திங்கள், 20 பிப்ரவரி, 2012

கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!

கல்விப் பிச்சை வள்ளல்கள்: நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக இயக்குநர் சசிகுமார்!
கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!’மாணவர்களே மாணவர்களைப் படிக்க வைக்கும்’ புதிய மறுமலர்ச்சித் திட்டம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சசிக்குமார். கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்லூரியில் மாணவர்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்தார் சசி. மொத்தம் ஒரு லட்ச ரூபாய் சேர்ந்ததாம். இதை 40 ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘படிக்க பணமில்லை என்ற நிலை என்னை கலங்க வைக்கிறது. அதனால்தான் கல்விக்காக உங்களிடம் கையேந்தி வந்துள்ளேன்’’ என மனம் உருகி மாணவர்களிடம் பேசியிருக்கிறார் சசிக்குமார்.
இதில் சசிக்குமாரின் நோக்கத்தில் நேர்மை இருக்கலாம், படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுவதை உண்மையான அக்கறையோடே செய்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சசிகுமார் விளம்பரத்துடன் புரிந்துகொண்டிருக்கும் கல்வி பற்றியப் பார்வை மிக அபாயகரமானது மட்டுமல்ல, அதுதான் சமூகத்தின் ஆகப் பெரும்பான்மையினரின் நோக்கும் கூட.

‘அவர் வெளியத் தெரியாம பல ஏழைப் பிள்ளைங்களைப் படிக்க வெச்சுகிட்டிருக்காரு’ என சிலரைப் பற்றி சொல்வதுண்டு. மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘ஏழைப்பசங்க படிக்க கஷ்டப்படுறாங்க. இவர் ஹெல்ப் பண்றாரு.. இதுல என்ன தப்பு இருக்கு?’ என்பதாகவே தோன்றும். ஆனால் அது அப்படி அல்ல.
சமூக நீதியை அழித்து சமமின்மையை ஒரு அறமாக முன் வைக்கும் சமகால கல்விக்கொள்ளைக்கு முட்டுக்கொடுக்கும் செயல் இது. உரிமையாய் பெற வேண்டிய கல்வியை பிச்சையாய் மாற்றும் அயோக்கியதனம். பணம் இருந்தால்தான் படிக்க முடியும் என்ற கேடுகெட்ட நிலைமையை ஒழித்துக்கட்டுவதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி நிறுவன முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் செயல். சசிக்குமார் தெரிந்தோ, தெரியாமலோ அந்த தரகு வேலையைதான் பார்த்திருக்கிறார்.
இந்த தரகர் வேலையை சில வருடங்களுக்கு முன்பிருந்தே மிகுந்த பெருமையுடன் செய்து வருகிறார் நடிகர் சூர்யா. தனது ’அகரம் பவுண்டேஷன்’ மூலமாக ஒவ்வொரு வருடமும் சில மாணவர்களுக்கு ’இலவச கல்வி’ தரும் அவர், அதை வைத்து தனது ‘நல்லவன்’ இமேஜ்-ன் கிராஃபை நன்றாகவே மேலே ஏற்றியிருக்கிறார். (அகரம் மூலம் கல்விக்கு செலவழிக்கும் தொகையை விட அதற்கான விளம்பரத்திற்கு செலவிடும் பணம் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது). இங்கும் ’இலவசக் கல்வி’ என்பதன் பொருள், இலவசம் அல்ல. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணம், நன்கொடை உள்ளிட்ட அனைத்தையும் அகரம் பவுண்டேஷன் செலுத்திவிடும். இதற்குப் பெயர் இலவசக்கல்வி அல்ல. இங்கு அகரம், ஒரு புரவலராக செயல்படுகிறது.
அரண்மனை உப்பரிகையில் இருந்து மன்னர்கள் அள்ளி வீசும் சில்லறை காசுகளால் ஏழைகளின் வயிறு ஒருபோதும் நிறைவதில்லை. மேலும், மன்னர்கள் காசை அள்ளிவீசுவதன் நோக்கம் ஏழைகளின் பசியைப் போக்குவதும் அல்ல. அது அவர்களது அந்தஸ்தின் ஸ்திரத்தன்மையை உலகுக்கும், தனக்குமேக் கூட காட்டிக்கொள்வதற்கான ஏற்பாடு.  இந்த நடிகர்களின் கூத்தும் அந்தக் கதைதான். ஆனால் இதில் நடிகர்களுக்கு சில கூடுதல் அனுகூலங்கள் உண்டு.
’வருமான வரி விலக்கு, கறுப்பை வெள்ளையாக்கும் வாய்ப்பு’ இதெல்லாம் கூட இரண்டாம் பட்சமே. முக்கியமானது இந்த ‘வள்ளல்’ தன்மையால் இவர்களுக்கு வந்து சேரும் இமேஜ். போட்டி மிகுந்த திரைப்படத் துறையின் வியாபாரத்திற்கு இந்த இமேஜ் ஒருவித தனித்தன்மையைக் கொடுக்கிறது. அதன்பிறகு ‘நீயா நானா?’ போன்ற கைப்புள்ள ஸ்டைலில் தமிழகத்தில் ‘அறிவை’க் கொல்லும் அக்கப்போர் நிகழ்ச்சியின் விருந்தினர் நாற்காலியை அலங்கரிக்கலாம். ஊடக செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கலாம்.
இப்படி சில மாணவர்களுக்கு பணம் கட்டிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மாணவர்கள் அவர்கள் விரும்பும் படிப்புக்கான பணத்தைக் கட்டி படிக்க முடியாமல் அல்லாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ‘உண்டியல்’ ஏந்தி பணம் வசூல் செய்து தந்துவிட முடியுமா? எத்தனை தலைமுறைக்கு, எத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு அப்படி செய்ய முடியும்? பிரச்னையைத் தீர்ப்பதற்கு சரியான, ஜனநாயகப்பூர்வமான வழி என்ன?
மொத்தமாக கல்வி என்பது அரசின் வசம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக தரப்பட வேண்டும். ‘இலவச கல்வி’ என்பது நமது பிறப்புரிமை. ஒவ்வொரொ நாடும், அரசும் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய உரிமை. மாறாக நடைமுறையில் கல்வி காசாக்கப்பட்டு, மிக்ஸியும், கிரைண்டரும், (தேர்தல் சமயத்தில்) குவாட்டருமே இலவசமாக வழங்கப்படுகின்றது. ’இலவச கல்வி’ என்பது இறுதி எல்லை என்றபோதிலும் நடைமுறையில் உடனடி தீர்வுக்கான சாத்தியங்கள் என்ன? 1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.
இயக்குநர் சசிக்குமார், நடிகர் சூர்யா ஆகியோர் இந்த அநீதியான கல்விக்கொள்ளைக் குறித்து வெளிப்படையாகப் பேசினால் அவர்களின் நட்சத்திர இமேஜ் காரணமாக அது கூடுதலாக கவனம் பெறுமே?! ஆனால் அவர்கள் எப்போதும் பேசமாட்டார்கள். பேசாததால்தான் அவர்கள் நட்சத்திரங்களாகவும் இருக்கின்றனர். அதனால்தான் உண்மையில் மங்கிய இந்த நட்சத்திரங்கள் சினிமா லைட்டிங்கால் பிராகசிக்கும் போலி நட்சத்திரங்களாக ஊரை மயக்குகின்றன.
கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!கல்வி என்பது இன்று என்னவாக இருக்கிறது? பணம் இருந்தால் மட்டுமே தரமான பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும். ‘தரமான பள்ளி’ என்ற சொல்லை உச்சரிக்கும்போதே நம் மனங்களில் தனியார் பள்ளிகளின் சித்திரம்தான் தோன்றுகிறது. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை. தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு கையில் காசு இல்லை. என்ன செய்வது? படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் தனது மொத்த வாழ்நாளையும் பிள்ளைகளின் படிப்புக்காக மட்டுமே அர்ப்பணிக்கிறது. தங்கள் வாழ்க்கையை அடகு வைத்தால்தான் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் என்பது கண்கூடான யதார்த்தம். இந்த நிலைமை உண்மை என்கிற அதே சமயம் இது நியாயம் இல்லை என்பதும் நமக்குத் தெரியும். ஆனாலும் எல்லோரும் தனது அடுத்தத் தலைமுறையையேனும் மேலும் ஒரு படி அதிக வசதியுள்ள வண்டியில் ஏற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய சிரமங்களை ஏற்றுக்கொள்கின்றனர். இதனால்தான் எல்.கே.ஜி.க்கு 40 ஆயிரம் என்ஜினீயரிங்குக்கு 20 லட்சம் என கணக்கு வழக்கின்றி அள்ளிக் கொட்டுகின்றனர்.
’வேற என்ன சார் பண்றது? பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சுத் தரணும்ல.. நாம காசு, பணம்தான் சேர்த்து வைக்கலை. நல்லப் படிப்பைக் கொடுத்துட்டா அதுங்க பொழைச்சுக்கும்ல…’ என்பது பொதுவான பெற்றோர் எதிர்வினை. இச்சொற்களில் இருக்கும் ’பாசம், அக்கறை’ என்பனவற்றை வடிகட்டிவிட்டுப் பார்த்தால் ‘சுயநலம்’ என்ற சொல் கிடைக்கக்கூடும். தனது சக்திக்கு மீறி அதிக முதலீடு போட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்கம் அதற்கான நியாயமான Return-ஐ எதிர்பார்க்கிறது. சமூகப் பிரச்னை, மாணவர் சங்கம், பொதுநலம், அரசியல், போராட்டம், பொதுப் பிரச்னை, கலை, இலக்கியம் என ‘காசுக்கு உதவாத’ அனைத்தையும் மாணவர்கள் செய்யும்போது பெற்றோர் மனது பதற்றமடைகிறது. ஏனெனில் இன்றைய பெற்றோர்கள் வெறும் பெற்றோர்கள் மட்டுமல்ல. அவர்கள் முதலீட்டாளர்களும் கூட. இந்த சொற்பிரயோகத்தில் கொஞ்சம் கடின தொனி இருக்கலாம். ஆனால் உண்மை அதுதானே?! ஊரைச்சுற்றி கொடுநோய் சூழ்ந்திருக்கும்போது தான் மட்டும் பாதுகாப்பாய் கரையேறிவிடலாம் என்பது சுயநலம் மிகுந்த மூட நம்பிக்கை.
ஒரு சூறையாடலைப் போல தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக்கொள்ளை நம்மை சூழ்ந்திருக்கிறது. முனியாண்டி விலாஸ் கணக்காக ஊருக்கு ஊர் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்துகிடக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியின் நில மதிப்பு, கட்டட மதிப்பு எல்லாவற்றையும் தோராயமாக கணக்கிட்டாலே கோடிகளில் வரும். எங்கிருந்து வந்தது அந்தப் பணம்? நடுத்தர வர்க்கம் தனது ரத்தம் சுண்ட உழைத்துக் கொடுத்த பணம். ஏழைப் பெற்றோர்கள் கூலி வேலை செய்து கொடுத்தப் பணம். திருப்பூரில் பனியன் ஃபேக்டரியிலும், வளைகுடா நாடுகளின் தொழிற்சாலைகளிலும் உதிரம் வற்ற உழைத்த காசு. ஒவ்வொரு பொறியியல் கல்லூரியின் செங்கல்லிலும் பெற்றோர்களின் கண்ணீர் கலந்திருக்கிறது. அதே நேரம் லஞ்சத்தில் பெருத்த அதிகார வர்க்க பெருச்சாளிகளும், பங்குச் சந்தை சூதாட்டத்தில் ‘சம்பாதித்த’ பணக்காரர்களும் தகுதியே இல்லாத தமது வாரிசுகளுக்கு பல இலட்சங்களை தூக்கி எறிந்து கல்வியை விலைக்கு வாங்குகிறார்கள். இப்படித்தான் நமது கல்வி முதலாளிகள் கல்லா கட்டுகின்றனர்.
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை
ஒரு தொழில் செய்பவன், அதற்கான நியாயமான லாபத்தை எதிர்பார்ப்பதும், பெறுவதும் சரியானதே. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த நியாயமுமின்றி லாபவெறி எடுத்து அலைகின்றன. ஒரு Vampire-ஐ போல அவர்களின் மனம், பணம் தேடி அலைகிறது. இந்த மனநிலை நிறுவனங்களோடு நிற்கவில்லை. மக்களின் மனங்களுக்கும் இந்த ‘லாபவெறி’ மடை மாற்றப்பட்டிருக்கிறது.
அதனால்தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ‘கல்விக்கொள்ளை’ என்பது அநியாய லாபமாக தோன்றவில்லை. ‘முதல் போடுறவன் லாபம் பார்க்கத்தானே செய்வான்..’ என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்து. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அநியாய லாபத்தின் மொத்த குறியீடாக சினிமா இருக்கிறது. இதில் சசிக்குமாரும், சூர்யாவும் ‘கல்வி வள்ளல்களாக’ அருள் பாலிக்கின்றனர்.
சசிக்குமாரின் ‘மாணவர் மறுமலர்ச்சித் திட்டம்’ குறித்த பத்திரிகை செய்திக் குறிப்பில் சில வி.ஐ.பி.களும் கருத்து சொல்லியிருக்கின்றனர். இயக்குநர் மணிவண்ணன், நடிகர் விதார்த், சில அரசு அதிகாரிகள் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், ‘தாமரை’ ஆசிரியருமான சி.மகேந்திரனின் கருத்தும் அதில் உண்டு. அவர், ” வசதி இல்லை என்பதற்காக இனி எந்த ஒரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்பட  கூடாது . அதற்கான முதல் முயற்சி இயக்குனர் சசிகுமாரும், கும்பகோணம் அன்னை கல்விக் குழுமமும் தொடங்கி இருக்கிறது. அத்தனை கல்லூரி மாணவர்களுக்கும் கைக்கொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.’’ என்று சொல்லியிருக்கிறார். நடிகர் விதார்த்தின் கருத்துடன் ஒத்துப் போகும் அளவுக்கு ‘முன்னேறியிருகிறது’  இந்திய கம்யுனிஸ்ட் கட்சி.
ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவரே இந்த கல்விப் பிச்சை மேனியாவில் மனதைப் பறிகொடுத்திருக்கும் போது புயலுக்கு கரை ஒதுங்குவது போல இமேஜுக்குகாக ‘சமூகப் பணிகளில்’ இறங்கும் இயக்குநர் சசிகுமார் போன்றோர் அடித்து செல்லப்படுவது ஆச்சரியமல்லவே!
_________________________________________________
- வளவன்
www.vinavu.com

கருத்துகள் இல்லை: