சனி, 12 அக்டோபர், 2013

நடுக்கடலில் படகு கவிழ்ந்து 50 அகதிகள் பரிதாப சாவு ! இத்தாலியில் அருகே மீண்டும் சோகம்

பாலிமோ:நடுக்கடலில் படகு மூழ்கியதில் 50க்கும் மேற்பட்ட
அகதிகள்
பரிதாபமாக இறந்தனர். மேலும் பலரை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இத்தாலியில் கடந்த ஒரு வாரத்தில் மீண்டும் நடந்த கோர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்ரிக்க நாடான சோமாலியா மற்றும் எரிட்ரியா நாட்டில் இருந்து ஏராளமானோர் பிழைப்பு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக பலர் செல்கின்றனர். மீன்பிடி படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஒரு கும்பல் பணத்துக்காக ஏற்றி செல்வதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. சிரியாவில் உள்நாட்டு போர் நடப்பதாலும், எகிப்தில் கிளர்ச்சி நடப்பதாலும் அங்கு வசிக்கும் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வருகின்றனர். சோமாலியா, எரிட்ரியா நாடுகளை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இத்தாலி அருகே உள்ள லாம்பிதுசா, சிலி தீவுகளில் சட்டவிரோதமாக கள்ளத்தோணியில் ஊடுருவுகின்றனர். இப்படித்தான் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் 500க்கும் மேற்பட்டோர் 3 படகுகளில் இத்தாலியின் கட்டுப்பாட்டில் உள்ள சிசிலி தீவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். லாம்பிதுசா தீவில் இருந்து 60 மைல் தூரத்தில் சிசிலி, துனிஷியா இடையே வரும் போது படகு ஒன்று திடீரென நடுக்கடலில் கவிழ்ந்தது. கடலில் தத்தளித்தபடி பலர் உயிருக்கு போராடினர். அதற்குள் முழு படகும் கடலில் மூழ்கியது. கவிழ்ந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்களில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் காணவில்லை.
இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து கடலோர காவல் படையினர் விரைந்து சென்று தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  கடந்த 3ம் தேதி இத்தாலி அருகே நடுக்கடலில் இதே போன்ற படகு விபத்தில்300க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது - tamilmurasu.org

கருத்துகள் இல்லை: