திங்கள், 21 அக்டோபர், 2013

தர்மகர்த்தாக்கள் மோதலால் பூட்டிய கோவில் ! பூட்டுக்கு மாலை அபிஷேகம் ...


அன்னூர் : கோஷ்டி மோதல் காரணமாக கோயில் பூட்டப்பட்டு இருந்ததால் கேட்டின் மீது மாலை அணிவித்து பக்தர்கள் சாமி கும்பிட்டார்கள். கோவை மாவட்டம் அன்னூர் அருகே அ.மேட்டுபாளையத்தில் 150 ஆண்டு பழமையான பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நடூரை சேர்ந்த ராஜப்பன் தலைமையில் ஒரு பிரிவினரும், மணி பூசாரி தலைமையில் ஒரு பிரிவினரும் செயல்பட்டு வந்தனர்.
கோர்ட்டில் ராஜப்பன் தொடர்ந்த வழக்கில், 4 வாரம் சனிக்கிழமை திருவிழாவை முடித்துக் கொண்டு கோயிலை பூட்டி வட்டாட்சியரிடம் சாவியை ஒப்படைக்கவேண்டும் என்றும், 5வது வாரம் மணி பூசாரி தரப்பினர் விழாவை கொண்டாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் ஈரோடு, புளியம்பட்டி, மைசூரு, பெங்களூரு, கோவை உள்பட பல இடங்களில் மணிபூசாரி தலைமையிலான பக்தர்கள் 5வது சனிக்கிழமையை கொண்டாட கோயிலுக்கு வந்தனர். அப்போது, கோயிலின் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வட்டாட்சியரிடம் கேட்டபோது, ராஜப்பன்  தரப்பினர் சாவி எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதனால் பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்து நேற்று காலை பூட்டிய கேட்டின் மீது மாலை அணிவித்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் அருகில் உள்ள தோட்டத்தில் உணவு சமைத்து அன்னதானம் வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை: