வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி

சென்னை: "உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை: திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா, 27ம் தேதி தி.மு.க., தலைமை நிலையத்தில், எனது தலைமையில், அன்பழகன் முன்னிலையில் நடக்கிறது. அதில், தி.க., வீரமணி, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மோகன், நன்னன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த, 1856ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதிய ராபர்ட் கால்டுவெல் தான், திராவிட மொழி பேசும் மக்கள் ஒரே இனத்தவர் எனக் குறிப்பிட்டார். திராவிடர் என்ற பெயரை அவர் தான் முதன் முதலாக உபயோகித்தார். மனோன்மணியம் எழுதிய சுந்தரம் பிள்ளை, "திராவிட நல் திருநாடும்' எனக் குறிப்பிட்டுள்ளார். 1912ம் ஆண்டு தோன்றிய, "மெட்ராஸ் யுனைடெட் லீக்' சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா, 1913, டாக்டர் நடேசன் மருத்துவமனைத் தோட்டத்தில் நடந்தது. "சங்கத்தின் பெயர், அதன் நோக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை' என சிலர் பேசினர். அப்போது டாக்டர் நடேசன் தான், "திராவிடச் சங்கம் என்று பெயர் மாற்றலாம். ஏனென்றால், நாமெல்லாம் திராவிடர்களாயிற்றே' என, முடிவைத் தெரிவித்தார். அதை, அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.

டி.எம்.நாயர், 1917ல், சென்னை ஸ்பர்டாங் சாலை அருகே நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையும், சர்.பிட்டி.தியாகராயர், 1918ல் நீதிக் கட்சியின் சார்பில் வெளியிட்ட, "பார்ப்பனரல்லாதார் கொள்கை விளக்கம்' என்ற அறிக்கையும், திராவிடருக்கான ஆதி ஆவணங்கள் எனப் போற்றப்படுகின்றன. நாயரின் உரையில், "திராவிடத் தோழர்களே... நீங்கள் எல்லாம் உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, நீதிக் கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் மக்களுக்கு பலம் வரும். நம் எதிர்க்கட்சியான, பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்' என முழங்கியதைத் தான், நான் இப்போதும் திரும்பக் கூற விரும்புகிறேன்.

"திராவிட இயக்க வரலாறு' என, முரசொலி மாறன் எழுதிய நூலில், உயர் பதவியில் ஒரு பிராமணர் நியமிக்கப்பட்டால், உடனே தன் நியமன அதிகார வரம்புக்குட்பட்ட பிற பதவிகளிலும் தங்களது இனத்தாரைக் கொண்டு வந்து நிரப்புவதும், தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம்' என எழுதியதோடு, அதற்கு உதாரணங்கள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளார். இந்த உண்மை வரலாறுகளை எல்லாம் திராவிடர்களுக்கு, தமிழர்களுக்கு நினைவுபடுத்தும் வகையில் தான், திராவிட இயக்க நூறாம் ஆண்டு துவக்க விழா நடக்கவுள்ளது. ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோமே, துவக்க விழாவில் கலந்து கொள்ளாமல் விட்டால் என்ன என நினைத்துவிடக் கூடாது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: