வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பதில் கண் மூடித்தனமான வெறி ஏன்?

கலி.பூங்குன்றன்
(Females activists of Durga Vahini, the women wing of Bajrang Dal are being imparted weapons and sword training at its camps for taking part in future activities against minorities.)
இந்த வன்முறைப் பயிற்சிகள் பற்றி சோவாளின் பேனா வாய் திறந்ததுண்டா?
ஆனந்த விகடனின் கேள்வி (1.2,2012): ஜெயலலிதாவையும், ஆட்சியையும் கைப்பற்றத் துடிக்கும் உங்கள் தலைமையிலான பார்ப்பன லாபியின் சதிதான் சசிகலா நீக்கம் என்று சொல் லப்படுவது பற்றி என்ன நினைக் கிறீர்கள்?
சோவின் பதில்: நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொண்டால் நான் அ.தி.மு.க.வைக் கைப்பற்றிவிடுவேன். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.கள் எல்லாம் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து விடுவார்கள். அமைச்சர்கள், அதிகாரி கள் எல்லோரும் என் சொல்படிதான் நடப்பார்கள். இப்படியெல்லாம் நான் நம்பவேண்டும். நீங்களே சொல்லுங்கள். அவ்வளவு பெரிய மடையனா நான்?
ஒரு லாபி என்றால் அதில் சில பேர் இருக்க வேண்டும். அப்படிச் சிலரால் பேசப்படும் பிராமண லாபியில் யார் எல்லாம் இருக்கிறார்கள்?
நான் பிராமணன். அதுவும் இன்றைய பிராமணன்தான். அசல் பிராமணன் இல்லை.
மொரார்ஜி தேசாய், காமராஜர், ஹெக்டே, என்.டி.ஆர்., எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் . . . இப்படி எத்தனையோ தலைவர்களோடு நெருக்கமாக இருந்தேன் நான். இவர்கள் எல்லோரும் பிராமணர்களா? அப்பொழுதெல்லாம் இந்தப் பார்ப்பன லாபி குற்றச்சாட்டு எங்கே போனது? இப்போது மட்டும் அது எங்கிருந்து வந்து முளைத் திருக்கிறது?
இவ்வாறு திறமையாக பதில் சொல்ல முயற்சி செய்கிறார்.
இந்தப் பதிலில் கூட நான் மனிதன் என்று சொல்ல முன்வரவில்லை; ஆம் . நான் பிராமணன் என்றுதான் அழுத்தமாகச் சொல்லுகிறார். (அசல் பிராமணன் இல்லை என்கிறார் - இதற்குள் நாம் புகுவது நமது தகுதிக்கு அழகாக இருக்காது)
அதே நேரத்தில் அசல் பிராமணன் யார்?  டூப்ளிகேட் பிராமணன் யார்? இரண்டுக்கும் இரு வேறான கல்யாண திருக் குணங்கள் என்ன? என்பதையும் அவர் விளக்கினால் நாம் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
இவர் கூற்றிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகிறது. அவர்கள் கூறும் பிராமண இலக்கணத்துக்குள் வரா விட்டாலும் பிராமணன் என்பதை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. இதுதான் இப்பொழுது பிரச்சினையே!
அசல் பிராமணன் யாரும் இல்லை என்று முடிவான பிறகு, மாற்றங்களை வரவேற்க வேண்டியதுதானே - கலந்து விடவேண்டியதுதானே!
அசல் பிராமணன் இல்லை என்கிற போது பிராமண உரிமை எங்கே இருந்து குதித்தது?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை யென்றால், ஆகம சாஸ் திரங்களைத் தூக்கிக் கொண்டு வருவானேன்?
அது எங்கள் பிராமணருக்கு மட்டும்தான் உரியது என்று அடம் பிடிப்பானேன்? உச்சநீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறுவானேன்?
அசல் பிராமணன் இல்லை; ஆனாலும் அசல் பிராமணனுக்குரிய ஜாதித் திமிரும், ஜாதி உயர்வும் அந்தஸ்தும், உரிமைகளும் வேண்டும் என்றால் - அதற்குப் பெயர்தான் வருணாசிரமக் கொழுப்பு என்பது.
இல்லாவிட்டால் ஆச்சாரியார் ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த கல்வித் திட்டம், குலக்கல்வித் திட்டம் என்பது வெளிப்படையாக ஆனபிறகு, காங்கிரஸ்காரர்களே அவ்வாறு கூறிய நிலையில், திருவாளர் சோ ராமசாமி அந்தக் குலக்கல்வித் திட்டத்தை 34 ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்து வாங்கி எழுதுவதன் உட்பொருள் என்ன?
ராஜாஜி கொண்டு வந்த அருமை யான கல்வித் திட்டம். அதனைத் திரித்துக் கூறி ராஜாஜியை விரட்டி விட்டனர் (துக்ளக் 15-.7.-1988).
இவருடைய பதிலில் காமராஜருடன் தாம் நெருக்கமாக இருந்ததாகக் கூறி, காமராஜர் என்ன பிராமணரா என்று வினா கிளப்பியுள்ளாரே, அந்தக் காமராஜர் ஆச்சாரியாரின் அந்தக் கல்வித் திட்டத்தைக் குலக்கல்வித் திட்டம் என்று கூறவில்லையா? ஆச்சாரியார் பதவியை விட்டு விரட்டப் பட்ட நிலையில், முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்த காமராஜர் ஆச்சாரியாரின் அந்தக் குலக்கல்வித் திட்டத்தை ஏன் ஒழித்துக் கட்டினார்?
ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்தை உசத்தியாகத் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் சோவை நோக்கி ஒரு வினா எழுப்புகிறோம்.
அந்தக் கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்தியதோடு அல்லாமல் ஆறாயிரம் பள்ளிகளை இழுத்து மூடி னாரே - அதற்குள் முக்காடு போட்டு ஒளிந்திருக்கும் சூழ்ச்சியின் நிறம் என்ன? அதற்கு என்ன சமாதானம்?
ஒரு அரசு என்பது கல்வியைக் கொடுக்கவா - கெடுக்கவா?
அசல் பிராமணன் இல்லையென்றாலும் அந்தப் பார்ப்பனீயத்தைக் கட்டிக் காப்பதில் மட்டும் கண் மூடித்தனமான வெறி ஏன்?
சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பலத்தில் ஓதுவார் ஆறுமுகசாமி தேவாரம் பாடியபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தாக்கினார்களே - அதனைக் கண்டித்து ஒரு வரி எழுத முன்வராததோடு மட்டுமல்ல, மாறாக என்ன எழுதுகிறார்?
ஒரு கோவிலின் வழிகாட்டு முறைகளில் தலையிட அறநிலையத் துறைக்கோ அதன் மூலம் அரசுக்கோ அதிகாரம் இருக்கிறதா? தலையிடலாம் என்றால் எதில், எந்த அளவில்? இந்தக் கேள்விகள் இந்த விவகாரத்தில் அடங்கியுள்ளன. தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் சிதம்பரம் கோவி லினுள் கனகசபையில் நின்று பாட வேண்டும் என்று சொல்வது அநீதி. (துக்ளக் தலையங்கம் 19-.3.-2008)
தமிழ்நாட்டுக் கோவிலில், தமிழின அரசர்கள் கட்டிய கோவில்களில் தமிழில் பாடினால் இந்த அய்யருக்கு பொத்துக் கொண்டு கிளம்பும் புயல் வேக சினத்தைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வளவுக்கும் இவர் அசல் பிராமணர் அல்ல. கலப்படப் பிராமணர்தான்.
எங்கிருந்து கொண்டு பேசுகிறார்? தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழில் பாடினால் நாஸ்திகம் என்கி றாரே! அந்த அளவுக்கு நம் இனவு ணர்ச்சி மரத்துப் போய்க் கிடக்கிறது!
பொது ஆர்வமா? மத துவேஷமா? என்ற தலைப்பில் துக்ளக்கில் என்ன எழுதினார்?
நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தால் அர்த்தம் இருக்கும். அருள் இருக்காது. ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸமஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால் பொருள் இருக்கும். புனிதம் இருக்காது. அதாவது இங்கு முக்கியத்துவம் மொழிக்கு அல்ல, ஒலிக்கு (துக்ளக் 18-.11.-1988) என்று தலையங்கம் தீட்டுகிறாரே!
இவர் கூற்றுப்படி தமிழில் துதிபாடி யவர்கள் தேவாரம் பாடியவர்கள் எல் லாம் பக்த சீலர்கள் இல்லை. அப்படித் தானே?
ஒலிதான் கடவுளுக்குப் பிடிக்கும் என்பதை எப்படிக் கண்டுபிடித்தார்? இப்படிக் கூறுவதற்கு இவருக்குள்ள தகுதி (Authority) என்ன? ஆதாரம் என்ன?
எல்லாம் கடந்த வல்லவரான கடவுள் கேவலம் ஒரு ஒலிக்குத்தான் மயங்குவாரா?
பார்ப்பானுக்குச் சமஸ்கிருதம் தேவைப்படும் என்றால் எதையோ சொல்லுவார்கள். இப்பொழுது ஒலியைக் கண்டுபிடித்துள்ளனர். எலும்பைப் பெண்ணாக்கியது, பாம்பு கடித்த பாலகனை மீட்டது என்ற தேவாரப் பார்ப்பனர்களின் சக்தி எல்லாம் சுத்தப் புரூடா என்று இன்னும் வெளிப்படையாக எழுதுவாரா?
தேவாரப் பாடலின் ஒலியைக் கேட்டு பகவான் அருள் புரிந்தது எல்லாம் சுத்த கப்சா என்று எழுதட் டுமே பார்க்கலாம்.
எழுதமாட்டார். ஏன் என்றால் அப்படிப் பாடியவர்கள் எல்லாம் முதுகில் பூணூல் தொங்கும் பிராம ணோத்தமர் ஆயிற்றே!

கருத்துகள் இல்லை: