புதன், 23 அக்டோபர், 2013

முன்னாள் போராளிகள் ஏன் தமிழ் சமுகத்தால் ஒதுக்கப்படுகிறார்கள் ?

இலங்கையில் யுத்தம் 2009-ம் ஆண்டு மே மாதம்
முடிந்தது. இப்போது 4 ஆண்டுகளின் பின், அங்கு நிலவும் சூழ்நிலை பற்றிய தகவல்களில், மிக குறைந்த அளவு தகவல்கள்தான் வெளியே மீடியாக்களில் வெளியாகின்றன. பல தகவல்கள் வெளியாகாமலேயே போய்விடுகின்றன.
rehab-centres-20131021-1இதற்கு காரணம், 30 ஆண்டு கால யுத்தம் முடிவுக்கு வந்தபின், அதனால் ஏற்பட்ட மாற்றங்களை ஒரு மீடியா டீமின் 10 நாள் டூரில் முழுமையாக கவர் பண்ணிவிட முடியாது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரக் கணக்கான விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளும் உள்ளனர். இவர்களில் பெரிய சதவீதமானவர்கள் தடுப்பு முகாம்கள், மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டனர். தற்போதும் பல முன்னாள் போராளிகள், விடுதலை தேதியை எதிர்நோக்கி, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளனர். விடுவிக்கப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் பெரும்பாலும் வசிக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக கிழக்கு மாகாணத்திலும், மிக சொற்ப அளவில் நாட்டின் மற்றைய பகுதிகளிலும் உள்ளனர்.

“இனத்துக்காக தமது உயிரை பணயம் வைத்து யுத்தம் புரிந்தவர்கள்” என்று யுத்தம் நடந்த காலத்தில் வெளிநாட்டு தமிழர்களால் போற்றப்பட்ட இவர்கள், தற்போது என்ன ஆனார்கள், எப்படி உள்ளார்கள், இவர்களின் எதிர்காலம் என்ன என்பது குறித்து, மீடியாக்களில் பெரிய கவரேஜ் கிடையாது.
அதற்கு காரணம், நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, குறுகிய காலத்தில் முழுமையான தகவல்களை திரட்ட முடியாது என்பது ஒரு விஷயம். இரண்டாவது, எங்கே யாரை சந்திக்க முடியும் என்று எல்லோருக்கும் தெரியாது. இலங்கையில் சில மாதங்களாக தங்கியிருந்து வெவ்வேறு இடங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த ரிப்போர்ட் தயாரிக்கப்படுகிறது.
நடந்து முடிந்த யுத்தத்தில் பாதிப்புக்கு உள்ளானவர்களில் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து யுத்தம் புரிந்த முன்னாள் போராளிகள் என்று சொன்னால், ஆச்சரியம் ஏற்படும். ஆனால், அதுதான் உண்மை.
யுத்தம் முடிந்தபின் கைது செய்யப்பட்டு, அல்லது சரணடைந்து தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு, புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்டு, தற்போது விடுதலை செய்யப்பட்டு இலங்கையில் வாழும் முன்னாள் போராளிகளில் பலர்கூட, சமுதாயத்தில் கலந்து வாழ முடியாமல் தவிக்கிறார்கள் என்பது, வருத்தத்துக்குரிய உண்மை.
இவர்களில் பலர் சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எத்தனை பேர் நம்புவீர்களோ, தெரியவில்லை.
சுமார் 90 சதவீதத்துக்கும் அதிகமாக தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில், பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் தமிழர்களுக்கு சொந்தமானவையே. கடந்த 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் போர் புரிந்து, புனர்வாழ்வு முகாமில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் முன்னாள் போராளிகளை பணியில் அமர்த்த பல தமிழர் வர்த்தக நிலையங்கள் தயாராக இல்லை என்ற உண்மையை நீங்கள் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
“துப்பாக்கி தூக்கிய ஆளை பணியில் அமர்த்தினால் நாளை என்னாகுமோ?” என்று பல வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். “இனத்துக்காக தமது உயிரை பணயம் வைத்து யுத்தம் புரிந்தவர்கள்” என்று 5 ஆண்டுகளின் முன் புகழப்பட்டவர்களில் பலரது தற்போதைய நிலைமை இது என்பதையும், எத்தனை பேர் நம்புவீர்களோ, தெரியவில்லை.
யுத்தம் முடிந்தபின், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு தடுத்து வைக்கப்பட்டவர்களில், புனர்வாழ்வு புரோகிராம்களில் சேர்க்கப்பட்டு, தடுப்பு முகாம்களில் இருந்து புனர்வாழ்வு முகாம்களுக்கு மாற்றப்பட்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை, இன்றைய தேதிவரை 11,808 பேர்.
இவர்களில் எத்தனை சதவீதமானோர், எந்தெந்த பகுதிகளில் உள்ள முகாம்களில் சேர்க்கப்பட்டனர் என்பதை, கீழேயுள்ள வரைபடத்தில் பார்க்கவும்:
கவனியுங்கள். புனர்வாழ்வு புரோகிராம்களில் சேர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கைதான் இது. அதாவது, விடுவிக்கப்பட்டு சமுதாயத்தில் இணைத்துக் கொள்ளப்படலாம் என்று முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய புனர்வாழ்வு முகாம்களில் சேர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எண்ணிக்கை, 11,808.
இவர்களில், ஒரு பகுதியினர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டு விட்டார்கள். மீதி பேர், இன்னமும் புனர்வாழ்வு முகாம்களில், விடுதலை தேதியை எதிர்நோக்கி உள்ளார்கள். (நம்ம உசுப்பேற்றும் அரசியல்வாதிகள், இலங்கைக்கு வெளியே இருந்துகொண்டு, “தமிழர் சேனை தயாராகிறது. ஈழத்தை கைப்பற்ற புறப்படுகிறது பெரும்படை” என்று முழக்கமிட, முழக்கமிட, இவர்களது விடுதலை தேதி தள்ளிப் போவது உண்டு)
‘விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்’ என்ற பொதுப் பிரிவுக்குள் இந்த 11,808 பேரும் உள்ளடக்கப்பட்டாலும், இவர்கள் அனைவரும் ஒரே மாதிரி ட்ரீட் பண்ணப்பட்டு, ஒரே காலப்பகுதியில் வெளியே விடப்படவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள். ஏன் அப்படி என்ற கேள்வியும் எழுந்திருக்கும்.
அதாவது சிலர் சில மாதங்களிலேயே வெளியே விடப்பட்டுள்ளனர். சிலர் வருடக் கணக்கில் முகாம்களில் வைக்கப்பட்டே விடுவிக்கப்பட்டனர். சிலர் இன்னமும் தடுப்பில் இருந்து விடுவிக்கப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு

இந்த போராளிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரும், இந்த புனர்வாழ்வு புரோகிராமின் கான்செப்டை தெரிந்து கொண்ட பின்னரும்தான், இந்த பாகுபாட்டுக்கான காரணம் புரிகிறது.
அந்தக் காரணம், ‘விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்’ என்ற பொதுப் பிரிவுக்குள் இந்த 11,808 பேரும் இருந்தாலும், அவர்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் உள்ளவர்கள் உள்ளார்கள் என்பதை, அவர்களுடன் பேசியபின் தெரிந்து கொள்ள முடிகிறது.
நாம் சந்தித்து பேசிய முன்னாள் போராளிகளில் பெரும்பாலானோர், கீழ்வரும் உப பிரிவுகளில் உள்ளார்கள்.
1) இறுதி யுத்தம் நடைபெற்ற கடைசி நாட்களில், விடுதலைப் புலிகளால் யுத்தத்தில் (விரும்பியோ, விரும்பாமலோ) இணைத்துக் கொள்ளப்பட்ட மிக இளம் வயதினர்.
இவர்கள் அனைவருமே, ஓரிரு நாட்கள் மட்டும் ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டோ, அல்லது ஓரிரு மணி நேர ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டோ, யுத்தத்தில் இறக்கி விடப்பட்டனர். இவர்கள் தத்தமது குடும்பங்களை பிரிந்து அதிக காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கவில்லை. பெரும்பாலும், பள்ளிப் படிப்பை விட்டு விலகி அதிக காலம் இருக்கவும் இல்லை.
இவர்கள்தான் முதலில் விடுவிக்கப்பட்டவர்கள். அதுவும் இவர்களில் ஒரு பகுதியினர், 10-ம் ஆண்டு, 12-ம் ஆண்டு பள்ளி படிப்பு படித்துக் கொண்டிருந்தவர்கள், அந்த பொது தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அத்துடன் விடுவிக்கப்பட்டார்கள். மற்றையவர்கள் அதன்பின் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். மிகமிக குறைந்த எண்ணிக்கையில் இன்னமும் சிலர் தடுப்பில் உள்ளார்கள் (அப்படி இன்னமும் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தனிப்பட்ட காரணங்கள் உள்ளன)
இந்தப் பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், தடுப்பு முகாம்களில் இருந்து வெளியே வந்ததும், சமுதாயத்துடன் இலகுவில் கலந்து கொண்டார்கள். பெரிய சிக்கல் ஏதுமில்லை. அநேகர், பள்ளிப் படிப்பை தொடருகிறார்கள்.
2) இறுதி யுத்தம் நடைபெற்ற கடைசி மாதங்களில் விடுதலைப் புலிகளால் யுத்தத்தில் (விரும்பியோ, விரும்பாமலோ) இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள். இந்தப் பிரிவிலும் பெரும்பாலானோர் இளம் வயதினர்தான் என்றாலும், சிறிய எண்ணிக்கையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ளார்கள்.
மேலே 1-ம் பிரிவில் குறிப்பிடப்பட்டவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே இரண்டு வித்தியாசங்கள் உள்ளன.
முதலாவது, இவர்கள் சற்று அதிக காலம் குடும்பங்களை விட்டுப் பிரிந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்திருக்கிறார்கள். இரண்டாவது, இவர்கள் தமது சொந்த ஊர்களில் வைத்து விடுதலைப் புலிகள் இயக்கங்களில் இணைக்கப்பட்டு, பின்னர், வேறு இடங்களில் யுத்தம் புரிந்து, வேறு இடங்களில் கைது செய்யப்பட்டோ சரணடைந்தோ உள்ளார்கள்.
இந்த நடைமுறை, இவர்களது விடுவிக்கப்பட்டு குடும்பத்தினருடன் இணைக்கப்படுவதில் சில சிக்கல்களை ஏற்படுத்தியது.
இதை சற்று புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இப்படி சொல்லலாம்: வன்னிப் பகுதியில் முதலில் மன்னார், மற்றும் வவுனியா மாவட்டங்களில் யுத்தம் தொடங்கியது. அங்கே விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த ஒவ்வொரு நகரமும் ராணுவத்திடம் விழ, புலிகளும் ஒவ்வொரு நகரமாக கைவிட்டு பின்வாங்கினார்கள். மக்களும் புலிகளுடன் ஒவ்வொரு நகரமாக இடம்பெயர நேர்ந்தது.
புலிகளும், மக்களும் ஒவ்வொரு நகரமாக கைவிட்டு பின்வாங்கிய பாதை, சிலாவத்துறை, அடம்பன், பாலம்பிட்டி, பெரியமடு, ஆலங்குளம், உயிலங்குளம் என்று தொடங்கி, பல நகரங்களையும், கிராமங்களையும் கடந்து, பூநகரி, மாங்குளம், கொக்காவில், புளியங்குளம், நெடுங்கேணி, சின்னப்பரந்தன், முள்ளியவளை, இரணமடு, பரந்தன், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், ராமநாதபுரம், முரசுடோட்டை, ஆனையிறவு, தர்மபுரம், உடையார்கட்டுகுளம், முல்லைத்தீவு, விசுவமடு, சாலை, தேவிபுலரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு என்று போய், முள்ளிவாய்க்காலில் முடிந்தது.
இந்தப் பாதையில் பல நகரங்களையும், கிராமங்களையும் மேலே குறிப்பிடவில்லை. அவ்வளவு பெரியது பட்டியல்.
இதில், ஒரு நகரத்தில் புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் ஒரு திசையில் பயணிக்க, அவரது குடும்பத்தினர் வேறு திசையில் பயணிக்க, அந்தப் பயணத்தின்போது, அதே குடும்பத்தை சேர்ந்த மற்றொரு உறுப்பினரை வேறு ஒரு நகரத்தில் வைத்து புலிகள் இயக்கத்தில் இணைத்துக் கொள்ள…
இப்படியான சூழ்நிலையில் உள்ள முன்னாள் போராளிகள், சில ஆயிரம் பேர் உள்ளார்கள். இவர்களிலும் சுமார் 60 சதவீதமானவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த 2-ம் பிரிவில் உள்ள முன்னாள் போராளிகளில் புனர்வாழ்வு முகாம்களில் இருந்தவர்களை அவர்களது குடும்பங்களை தேடிப்பிடித்து இணைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன. இதில் மற்றொரு சோகம், சில நூறு முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் எங்கே உள்ளனர், அல்லது, இன்னமும் உயிருடன் உள்ளார்களா என்பது தெரியவில்லை.
சில முன்னாள் போராளிகளை புனர்வாழ்வு முகாம்களில் உறவினர்கள் யாரும் வந்து பார்க்கவே இல்லை. இது தற்போதும் புனர்வாழ்வு முகாம்களில் உள்ள அவர்களின் மனதை பாதிக்கும் விஷயமாக உள்ளது.
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளில் மீதி உப பிரிவில் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை இந்த ரிப்போர்ட்டின் அடுத்தடுத்த பாகங்களில் பார்க்கலாம்.
அந்த உப பிரிவுகளில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நீண்டகால போராளிகளாக இருந்தவர்கள், தளபதிகளாக இருந்தவர்கள், மிகச் சிறுவயதில் இணைந்ததால் தமது ஊர் எதுவென்றே தெரியாதவர்கள், யுத்தத்தில் உடல் ஊனமுற்றவர்கள், நேரடியாக யுத்த முனையில் போர் புரியாமல் புலிகள் இயக்கத்தில் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தவர்கள் என வெவ்வேறு பிரிவில் உள்ளவர்களை, அடுத்தடுத்த பாகங்களில் விரிவாக பார்க்கலாம்.
viruvirupu.com/

கருத்துகள் இல்லை: