சனி, 29 டிசம்பர், 2012

பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் !

திருமா - ராமதாஸ்vinavu.com தர்மபுரியில் நவம்பர் ஏழு அன்று நடத்தப்பட்ட வன்னிய சாதி வெறியாட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 25-ல் வெண்மணியில் நடந்த படுகொலை நாளையொட்டி, வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்ற அடிப்படையில் புதுச்சேரியில் திருப்புவனையில் பேரணி-பொதுக்கூட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். இதற்காக 16000 துண்டறிக்கைகளும், 1100 சுவரொட்டிகளும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பிரச்சார இயக்கத்துக்கு வன்னியர்-தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள உழைப்பாளிகளிடம் கணிசமான ஆதரவு, நிதி உதவி, கிடைத்தது. இன்றைய சமூக யதார்த்தத்தில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளை அனுபவித்து வரும்  உழைக்கும் மக்கள் தனது பொது எதிரிக்கு எதிராக ஒரு வர்க்கமாகத் திரள்வதற்குத் தடையாக உள்ள சாதி உணர்வையே தூக்கியெறிந்து ஜனநாயக உணர்வைப் பெற வேண்டும் என்பதே இந்தப் பிரச்சாரத்தின் மையப் பொருளாக கொண்டு செல்லப்பட்டது.
திட்டமிட்டபடி அன்று காலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடிகளை நடுவதற்குத் தயாரான போது புதுச்சேரி திருபுவனை பகுதியிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலுள்ள சில பொறுப்பளர்கள் கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று எந்தக் காரணமும் கூறாமல் நேரடியாக தோழர்களிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர்.
தோழர்கள் பொறுமையாக அவர்களுக்கு விளக்கம் அளித்தும் கூட அவர்கள் எதையும் கேட்கவோ, விவாதிக்கவோ தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் தோழர்கள் காவல் நிலையம் சென்று புகார் செய்துள்ளனர். காவல் துறையோ, வெண்மணி பற்றி மட்டும் தான் பேச வேண்டுமென வாயடைக்கப் பார்த்தது.
இங்கு ஜனநாயகம் இல்லை என்பதற்கு இதை விட சிறந்த சான்று இருக்க முடியாது. ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன் கொடுமையை ஏவி விடுகின்றனர். எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்று கோருகின்ற விடுதலைச் சிறுத்தைகளின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பிலுள்ள பத்மநாபன்      என்பவர் 10,15 பேரைத் திரட்டிக் கொண்டு வந்து கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று அடாவடி செய்கிறார்.  பா.ம.க ராமதாசு மாநிலம் முழுவதும் சென்று ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி விட்டு, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு ஆதிக்க சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது, பணம் பறிப்பது என்று நடந்து கொள்வதாக அவதூறு பரப்பி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியினரை அணி திரட்ட முயல்கிறார். இதைப் பற்றி வி.சி கட்சியினர் மௌனம் சாதிக்கும் போது புரட்சிகர அமைப்பினர் தான், வன்னியர் சங்கம் உட்பட ஆதிக்க சாதிச் சங்கங்களைத் தடை செய், அவர்களின் சொத்துக்களைப் பறித்தெடு என்று தமிழகம் முழுவதும் இயக்கம் எடுத்து வருகின்றனர்..
இந்தக் கோரிக்கைக்கு இயக்கம் எடுக்க தயாராக இல்லாத விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர அமைப்பினரின் பொதுக்கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என அடாவடி செய்வது கொஞ்ச நஞ்சமுள்ள தங்கள் அணிகள் மத்தியில் இன்னும் அம்பலமாகி விடுவோமோ என்ற பயம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
இணையத்தில் வன்னி அரசு அவதூறு செய்வதற்கும், கீழுள்ள அணிகள் இப்படி நடந்து கொள்வதற்கும் அடிப்படை ஒன்றே தான். இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, காவல் துறை பொதுக்கூட்ட அனுமதியை ரத்து செய்து விட்டதாக தகவல் வந்துள்ளது. தடையை மீறி கூட்டம் நடைபெறும் என்று தோழர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தக் கருத்துகள் மக்களிடையே போகக் கூடாது என்பது தான் ஆதிக்க சாதி வெறியர்களின் நிலைப்பாடு. இதையே களத்தில் நின்று வி.சி அமைப்பினரும் செய்கின்றனர். அனால் பத்து நாட்களுக்கும் மேலாக உழைக்கும் மக்கள் மத்தியில் தங்கியிருந்து வன்னியர், தாழ்த்தப்பட்டவர் என அனைத்து பிரிவினர் மத்தியிலும் இந்தக் கருத்தின் அடிப்படையில் தோழர்கள் வீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அனைவரிடமும் முழுமையான ஆதரவு கிடைத்து வருகிறது. பொதுக் கூட்டத்தைத் தடுத்து விட்டால், இந்தக் கருத்தினை மக்கள் மத்தியில் செல்ல விடாமல் தடுத்து விடலாம் என்று கருதினால், அது பகற் கனவே. ஏற்கனவே சென்று கொண்டிருக்கிற இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடக்கும்.
எமது விமர்சனங்களை வி.சி கட்சிப் பொறுப்பாளர்கள் தங்களிடம்  உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பார்க்காமல், தங்களுக்கு எதிரான கருத்து என்று பார்த்தால, ஆதிக்க சாதி வெறிக்கும், இதற்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இங்கு அழுத்தமாகச் சுட்டிக்காட்டிகிறோம். சூரியனைக் கைகள் கொண்டு மறைக்க முடியாது. அடாவடியாலும் , அடக்குமுறைகளாலும் ஜனநாயகக் கருத்துகளை ஒழித்து விட முடியாது.

கருத்துகள் இல்லை: