வெள்ளி, 11 அக்டோபர், 2013

2 ஜி நாடாளுமன்ற கூட்டு குழு அறிக்கையை திமுகவும் நிராகரித்தது ! பாஜகவும் நிராகரித்தது !

டெல்லி: 2ஜி ஊழல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் அறிக்கையை திமுக நிராகரித்துள்ளது. ஏற்கனவே இந்த அறிக்கையை பாஜக நிராகரித்துள்ள நிலையில் இந்த ஊழல் விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியாக திமுகவினர் சிலர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சி இந்த அறிக்கையை தற்போது நிராகரித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு நேரில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏ.ராசா தனது தரப்பு கருத்தைத் தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. திமுக சார்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் தங்களது நிராகரிப்பையும், அதிருப்தியையும் கூட்டுக் குழுத் தலைவர் பி.சி.சாக்கோவிடம் அளித்துள்ளனர். அந்த கடிதத்தில், விசாரணை அறிக்கை தொடர்பாக பி.சி.சாக்கோ பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார். அரசியல் காரணங்களுக்காகவே ஏ.ராசா இந்த விவகாரத்தில் பலிகடாவாக்கப்பட்டார். மேலும் அவர் கூட்டுக் குழு விசாரணையின்போது நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவோ அல்லது விளக்கம் அளிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என்று திமுக கூறியுள்ளது. மேலும் அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த அறிக்கை குறித்து டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில், இது அரைவேக்காட்டுத்தனமான அறிக்கை. ராசாவை விசாரிக்காமல் எப்படி இப்படி ஒரு முடிவுக்கு குழு வந்தது என்பதை சாக்கோ விளக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு தொடர்பான உண்மையான ஆவணங்களை குழு உறுப்பினர்களிடம் காட்ட வேண்டும் என்று திமுக கோரியிருந்தது. ஆனால் அதை சாக்கோ ஏற்கவில்லை. கேட்டால் சிபிஐ வசம் அவை இருப்பதாக பொருந்தாக் காரணங்களை அவர் கூறினார். அதேசமயம், இந்த ஆவணங்களின் நகல்கள் மட்டும் எப்படி சாக்கோவிடம் வந்தது என்பது தெரியவில்லை. அவர் இதற்கு விளக்கம் தர வேண்டும் என்றார் பாலு. அறிக்கை சொல்வது என்ன...? முன்னதாக இந்த அறிக்கையில், பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், 2ஜி ஏலத்தின்போது அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சிஏஜி தெரிவித்த கூற்றையும் இந்த விசாரணைக் குழு நிராகரித்துள்ளது. இந்த நஷ்டக் கணக்கு தவறானது என்றும் அது தெரிவித்துள்ளது. மேலும் ஒட்டுமொத்தக் குழப்பத்துக்கும், முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஏ.ராசாதான் காரணம் என்றும் திமுக மீது முழுப் பழியையும் தூக்கிப் போட்டுள்ளது கூட்டுக் குழு. தற்போது இந்த விசாரணை அறிக்கை லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் ஒப்புதலுக்காக அனுப்ப வைக்கப்பட்டுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: