புதன், 20 பிப்ரவரி, 2013

வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட சுப்ரீம் கோர்ட் தடை நீட்டிப்பு : விசாரணை 6 மாதம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: வீரப்பன் கூட்டாளிகளை தூக்கிலிட விதிக்கப்பட்ட தடையை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த தமிழக  கர்நாடக எல்லைப் பகுதியான பாலாறு அருகே கடந்த 1993ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி அதிரடிப்படை போலீசார் சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த கண்ணி வெடி தாக்குதலில் போலீசார் மற்றும் வனத்துறையினர் உள்பட 22 பேர் பலியாயினர். இதுதொடர்பான வழக்கு, மைசூர் தடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 127 பேரில் 108 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளான வீரப்பன் கூட்டாளிகள் பிலேந்திரன், மீசை மாதையன், ஞானப்பிரகாசம், சைமன் ஆகியோருக்கு 2001ல் ஆயுள் தண்டனை விதித்து மைசூர் தடா கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஆயுள் தண்டனை குறைவானது என கூறி, 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து 2004ம் ஆண்டு தீர்ப்பளித்தது.  தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் தாக்கல் செய்திருந்த கருணை மனுவை கடந்த 13ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 4 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுவை கடந்த திங்கள் கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, விக்ரமஜித் சென் ஆகியோரை கொண்ட பெஞ்ச், தூக்கு தண்டனைக்கு புதன்கிழமை (இன்று) வரை இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளன. இவற்றின் தீர்ப்புகளுக்காக காத்திருக்கிறோம். இந்த வழக்கு விசாரணை 6 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அடுத்த உத்தரவு வரும் வரை 4 பேரின் தூக்கு தண்டனைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது’’ என்று உத்தரவிட்டனர்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: