத்தை தணித்தவர்தான் இந்த வைத்தி. இப்போது அதே பெண்கள் கற்பை விட சுகம் பெரிது என்று கெட்டுப் போகிறார்கள் என்கிறார். அதாவது வீட்டுக்கு அடக்க ஒடுக்கமான அடிமைகளாக இல்லாமல் வெளியில் செல்லும் பெண்கள் சுகத்திற்க்காக அலைபவர்கள் என்று முத்திரை குத்துகிறார். இந்த வக்கிரம் வன்புணர்ச்சி செய்யும் குற்றவாளிகளை விட எந்த விதத்தில் குறைந்தது?
“ஓரினச் சேர்க்கை, திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது, இயற்கையை மீறிய திருமண பந்தங்கள், சின்னச் சின்னப் பிரச்னைகளுக்கும்கூட விவாகரத்து என்பவை எல்லாம் சமுதாயத்தில் சர்வ சாதாரணமான நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருப்பதை நாகரிகம் என்று இந்தியச் சமுதாயமும் ஏற்றுக்கொள்ளுமேயானால்,…”
மேலே வைத்தி மாமா பட்டியிலிட்டிருப்பவைகளுக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் என்ன சம்பந்தம்? இவைதான் பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணம் என்றால் பாலியல் குற்றம் என்றால் என்ன என்பதே இவர்களுக்குத் தெரியவில்லை. விநோதினியின் மேல் அமிலம் ஊற்றிய சுரேஷ் யார்? ஏன் வீசினான்? மேற்கண்ட பட்டியலில் ஒன்று கூட அவனுக்குப் பொருந்தாது எனில் குற்றத்திற்கு காரணம் என்ன? அவன் காதல், பெண் குறித்தோ இல்லை ஒரு காதலை மறுப்பதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை உண்டு எனும் குறைந்த பட்ச ஜனநாயக உணர்வைக்கூட புரிந்து கொண்டிருக்கவில்லை. பெண்கள் தமது வேட்கைகளுக்கு பணிந்து கிடக்கக்கூடிய அடிமைகள் என்று பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தால் உருவாக்கப்பட்டவன் சுரேஷ். சுரேஷைக் கேட்டால் கூட மேலே வைத்தி மாமா பட்டியிலிட்டிருப்பதுதான் ஒழுக்கக் கேடுகளுக்கு காரணம் என்பதை ஏற்றுக் கொள்வான். அதாவது பெண்ணை கட்டுப்பட்டே ஆகவேண்டிய விலங்கு என்று கருதுபவர்கள்தான் ஓரினச் சேர்க்கை, லிவிங் டுகெதர், விவாகரத்து போன்றவற்றை எதிர்க்கிறார்கள். அந்த வகையில் வைத்தி மாமா இங்கே சொல்லியிருப்பது சேம் சைடு கோல்.
இறுதியில் விசயத்திற்கு வருகிறார் வைத்தி.
“மூலைக்கு மூலை திறக்கப்பட்டிருக்கும் மதுபானக் கடைகளும், தெருவெங்கும் அசைவ உணவைப் பரிமாறும் துரித உணவகங்களும், கையேந்தி பவன்களும், அதிகரித்து விட்டிருக்கும் அசைவ உணவுப் பழக்கமும் உணர்ச்சிகளை அதிகரித்து, சாத்வீக குணத்தை மழுங்கடித்து விடுகின்றன என்கிற உண்மையை நாம் எப்போது உணரப் போகிறோம்? அவை மனிதனுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடும் என்பது விஞ்ஞானம் ஏற்றுக்கொண்டிருக்கும் உண்மை.” இதுதான் வைத்தி முத்தாய்ப்பாக சொல்ல வரும் நீதி. அல்லது காலந்தோறும் நெறி தவறாத பார்ப்பனியத்தின் வேதம்.
வைத்திமாமா கண்டுபிடிப்பின்படி படுக்கையறையை பள்ளியறையாகவும், கருவறையை காமாந்திர அறையாகவும் மாற்றிய ஜெயேந்திரன், நித்தியானந்தா, தேவநாதன் போன்றோர் ஒன்று மாட்டுக்கறியை முழுங்கி  மது குடிப்பவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல் நெய், தயிர், பருப்பு வகையறாக்களை அதிகம் விழுங்குபவர்கள் காமவெறியர்களாக இருக்க வேண்டும். எது உண்மை வைத்தி அவர்களே?
சைவம் சாத்வீக உணர்ச்சி, அசைவம் அசுர உணர்ச்சி என்பது பார்ப்பன இலக்கியங்கள் தொட்டு பலரும் சொல்லும் பச்சையான பார்ப்பனியத் திமிரே அன்றி வேறல்ல. இதை விஞ்ஞானம் வேறு ஏற்றுக் கொண்டிருக்கும் உண்மை என்பதாக அடித்து விடுகிறது தினமணி. ராகு, கேது கதை மூலம் கிரகணங்களை விளக்கியதுதான் இவர்களது விஞ்ஞான யோக்கியதைக்கு சான்று.
மாட்டுக்கறி தின்னும் பஞ்சமர்கள், மற்ற கறிகளைச் சாப்பிடும் சூத்திரர்கள் என்று உணவின் மூலமும் இழிவுபடுத்தும் பார்ப்பனியத்தின் திமிரைத்தான் வைத்தி இங்கே பிரதிபலித்திருக்கிறார். மட்டன், சிக்கன், பீஃப் சாப்பிடுபவர்கள்தான் பாலியல் வன்கொடுமைகளை செய்கிறார்கள் என்று காட்டுவதன் மூலம் இங்கே சைவ உணவு அல்லது பார்ப்பனியத்தின் ‘கொல்லாமையை’ புனிதப்படுத்துகிறார்கள். மோடியின் குஜராத்திலோ இல்லை தாக்கரேவின் மும்பையிலோ வெட்டிக் கொல்லப்பட்ட மக்களின் ரத்தம் இன்னும் காயாத நிலையில் சைவ உணவுக்காரர்களின் கொலை வெறியை உலகமே பார்த்தது உண்மை இல்லையா?
அல்லது அமெரிக்காகாரன் அதிகம் கறி சாப்பிடுவதால்தான் ஈராக், ஆப்கானில் மக்களை கொன்று குவித்தானா? இல்லை புலால் உண்ணாமையை போதித்த புத்த மதத்தைச் சேர்ந்த ராஜபக்சேவும் சிங்கள இனவெறி இராணுவமும் அகிம்சை பிரியர்களா? உணவுக்கும் வன்முறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதுதான் முதல் உண்மை.
சரி வைத்தியின் வாதத்தை பெண்களுக்கும் பொருத்தி பார்த்தால் என்ன வரும்? மாமிசம் சாப்பிடும் பெண்கள்தான் அதிகம் ‘கற்பழிப்பை’ விரும்பி வரவழைக்கிறார்கள் என்று கூட வியாக்கியானம் செய்யலாமே? பாலியல் வன்முறையோ இல்லை வாழ்வியல் அடக்குமுறைகளோ எதுவும் குறிப்பிட்ட  சமூக பொருளாதார அரசியல் காரணங்களில் பிறக்கின்றன. அவை உணவினால் வருகின்றன என்று சுருக்குவது முட்டாள்தனமானது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை ஆதிக்க சாதிவெறிக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பார்ப்பனியத்தின் பச்சையான சாதிவெறியாகும்.
இந்த ஒன்றிற்காகவே வைத்தி மற்றும் தினமணி மேல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.
தினமணி ஒரு பார்ப்பனியப் பத்திரிகை அல்லது ஆர்.எஸ்.எஸ்இன் ஊது குழல் என்று ஒவ்வொரு முறையும் நாங்கள் சொல்லும் போதும் இல்லை அது ஒரு நடுநிலைப் பத்திரிகை என்று வக்காலத்து வாங்கும் அம்பிகள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்?