செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

பிரிதானியாவுக்கும் – பிரான்ஸிற்கும் ஈரான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்!

பிரிட்டிஷ்  மற்றும்  பிரெஞ்சு நிறுவனங்களுக்கு எண்ணை விற்பனையை உடனடியாக நிறுத்தி விட்டதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக அறிவித்துள்ளது ஈரான். “அவர்களாக நிறுத்தும்வரை   நாம் காத்திருக்கப் போவதில்லை. முந்திக்கொண்டு,  நாமே நிறுத்தி விட்டோம்” என்று அறிவித்துள்ளது   ஈரானிய பெற்றோலிய அமைச்சு.
ஈரான்மீது பொருளாதாரத் தடையை கொண்டுவரும் நடவடிக்கையாக, கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஈரானிய எண்ணை இறக்குமதியை ஜூலை 1-ம் தேதியுடன் நிறுத்திக் கொள்ளவுள்ளன என்பதே அந்த அறிவிப்பு.
ஐரோப்பி ஒன்றியம் இந்த தடையை உடனடியாக அறிவிக்காமல், சுமார் 6 மாதங்களின் பின் தேதியிட்டு அறிவித்த காரணம், ஈரானிய ஆயில் இறக்குமதியை நம்பியுள்ள ஐரோப்பிய நாடுகள், புதிய ஏற்றுமதியாளர்களை தேடுவதற்கு அவகாசம் தேவை என்பதால்தான்.
6 மாதங்களுக்குள் வேறு நாடுகளில் இருந்து எண்ணை இறக்குமதி ஒப்பந்தங்களை செய்துகொண்டு, அதன்பின் சௌகரியமாக ஈரானிய எண்ணை இறக்குமதியை நிறுத்திக் கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றியம் போட்ட திட்டம், ஈரானுக்கு புரியாதா, என்ன?
“6 மாதங்களின்பின் நீங்கள் நிறுத்த வேண்டாம், இதோ ஞாயிற்றுக்கிழமை இரவோடு  இரவாக நாங்களே நிறுத்தி விடுகிறோம்” என்று நேற்று அறிவித்து பிரிட்டனையும், பிரான்ஸையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது ஈரான்.
ஐரோப்பிய  ஒன்றிய  நாடுகளில்   சராசரியாக  120 நாட்களுக்கு தேவையான எண்ணை கையிருப்பில் உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது. ஆனால், பிரிட்டனிலும், பிரான்ஸிலும்  எத்தனை  நாட்களுக்கு தேவையான  எண்ணை   கையிருப்பில் உள்ளது  என்ற பிரேக்-டவுனை அறிவிக்கவில்லை.
நேற்றைய ஈரானிய அறிவிப்புடன், உடனடியான எண்ணை ஏற்றுமதியாளர்களை தேடும் நிலை பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய   தடை 6 மாதங்களின்பின்   தேதியிட்டு    அறிவிக்கப்பட்ட போது,  சவுதி அரேபியா, தமது எண்ணை   ஏற்றுமதியை அடுத்த   6 மாத காலத்துக்கு   படிப்படியாக அதிகரித்து   ஈரானிய எண்ணையால்  ஏற்படும் வெற்றிடத்தை   நிரப்ப தயார் என்று கூறியிருந்தது.   ஆனால், அவர்களால், பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் எண்ணை தேவைக்கு ஏற்றபடி, உடனடியாக தமது எண்ணை உற்பத்திய அதிகரிக்க முடியுமா தெரியவில்லை.
அப்படி அதிகரித்தாலும், ஈரான் வழங்கிய அதே விலையில் வழங்க முடியுமா என்பது சந்தேகமே!
ஈரானிய பெற்றோலிய அமைச்சின் பேச்சாளர் அலிரெஸா நிக்ஸாட், “பிரிட்டன் மற்றும் பிரான்ஸூக்கு நாம் வழங்கி வந்த எண்ணையை வாங்கத் தயாராக புதிய கஸ்டமர்கள் எமக்கு இருக்கிறார்கள்.  அவர்களுக்கு அந்த எண்ணையை நாம் விற்பனை செய்துவிடுவோம்” என்று நேற்று அறிவித்துள்ளார்.
ஈரானிடம்  இருந்து  எண்ணை இறக்குமதி  செய்யும் நாடுகளில், இந்தியாவும் ஒன்று!

கருத்துகள் இல்லை: