சனி, 26 அக்டோபர், 2013

உண்மையில் தேர்தல் போட்டி காங்கிரசுக்கும் RSS க்கும் இடையில் தான் ! ஜெயராம் ரமேஷ்

பாராளுமன்ற தேர்தலில் காங்.–பா.ஜ.க. இடையே போட்டி இல்லை: காங்.–ஆர்.எஸ்.எஸ். போட்டி; ஜெயராம் ரமேஷ்
2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே போட்டி இல்லை. காங்கிரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தான் போட்டி உள்ளது என்று ஜெயராம் ரமேஷ் கூறினார்.
மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பெங்களூர் குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–5 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்தவிடாமல் பா.ஜனதாவினர் முடக்கியதே இது காலதாமதமாக அமல்படுத்தப்படுவதற்கு காரணம் ஆகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் உள்ளிட்டவற்றை மறைப்பதற்காக மத கலவர தடுப்பு சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்யவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் நேரடி மோதல் இல்லை. மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ஜார்க்கண்ட், இமாச்சலபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் நேரடி போட்டி உள்ளது. மற்ற மாநிலங்களில் எல்லாம் மாநில கட்சிகள் தான் உள்ளன. அந்த மாநிலங்கள் அனைத்திலும் பா.ஜனதா இல்லை. எனவே தேசிய அளவில் எல்லா கட்சிகளுடனும் மோதும் ஒரே கட்சி காங்கிரஸ் தான்.
கடந்த 15 மாதங்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விருப்பங்களை பா.ஜனதா செயல்படுத்தி வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு துணைநிறுவனமாகவே பா.ஜனதா செயல்படுகிறது. அதனால் 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே போட்டி இல்லை. காங்கிரசுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தான் போட்டி உள்ளது என்றார்

கருத்துகள் இல்லை: