சனி, 12 அக்டோபர், 2013

கடவுளை விட உடலே சிறந்தது ! எல்லா வாய்ப்புக்களையும் தந்திருப்பது எது ?

வாழ்க்கைக்குள் இருந்து கொண்டே வாழ்கையை திட்டிதீர்ப்பதை
என்னெவென்று சொல்வது?
வாழ்க்கை ஒரு பாபகரமானது அது ஒரு அசிங்கம் அது மிகவும் கேவலமானது போன்ற படு மோசமான அபிப்பிராயங்கள் மனிதர்களின் மனதிற்குள் விதைப்பது யார் ?
ஏதாவது ஒரு நல்ல நோக்கத்திற்காக எமது வாழ்வை நாமே அழித்து கொள்வது ஒரு ஒப்பற்ற தியாகம் என்று இல்லாத
ஊருக்கு போகும் வழியை காட்டுவது யார்?
ஒரு நியாயமான நோக்கத்திற்காக பிறரின் வாழ்வை அழிப்பது கூட மிகவும் உன்னதமான செயல் என்று இந்த மனித சமுதாயத்தை நம்ப வைப்பது யார்?
எமது வாழ்வை எமக்கு தரும் எமது உடல் ஒரு பெறுமதி அற்ற பொருள் என்றும் அதை நல்ல ஒரு காரியத்திற்காக நாசப்படுத்துவது தியாகம் என்றும் படு மோசமான மார்க்கத்தை போதிப்பது யார்?
எமது உடலை நாம் விரும்பக்கூடாது ! அதனுள் உறைந்து இருக்கும் அல்லது மறைந்து இருக்கும் பொருளே உயர்ந்தது எனவே நமது உடலை கூடுமானவரை அழகு படுத்தி ரசிப்பது வெறும் மாயை அது ஒரு பொருட்டே அல்ல என்பது போன்ற துர்போதனைகளை உபதேசிப்பவர்கள் யார்?
இன்னும் இது போன்ற உடலை தாழ்த்தி வேறு ஏதோ ஏதோ  விஷயங்களை எல்லாம் உன்னதப்படுத்தி தனிமனிதர்களை கேவலப்படுத்துவது போன்ற  கருத்துக்கள் அல்லது கோட்பாடுகள் பரப்படுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஒரு வரலாற்று மோசடியாகும்.
இரண்டு விதமான கிரிமினல்கள் இதில் கூட்டு சேர்ந்துள்ளார்கள் ,
ஒருவர் சமயவாதி மற்றவர் அரசியல்வாதி ,
சமயத்தை தூக்கி பிடித்து தங்கள் வருமானத்தை அல்லது அதிகாரத்தை நிலை நிறுத்தும் சமய வாதிகள் முதலில் கைவைப்பது மனிதர்களின் தன்னம்பிக்கையில்தான்,
மனிதனின் உடல் பற்றிய அபிமானம் தான் அவனது மிகபெரும் பலம் அல்லது சொத்து, அதை தோற்கடித்து விட்டால் பின்பு இழுத்த இழுப்புக்கெல்லாம் சுலபமாக வருவான் ,
சமயவாதிகள் மிகவும் வெற்றி கரமாக கையாண்டு கொண்டு இருந்த இந்த Mass Controlling System அதாவது மனிதர்களை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் உத்தியானது அரசர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது ,
அதனால்தான்   சேர சோழ பாண்டியர்கள் போன்று அநேகமான நாடுகளின் அரசர்கள் பாய்ந்து பாய்ந்து கோவில்களையும் இதர வழிபாட்டு ஸ்தலங்களையும் கட்டுவதில் முன் நின்றார்கள் ,
அரச வம்சத்தினரின் ராஜ்ஜியங்களை நிலை நிறுத்தி பிடிப்பதற்கு சமயவாதிகளே தோளோடு தோள் நின்று மக்களை அடக்கி ஆண்டனர் ,
இந்த மனித உடலை கேவல படுத்தும் முட்டாள் தனத்தை அந்த கால அரசர்கள் மற்றும் சமய தீவிர வாதிகளை விட தற்போதைய அரசியல் பயங்கர வாதிகள் மிகவும் மோசமாக பின்பற்றுகிறார்கள்.
உடல்தான் வீடு , அந்த வீட்டையே கேவலபடுத்தி அல்லது அதன் இருப்பை தரம் தாழ்த்தி கூறப்படும் கோட்பாடுகள் எல்லாமே வெறும் பித்தலாட்டம்தான்,
இந்த கோட்பாடுகளை பலரும் அர்த்தம் புரியாமேலேயே பிரசங்கம் புரிகின்றனர், அவர்களுக்கு பிரசங்கம் புரிவதில் இருக்கும் பேராசை உண்மையை கண்டறிவதில் இல்லை,
இந்த வாழ்க்கை மிகவும் அற்புதமானது மிகவும் தெய்வீகமானது , உடல் இல்லாமல் வாழ்க்கை இல்லை ,
ஆத்மாவின் நீண்ட நெடிய பயணத்தில் இந்த உடலின் அற்புதங்களை அறியும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருப்பது மிகவும் சொற்ப காலத்திற்குத்தான் ,
இந்த உடலின் இரகசியங்களை நாம் இன்னும் சரியாக தெரிந்து கொள்ளவே இல்லை,
இந்த உடல் உண்மையில் அழியாத வரம் பெற்றது என்று ஒரு அற்புதமான கருத்து தற்போது விஞ்ஞான ரீதியாக உருவாக்கி கொண்டு இருக்கிறது,
இதைதான் வடலூர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகளும் மரணமில்லா பெருவாழ்வு என்று கூறினாரோ என்றும் எண்ண தோன்றுகிறது,
எத்தனையோ சித்தர்கள் அல்லது பல நாட்டு ஞானிகள் பலரும் பல நூற்றாண்டுகள் வாழ்ந்திருப்பதாக பல வரலாற்று கருத்துக்கள் உண்டு,
பல நூற்றண்டுகளுக்கு முன்பாக இயேசு கிறிஸ்து சுவாசித்த காற்றையோ அல்லது புத்த பகவான் சுவாசித்த காற்றையோ நாம் சுவாசித்திருக்க கூடும் ,
இன்னும் என்னவோ அற்புதங்கள் நிறைந்த இந்த உலகமும் அதில் உடலோடு வந்திருக்கும் நாமும் உண்மையிலேயே எவ்வளவு உன்னதமானவர்கள் ?
உன்னதத்தை பழிக்கலாமா ?
உடலை போற்றுங்கள் கடவுளை விட உடலே சிறந்தது, ஏனெனில் நீங்கள் நம்பும் கடவுள் என்பதை உங்களுக்கு அறிய அல்லது வணங்க வாய்ப்பு அளித்திருப்பதுவும் உங்கள் உடலே என்பதை ஞாபகத்தில் இருத்தி கொள்ளுங்கள் .  radhamanohar.blogspot.com/

கருத்துகள் இல்லை: